Published:Updated:

முதல் திருநங்கை நர்சிங் மாணவியின் கல்லூரி வாழ்க்கை எப்படியிருக்கிறது!?

முதல் திருநங்கை நர்சிங் மாணவியின் கல்லூரி வாழ்க்கை எப்படியிருக்கிறது!?
முதல் திருநங்கை நர்சிங் மாணவியின் கல்லூரி வாழ்க்கை எப்படியிருக்கிறது!?

ர்ஸிங் படிப்புக்காக விண்ணப்பித்திருந்தவர் தமிழ்ச்செல்வி. அவர் திருநங்கை என்கிற காரணத்தினால் அவருடைய விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்துப் போராடி வழக்குத் தொடர்ந்து தனக்கான உரிமையைப் பெற்றார், தமிழ்ச்செல்வி. தற்போது, வெள்ளூரிலுள்ள அரசு நர்ஸிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். அவரிடம் பேசினோம்.

`வேலூர் மாவட்டத்திலுள்ள புளியங்கண்ணுதான் என் சொந்த ஊர். எனக்கு இப்போ இருபத்து இரண்டு வயசாகுது. என்னுடைய சின்ன வயசிலேயே என் அப்பா இறந்துட்டாங்க. அம்மாதான் கூலி வேலைக்குப் போய் என்னையும், தங்கச்சியையும் படிக்க வைச்சாங்க. நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது என் உடம்புல ஏதோ ஒரு மாற்றத்தை உணர்ந்தேன். பொம்பளை புள்ளைங்க பண்ற விஷயங்களைப் பண்ணணும்னு தோண ஆரம்பிச்சது. வளையல் மாட்டிக்கணும், பொட்டு வைச்சிக்கணும்னு ஆசையா இருக்கும். ஆனாலும், மத்தவங்ககிட்ட சொன்னா எப்படி எடுத்துக்குவாங்கங்குற பயத்தில் அமைதியாவே இருந்துடுவேன். அப்பப்போ என் அம்மாகிட்ட சொல்லுவேன். அவங்களும் அப்படி நடந்துக்காதடான்னு திட்டியும், அடிச்சும் பார்த்தாங்க. என் மனசு மாறவே இல்லை. பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கிற வரைக்கும் யார்கிட்டேயும் என் பெண் தன்மையை வெளிக்காட்டவே இல்ல. அமைதியா எல்லாரிடமிருந்தும் ஒதுங்க ஆரம்பிச்சேன். ஸ்கூலுக்குப் போனா கூட தனியாவேதான் இருப்பேன். அதுக்கு அப்புறமாதான் என்னைப் புரிஞ்சிகிட்டு எங்கம்மா எனக்கு அறுவைசிகிச்சை பண்ணி வைச்சாங்க.

ப்ளஸ் டூ முடிச்சதும் `பாராமெடிக்கல்' படிக்கிறதுக்காக விண்ணப்பிச்சிருந்தேன். அரசுக் கல்லூரியில் கிட்டத்தட்ட இரண்டு வருஷமா எனக்கு சீட் கிடைக்கலை. திருநங்கைங்குறதுனால என் அப்ளிகேஷனை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. வழக்குத் தொடர்ந்து பலகட்டப் போராட்டத்துக்குப் பிறகு, வெள்ளூரிலுள்ள ஒரு தனியார் காலேஜில் எனக்கு சீட் கிடைச்சது.

அந்த காலேஜ்ல இருந்து எங்க வீடு கிட்டத்தட்ட 100கிமீ தூரம். வேற வழியே இல்லாம தினமும் காலேஜூக்குப் போய்ட்டு வர்றேன். அம்மா கூலி வேலைக்குப் போய்தான் என்னைப் படிக்க வைக்குறாங்க. ஆரம்பத்துல அரசு கல்லூரியில் இடம் கிடைக்கலைன்னு தனியார் காலேஜ்ல ஃபீஸ் கட்டி என்னைப் படிக்க வைச்சதும் அம்மாதான். தொடர்ந்து எங்களால் ஃபீஸ் கட்ட முடியாதுங்குறதுனால வழக்குத் தொடர்ந்தோம். நான் ஏற்கெனவே தனியார் கல்லூரியில் முதலாமாண்டு முடிச்சிட்டேங்குறதுனால இப்போ படிக்குறதுல எந்தச் சிரமும் இல்ல.

இயல்பாவே நான் நல்லாப் படிப்பேன். என் லட்சியம் முழுக்க நல்லாப் படிச்சு, வேலைக்குப் போய் என் அம்மாவை நல்லாப் பார்த்துக்கணுங்குறது மட்டும்தான். இப்போ தினமும் காலேஜ் வந்துட்டுப் போகிறதுக்கே நூறு ரூபாய் செலவாகுது. இதுக்காகவே மாசம் 3000 ரூபாயை ஒதுக்கி வைக்க வேண்டியிருக்கு. கட்டிட வேலை பார்க்குற எங்க அம்மாவால அந்தப் பணத்தைச் சம்பாதிக்க எவ்வளவு சுமையைத் தாங்க வேண்டியிருக்கும்னு எனக்குப் புரியுது. 

ஆரம்பத்துல என்னைப் பார்த்துட்டு என்னுடைய ஆசிரியர்கள் எல்லாம் மிங்கிள் ஆகலை. போகப்போக இயல்பாகிட்டாங்க. தனியார் கல்லூரியில் படிக்கும்போதிலிருந்தே என் கிளாஸ் பிள்ளைங்க என்கூட குளோஸாகத்தான் இருப்பாங்க. இங்கேயும் அப்படித்தான். எனக்குன்னு சில ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. அதே மாதிரி, எப்போ நான் சின்னத் தப்பாச்சும் பண்ணுவேன்னு எல்லோரும் எதிர்பார்த்துட்டு இருக்காங்க. ஏன்னா, அதைக் காரணம்காட்டி என்னைக் கல்லூரியிலிருந்து விரட்டிடலாம்ல'' என்றவர் சில நேரம் மௌனத்துக்குப் பின் தொடர்ந்தார்.

``என் அம்மாவை நல்லாப் பார்த்துக்கிறதுக்கு இந்தப் படிப்பு ரொம்பவே அவசியம். நான் திருநங்கைங்குற ஒரே ஒரு காரணத்துக்காக என் அம்மாவைத் தண்டிக்காதீங்க. அவங்களுக்கு நிறைய கனவு இருக்கு. படிப்பைத் தவிர எனக்கு எதுவும் தேவையில்லை. ஆனா, நீங்க என்னை எப்போ அனுப்பலாம்னு பார்த்துட்டே இருக்கிறது நான் விரும்பிப் படிக்கிற படிப்பையும் தொடர முடியாதோங்குற எண்ணத்தைக் கொடுக்குது. தினந்தினமும் பயத்தோடதான் காலேஜ் வந்துட்டுப் போய்ட்டு இருக்கேன்' என்றார்.