Published:Updated:

“பகவான் சார் இருந்தாதான் படிப்போம்!” - பாசத்துக்குரிய நல்லாசிரியர்

“பகவான் சார் இருந்தாதான் படிப்போம்!” - பாசத்துக்குரிய நல்லாசிரியர்
பிரீமியம் ஸ்டோரி
News
“பகவான் சார் இருந்தாதான் படிப்போம்!” - பாசத்துக்குரிய நல்லாசிரியர்

“பகவான் சார் இருந்தாதான் படிப்போம்!” - பாசத்துக்குரிய நல்லாசிரியர்

சிறந்த ஆசிரியர் ஒருவர் பள்ளியிலிருந்து இடமாறுதல் பெற்றுப் போகிறார் என்றால், சில மாணவர்கள் கண்ணீர் மல்குவார்கள்; சிலர் ஆசிரியருக்கு அன்பளிப்புக் கொடுப்பார்கள்; இன்னும் சிலர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், ஆசிரியர் பகவானுக்கு இவை எதுவுமே நடக்கவில்லை. மாறாக, அவரைப் பள்ளிக்குள் பிடித்து இழுத்துப் போனார்கள்; `அவர் போகக் கூடாது’ என்று போராட்டம் நடத்தினார்கள்; பெற்றோருடன் வந்து `டி.சி கொடுங்க, போறோம்’ என்று தலைமை ஆசிரியரின் அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள். பிஞ்சு மாணவனிலிருந்து பெரிய பிள்ளைகள் வரை கட்டிப்பிடித்து அழுததைப் பார்த்து ஆசிரியர் பகவானும் அழ, அந்த நெகிழ்ச்சியான தருணங்கள் ஊடகங்களில் பரவின. `இப்படியோர் ஆசிரியரா’ என்று தமிழகம் மட்டுமல்ல, தேசமே வியப்புடன் பார்த்தது.

திருத்தணியிலிருந்து 60 கி.மீ தூரத்தில் சோமேஸ்வரன் மலையடிவாரத்தில் இருக்கிறது வெளியகரம் அரசு உயர்நிலைப் பள்ளி. அங்கு சென்று ஆசிரியர் பகவானைச் சந்தித்தோம். ‘‘மாணவர்களுடன் நீங்கள் இருப்பதுபோல புகைப்படம் எடுக்க வேண்டும்’’ என்று நாம் சொன்னதும் தயங்கினார். ``பசங்க ஒண்ணு கூடிட்டாங்கன்னா திரும்பவும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிடுவாங்க. `நான் நிச்சயமா போகலை’னு சமாதானம் சொல்லி வெச்சிருக்கேன்” என்றார் நம்மிடம்.

“பகவான் சார் இருந்தாதான் படிப்போம்!” - பாசத்துக்குரிய நல்லாசிரியர்

ஸ்கூல் பெல் அடித்ததும் மாணவர்கள் வீட்டுக்குப் போகாமல் எங்களைச் சூழ்ந்துகொண்டனர். ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவன் பகவானைச் சீண்டி, ``இன்னிக்கு எங்க க்ளாஸுக்கே நீங்க வரல” எனச் செல்லமாகக் கோபித்துக்கொள்ள, அவன் கன்னத்தைத் தட்டிக்கொடுத்தார் பகவான்.

வெளியகரம் பள்ளியிலிருந்து இடமாற்றம் செய்யப்படவிருக்கும் இரு ஆசிரியர்கள் ஆங்கிலப் பாடம் நடத்துபவர்கள். அவர்களில் பகவானும் ஒருவர். `பகவான் சாரை இடமாற்றம் செய்யக் கூடாது’ என்று குறிப்பாக ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் குரலே அதிகம் ஒலிக்கிறது. காரணம், பகவான் இங்கு இருந்தால் தங்களால் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சியடைய முடியும் என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். பகவான் ஆங்கில ஆசிரியராக இந்தப் பள்ளியில் நியமிக்கப் பட்ட பிறகு, மாணவர்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பகவானை வேறு பள்ளிக்கு அனுப்ப மாணவர்கள் தயாரில்லை. மாணவர்களிடம் அவர் ஆசிரியராக மட்டுமே நடந்துகொண்டதில்லை என்பதுதான் இதற்குக் காரணம்.

‘‘`எந்த விதத்துல சொன்னா நாங்க ஹோம்வொர்க் முடிச்சுட்டு வருவோம்னு தெரிஞ்சு, அதுக்கு ஏத்த மாதிரி சார் சொல்வார். சார்கிட்ட நாங்க பாடம் தொடர்பா மட்டுமில்லாம எந்த விஷயம்னாலும் டவுட் கேக்கலாம்” என்கிறான் இன்னொரு சிறுவன். மாணவர்களில் யாருக்காவது திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனால்,  உடனே தன் பைக்கிலேயே அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது... விளையாட்டு வகுப்பின்போது மாணவர்களுடன் சேர்ந்து விளையாடுவது... தங்கள் தெருவில் அல்லது வீட்டில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைப் மாணவர்களையே சொல்லச் சொல்வது... இப்படி, பகவான் நடந்துகொள்ளும் விதத்தைப் பிள்ளைகள் தங்கள் வீட்டில் சொல்லியிருக்கிறார்கள். அதனால்தான், பெற்றோர்கள் மத்தியிலும் பகவான்மீது நல்ல மரியாதை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“பகவான் சார் இருந்தாதான் படிப்போம்!” - பாசத்துக்குரிய நல்லாசிரியர்

இந்தப் பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் அடித்தட்டுக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பலரை, ஆங்கிலத்தில் பேசவைத்திருக்கிறார் பகவான். ‘‘`என்னதான் மற்ற பாடங்கள் படிச்சாலும், இங்கிலீஷ் தெரிஞ்சாதானே சார் வேலை கிடைக்கும்? இந்த ஸ்கூலுக்கு பகவான் சார் வந்தப்போ, என் பையன் ஏழாவது படிச்சிட்டிருந்தான். அவனுக்கு இங்கிலீஷே தெரியாது. மற்ற பாடங்களும் வராது. ‘சரி, படிப்புதான் வரலையே. வீட்டுக்காவது உதவியா இருக்கட்டும்’னு ஏரி வேலைக்கு அனுப்பலாம்னு இருந்தேன். பகவான் சார் என்னைக் கூப்பிட்டுத் திட்டினார். தினமும் என் புள்ளையைக் கூப்பிட்டு உட்காரவெச்சு அவனுக்குச் சொல்லிக் கொடுப்பார். அப்புறம் நல்லா படிக்க ஆரம்பிச் சுட்டான். பத்தாங்கிளாஸ்ல அவனை இங்கிலீஷ்ல 60 மார்க் எடுக்கவெச்சார். இப்போ ப்ளஸ் ஒன்ல சயின்ஸ் குரூப் எடுத்து இங்கிலீஷ் மீடியத்துல படிக்கிறான். பகவான் சார் மட்டும் இந்த ஸ்கூல்ல இருந்தா, எங்க கிராமத்துப் புள்ளைங்க இன்னும் நல்லா முன்னுக்கு வருவாங்க. ப்ளீஸ்... அவரை மட்டும் போகவேணாம்னு சொல்லிடுங்க சார்” என்று சிறுபிள்ளைபோல அழுகிறார் விஜயலட்சுமி என்ற பெண்மணி.

‘‘நாள் பூரா கல் உடைச்சுட்டு, ராத்திரி வீட்டுல அக்கடான்னு வந்து உட்காருவேன். எம்புள்ள வீட்ல சத்தம்போட்டு இங்கிலீஷ் படிக்கிறதைக் கேட்கும்போது என் உடம்பு வலியெல்லாம் போயிரும். சந்தோஷத்துல சில நேரம் கண்கலங்கியிருக்கேன். எத்தனை குடும்பத்துப் புள்ளைங்க பகவான் சாரால இன்னிக்கு இங்கிலீஷ்ல பாஸாகியிருக்கு தெரியுமா? அவர் எங்க கிராமத்துப் பள்ளிக்கூடத்தைவிட்டு போகக் கூடாது சார்” எனக் கண்கலங்கியபடியே இருகரம் கூப்புகிறார் ராஜா என்பவர்.

பகவானுக்கு இடமாறுதல் உறுதியாகிவிட்டது என்பது குறித்து மற்ற ஆசிரியர்கள் பேசிக்கொண்டிருந்ததை, செல்வி என்கிற மாணவி கவனித்திருக்கிறார். உடனே அந்த மாணவி, ``பகவான் சார் இனிமே நம்ம ஸ்கூலுக்கு வர மாட்டாராம். அவர் வேற ஸ்கூலுக்குப் போறாராம். இன்னிக்குதான் அவருக்கு இங்கே கடைசி நாளாம்” என ஒவ்வொரு வகுப்பிலும் அழுதபடியே போய்ச் சொல்ல, திபுதிபுவென ஓடி பகவானைச் சூழ்ந்துகொண்ட மாணவர்கள், பல மணி நேரத்துக்கு அவரை விடவில்லை. ‘‘நான் போகவில்லை’’ என அவர் சமாதானம் கூறிய பிறகு எல்லோரும் கலைந்துபோனாலும், அடுத்த நாள் பலரும் தங்கள் பெற்றோர்களுடன் வந்து அழுது புரண்டனர். ‘‘பகவான் போயிட்டார்னா டி.சி வாங்கிக்கிறோம்” என்று அவர்கள் போராடியதால், நிலைமை சீரானபிறகு பகவானை இங்கிருந்து விடுவிக்குமாறு சொல்லியிருக்கிறார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர். 

“பகவான் சார் இருந்தாதான் படிப்போம்!” - பாசத்துக்குரிய நல்லாசிரியர்

திருத்தணி அருகே உள்ள பொம்மராஜுப்பேட்டை, பகவானின் சொந்த ஊர். அப்பா நெசவுத் தொழிலாளி. உடன்பிறந்தவர்கள் நான்கு பேர். அண்ணன் பிளம்பர். அக்கா பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். குடும்ப வறுமையால், முதல் இரு பிள்ளைகளை அப்பாவால் படிக்கவைக்க முடியவில்லை. அண்ணன் வேலைக்குப் போன பிறகு குடும்பம் சற்று சீரடைய, அதனால் தொடர்ந்து படித்திருக்கிறார் பகவான். முதல் தலைமுறைப் பட்டதாரியான பகவானுக்கு வேலை கிடைத்தபிறகுதான், சிறிய அளவில் கல் வீடு கட்டி சற்று மேலே வந்திருக்கிறது பகவானின் குடும்பம்.

``குடும்பக் கஷ்டத்துல படிச்சு வந்தவன் நான். இவங்களும் அப்படித்தான். இவங்களை என் தம்பி, தங்கச்சி மாதிரி பார்த்தேனே தவிர, மாணவர்களா பார்க்கலை. பெற்றோர்களுக்கு தன் புள்ள இங்கிலீஷ் பேசணும்னு அவ்வளவு ஆசை இருக்கும். அதுவும், கிராமத்துப் பெற்றோர்களுடன் இது அதிகமா இருக்கும். நம்ம பிள்ளைங்க இங்கிலீஷ்ல பேசுறாங்க, இங்கிலீஷ் படிக்கிறாங்கனு அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். இந்தப் பிள்ளைங்க மனசுல நான் எப்படி இருந்திருக்கேன்னு இப்போதான் எனக்கே தெரியுது’’ என்று கலங்குகிறார் பகவான்.

பாசத்தின் வழியே படிப்பைப் புகட்டும் பகவான், நல்லாசிரியருக்கான சிறந்த உதாரணம்!

- தமிழ்ப்பிரபா
படங்கள்: ப.சரவணகுமார்

இடமாற்றம் ஏன்?

தி
ருத்தணி அருகே உள்ள அருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளிக்குத்தான் பகவானுக்கு இடமாற்றல் கிடைத்திருக்கிறது. ஒரு பள்ளியில் ஆசிரியர்கள்-மாணவர்கள் விகிதாச்சாரப்படி அரசு கணக்கு எடுக்கும். மாணவர்கள் எண்ணிக்கை குறையும்போது, அந்தப் பள்ளியில் ஆசிரியர்களையும் குறைப்பார்கள். இந்த நடவடிக்கையில், கடைசியாகச் சேர்ந்த ஆசிரியர்களைத் தான் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவார்கள். அதன் அடிப்படையிலேயே பகவான் இடமாற்றம் செய்யப் படுகிறார். இடமாற்றம் செய்தால், பதிலுக்கு வேறு ஆசிரியர்கள் வரமாட்டார்கள் என்பதும் போராட்டத்துக்கு ஒரு முக்கியமான காரணம். ‘‘மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதைப் பார்க்காமல், ஆசிரியர்களைக் குறைப்பது நல்லதல்ல’’ என இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் கல்வியாளர்கள்.

ஆனால், ‘‘இடமாற்றம், ஆசிரியர் பணியில் இயல்பானதுதான். எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பகவானின் இடமாற்றத்தை ரத்து செய்தால், இதைக் காரணமாக வைத்து தமிழகம் முழுக்க இடமாற்றம் செய்யப்பட்ட பலரும் வழக்குத் தொடுக்க நேரிடும். இதனால் பெரிதும் குழப்பம் வரும். மக்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்கிறார்கள் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள்.