Published:Updated:

அநாதை சடலங்கள் அடக்கம்... தொழுநோயாளிகள் பராமரிப்பு! - வேலூர் இளைஞரின் சேவை

அநாதை சடலங்கள் அடக்கம்... தொழுநோயாளிகள் பராமரிப்பு! - வேலூர் இளைஞரின் சேவை
அநாதை சடலங்கள் அடக்கம்... தொழுநோயாளிகள் பராமரிப்பு! - வேலூர் இளைஞரின் சேவை

அனைவருக்கும் சகிப்புத்தன்மை இருக்க வேண்டும். பெற்றோரைத் தயவுசெய்து வீட்டிலிருந்து வெளியேற்றிவிடாதீர்கள். நாளைக்கு இதே நிலைமைதான் நமக்கும்.

பெற்றெடுத்த பிள்ளைகளே பெற்றோரை உதறித்தள்ளி வீட்டைவிட்டுத் துரத்தும் இந்தக் காலத்தில் முகமறியாத தொழுநோயாளிகள், ஆதரவற்றோரை அன்புடன் அரவணைப்பவர்கள் சிலர் இருப்பதால்தான் என்னவோ இன்னும் மனிதநேயம் மரித்துப் போகாமல் இருக்கிறது. அதுபோன்ற இளைஞர் ஒருவர்தான் வேலூர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

ஒரு நாள்... வேலூர் அண்ணாசாலையில் உள்ள சாக்கடையில் 95 வயது மூதாட்டி தடுமாறி விழுந்து உயிருக்குப் போராடினார். மூதாட்டியைக் காப்பாற்றாமல் கல்நெஞ்சம் கொண்ட சிலர் செல்போனில் படம் எடுத்து `லைக்’ வாங்க சோஷியல் மீடியாவில் பகிர்ந்தனர். வேறு சிலர் சாக்கடையில் இறங்கலாமா... வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்க, அங்குவந்த இளைஞர் ஒருவர் திடீரென சாக்கடையில் இறங்கி மூதாட்டியைத் தூக்கி மார்போடு தாங்கிப் பிடித்தார். அவர் வேறு யாரும் இல்லை. சமூக சேவகரான மணிமாறன்தான் அந்த நபர். 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவர், `அன்னை தெரசா’வின் சமூக சேவையால் ஈர்க்கப்பட்டு 17 ஆண்டுகளாகத் தொழுநோயாளிகள், ஆதரவற்றோர்களுக்கு சேவைசெய்து வருகிறார். அதுமட்டுமல்ல, அநாதையாக அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் கிடக்கும் சடலங்களை மீட்டு முறைப்படி சடங்குகள் செய்து அடக்கம் செய்கிறார். சுயமாக இயங்க முடியாத கை, கால்களை இழந்த பலருக்கும் உதவிக்கரம் நீட்டுகிறார். இதற்காக மத்திய - மாநில அரசுகளிடமிருந்து விருதுகளையும் பெற்றுள்ளார் மணிமாறன். கேரளா பலத்த மழையால் வெள்ளக்காடாக மாறியபோது, லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து உணவு, உடைகளின்றி தவித்தனர். தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து வழங்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் கேரள மக்களின் துயர் துடைத்தது. அந்த நேரத்தில் தன்னுடைய பைக்கை அடகுவைத்து தன்னால் முடிந்த தொகையைத் திரட்டி கேரளாவுக்கு நிவாரணமாக வழங்கினார், மணிமாறன்.
 

 நம்மிடம் மனம்விட்டுப் பேசிய அவர், ``என்னுடைய சொந்த ஊர் திருவண்ணாமலை தலையாம் பள்ளம் கிராமம். ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். நான் சிறுவயதாக இருக்கும்போது என்னுடைய பெற்றோர் நிறைய பேருக்கு அன்னதானம் வழங்கினர். அதைப் பார்த்த பின், மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை எனக்கும் வந்துவிட்டது. தொழுநோயாளிகளுக்குத் தொண்டுசெய்யும் எண்ணம் வந்ததற்குக் காரணம், `அன்னை தெரசா’தான். நாங்கள், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழுநோயாளிகளுக்கு சேவை செய்துள்ளோம். 1,500-க்கும் அதிகமானோரைக் குணமாக்கிப் பழைய நிலைமைக்குக் கொண்டு வந்துள்ளோம். ஆதரவற்ற முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், குழந்தைகள் என ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரை மீட்டுள்ளோம். தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களுக்கும் சென்று சமூக சேவைகளைச் செய்கிறோம்.  
2008-ல் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமைச் சந்தித்தபோது, `தனி மரம் தோப்பு ஆகாது’ என்றார். அதன்பிறகு, `உலக மக்கள் சேவை மையத்தைத் தொடங்கினோம். இந்த அமைப்பு மூலம் இதுவரை ஒருவரிடம்கூட நிதி வாங்கியதில்லை... உதவியும் கேட்டதில்லை. மருத்துவமனைகளில் அநாதையாக இருந்த 850 உடல்களை மீட்டு அடக்கம் செய்துள்ளோம். சமூக சேவைக்காக 50-க்கும் அதிகமான `விருதுகள்’ எனக்கு வழங்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் பெருமைக்காக நான் சொல்லிக்கொள்ளவில்லை. அனைவருக்கும் சகிப்புத்தன்மை இருக்க வேண்டும். பெற்றோரைத் தயவுசெய்து வீட்டிலிருந்து வெளியேற்றிவிடாதீர்கள். நாளைக்கு இதே நிலைமைதான் நமக்கும்’’ என்றார் வேதனையோடு!

நம்மிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, மருத்துவமனை சவக்கிடங்கில் அநாதையாகக் கிடந்த மூன்று ஆண் சடலங்களை போலீஸ் அனுமதி பெற்று அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டார், மணிமாறன். இறந்தவர்களின் வாரிசுபோல் பால் ஊற்றி, சடங்குகளைச் செய்து பாலாற்றில் சடலங்களைப் புதைத்ததைப் பார்க்க முடிந்தது. எத்தனை பேருக்கு இந்த மனிதநேயம்..? உண்மையில் பாராட்டுக்குரியவரே மணிமாறன்!
 

அடுத்த கட்டுரைக்கு