Published:Updated:

தோல் நோயால் புறக்கணித்த பெற்றோர்! - வாழ்க்கை நடத்த வங்கிக் கடன் கேட்டு வந்த வாலிபரின் சோகம்

தோல் நோயால் புறக்கணித்த பெற்றோர்! - வாழ்க்கை நடத்த வங்கிக் கடன் கேட்டு வந்த வாலிபரின் சோகம்
தோல் நோயால் புறக்கணித்த பெற்றோர்! - வாழ்க்கை நடத்த வங்கிக் கடன் கேட்டு வந்த வாலிபரின் சோகம்

 சிறு வயதிலே வந்த தோல் நோயினால், பெற்றோரும் உடன் பிறந்தோரும் கைவிட்ட நிலையில், உழைத்து உயிர் வாழ நினைக்கும் இளைஞர் ஒருவர் வங்கிக் கடன் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தது மனதை உருக்கியது.

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ளது வளநாடு கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த வாலிபர் சுரேஷ் (30). சிறு வயதிலேயே தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட இவரை பெற்றோர்கள் புறக்கணித்த நிலையில், அவரது பாட்டி காஞ்சனாவின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். இதனால், தங்களது பெற்ற கடன் தீர்ந்துவிட்டதாகக் கருதிய சுரேஷின் பெற்றோர், அங்கிருந்து நகர்ப் பகுதிக்கு குடிபெயர்ந்து விட்டனர். 

இந்நிலையில், தோல் நோய் உடல் முழுவதும் பரவிய நிலையில், சுரேஷை பராமரித்துவந்த பாட்டி காஞ்சனாவும் சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார். இதனால் பெற்றோர், உடன் பிறந்தோர் என எல்லா உறவுகளாலும் கைவிடப்பட்ட நிலையில் தனித்து விடப்பட்டார் சுரேஷ். ஒருபுறம் நோயுடனும், மறுபுறம் புறக்கணிக்கப்பட்ட உறவுகளுக்கு மத்தியிலும் உயிர் வாழ்ந்து காட்டும் முயற்சியில் இறங்கினார் சுரேஷ். தன்னிடம் இருந்த மூலதனமான சிறு தொகையைக் கொண்டு பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தின்பண்டம் விற்பனை செய்ய சிறு பெட்டிக்கடை வைத்துள்ளார். இதனிடையே சிலரின் உதவியால் ஊனமுற்றவர்களுக்கு அரசு வழங்கும் உதவித் தொகையும் மாதந்தோறும் வாங்கிவருகிறார்.

இந்நிலையில், நடமாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட தனக்கு, 3 சக்கர வண்டியும், தனது சிறு பெட்டிக் கடையை மேம்படுத்த வங்கிக் கடன் உதவியும் கேட்டு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். அவரது மனு மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த மாவட்ட ஆட்சியர், சுரேஷுக்கு மதிய உணவு வழங்கி அனுப்பிவைத்தார். ஆரோக்கியமான உடலைக் கொண்டவர்கள்கூட அடுத்தவரை ஏமாற்றிப் பிழைக்க நினைக்கும் இக்காலத்தில், நடமாட முடியாத நிலையிலும் உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் வங்கிக் கடன் கேட்டு வந்த இந்த வாலிபரின் மனஉறுதி, கூட்ட அரங்கில் கூடியிருந்தவர்கள் மனதை உருகச்செய்தது.