Published:Updated:

தமிழகம் முழுவதும் ஓரணியில் திரண்ட அனைத்து கட்சி தொழிலாளர்கள் (படங்கள்)

தமிழகம் முழுவதும் ஓரணியில் திரண்ட அனைத்து கட்சி தொழிலாளர்கள் (படங்கள்)
தமிழகம் முழுவதும் ஓரணியில் திரண்ட அனைத்து கட்சி தொழிலாளர்கள் (படங்கள்)

திருப்பூர் : முறைசாரா தொழிலாளர்களுக்கான நலவாரியத்தின் செயல்பாட்டை முடக்கும் வகையில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதை மாற்ற வலியுறுத்தி, தமிழகத்திலுள்ள அனைத்து கட்சி தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் ஓரணியில் திரண்ட அனைத்து கட்சி தொழிலாளர்கள் (படங்கள்)

விவசாயிகள், மீனவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், முடிதிருத்துவோர், தையல் தொழிலாளர்கள் என்று பல்வேறு அமைப்பு சாரா தொழில் செய்பவர்களுக்கென்று தனித்தனியாக நல வாரியங்களை அமைத்துள்ளது தமிழக அரசு. இந்த அமைப்பில் உறுப்பினர்களாக சேர்பவர்களுக்கு அரசிடம் இருந்து ஓய்வூதியம், மகப்பேறு கால உதவி, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, கலைஞர் காப்பீட்டு திட்டம், பணிக் காலத்தில் இறந்தால் நிவாரணத்தொகை உள்பட பல்வேறு நலஉதவிகள் கிடைக்கின்றன.

இந்நிலையில், தற்போது இந்த நலவாரியங்களில் இனிமேல் உறுப்பினர் சேர்ப்பது, பண உதவி பெறுவது என அனைத்து விசயங்களுக்கும் தொழிலாளர்கள் மட்டுமே நேரடியாக வர வேண்டும், தொழிற்சங்கங்களை அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு காரணமாக கோடிக்கணக்கான முறைசாரா தொழிலாளர்கள் நலவாரியப் பயன்கள் பெறுவது கடினமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அன்றாடம் உழைத்துப் பிழைத்து வரும் முறைசாராத் தொழிலாளர்கள் பெயர் பதிவு செய்வதற்குக்கூட நாள் கணக்கில் நலவாரிய அலுவலகங்களுக்கு அலைய நேரிடும், தொழிற்சங்கங்கள் அந்த பணியைச் செய்யும்போது தொழிலாளர்களுக்கு உதவியாக இருக்கிறது.

தமிழகம் முழுவதும் ஓரணியில் திரண்ட அனைத்து கட்சி தொழிலாளர்கள் (படங்கள்)

அதேசமயம் நலவாரிய செயல்பாட்டில் உள்ள சில முறைகேடுகளைக் காரணம் காட்டி ஒட்டுமொத்த நடைமுறையையும் அரசு மாற்றி அறிவித்துள்ளது. இதன் மூலம் தொழிற்சங்க ஜனநாயகம், தொழிற்சங்க உரிமை முடக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு அதிகாரிகளின் தயவில், தொழிலாளர்கள் நலவாரிய பலன்களை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை. இதனால், லஞ்சம், ஊழல் பெருகவும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு முறைசாரா தொழிலாளர்களுக்கு மிகப்பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

இதைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவை, திருப்பூரில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. திருப்பூரில் தியாகி குமரன் நினைவகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நலவாரிய செயல்பாட்டை முறையாக செயல்படுத்த வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப்., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., பி.எம்.எஸ். ஆகிய மத்திய சங்கங்கள் சார்பில் ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

மதுரை ஆர்ப்பாட்டம்:

இதே கோரிக்கையை வலியுறுத்தி மதுரையில், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., தொ.மு.ச. ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்து அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழகம் முழுவதும் ஓரணியில் திரண்ட அனைத்து கட்சி தொழிலாளர்கள் (படங்கள்)

மதுரையில் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. தெய்வராஜ், பிச்சை, ஏ.ஐ.டி.யு.சி. நந்தாசிங், முத்தையா, ஐ.என்.டி.யு.சி. சார்பில் குமார், குருசாமி, தொ.மு.ச. சார்பில் அல்போன்ஸ் ராஜா, மார்சல் முருகன், பொன்.கிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். நுற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கலெக்டர் அன்சுல்மிஸ்ராவிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஓரணியில் திரண்ட அனைத்து கட்சி தொழிலாளர்கள் (படங்கள்)

அதில், "மதுரை மாவட்டத்தில் மட்டும் விவசாயத் தொழிலாளர் நலவாரியம்,

##~~##
கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம், ஆட்டோ மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுனர் நல வாரியம், பனைமரத் தொழிலாளர் நல வாரியம்,  கைத்தறி மற்றும் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் நல வாரியம், தூய்மை பணிபுரிவோர் நல வாரியம், உலாமாக்கள், கோவில் பூசாரிகள் நல வாரியம், நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் போன்ற வாரியங்களில் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ளனர்.
கடந்த 15 ஆண்டு காலமாக படிப்படியாக அவர்கள் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். இந்த நிலையில், இவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு மறைமுக முயற்சியில் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். பதிவைப் புதுப்பிக்கக்கூட வயதானவர்களை நேரில் வரச் சொல்லி அவதிப்படுத்துகிறார்கள். இந்த நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
-கே.கே.மகேஷ், ச.ஜெ.ரவி
படங்கள்:
ஆர்.எம்.முத்துராஜ்