Published:Updated:

குரலிலே தெரிவது தேவதை! - கோமதி

குரலிலே தெரிவது தேவதை! - கோமதி
பிரீமியம் ஸ்டோரி
குரலிலே தெரிவது தேவதை! - கோமதி

நேசக்காரிகள்

குரலிலே தெரிவது தேவதை! - கோமதி

நேசக்காரிகள்

Published:Updated:
குரலிலே தெரிவது தேவதை! - கோமதி
பிரீமியம் ஸ்டோரி
குரலிலே தெரிவது தேவதை! - கோமதி

“விழிச்சவால் உள்ள ஒருத்தருக்காகப் பாடம் படிச்சுக்காட்டி, அவங்களுக்காகப் பரீட்சை எழுதி, அவங்களுக்கு அரசாங்க வேலை கிடைச்சு சந்தோஷமா நடந்து போறதப் பார்த்திருக்கீங்களா?” எனச் சொல்லும் கோமதியினால் பயன்பெற்றவர்கள் பலர். விழிச்சவால் கொண்ட நிறைய பேர் கோமதியின் உதவியினால் படித்து, பட்டம் பெற்று ஆசிரியர்களாகவும் வங்கி அதிகாரிகளாகவும் அரசாங்கப் பணிகளிலும் இருக்கின்றனர்.

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக விழிச்சவால் உள்ளவர்களுக்குப் பாடம் படித்துக்கொடுப்பது, அவர்களுக்காகத் தேர்வு எழுதுவது, அவர்களுக்குப் பாடம் படித்துக்காட்டவும், தேர்வு எழுதவும் எண்ணம் இருப்பவர்களைக் கண்டறிந்து ஒருங்கிணைப்பது, அலைபேசியிலேயே ட்யூஷன் கற்றுத் தருவது எனத் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்.

“ப்ளஸ் டூ படிச்சுட்டிருந்தபோது ஃப்ரெண்ட்ஸோட பஸ்ல போயிட்டிருந்தோம். அப்போ ஒரு பாடப்புத்தகத்தை எடுத்துப் படிச்சுட்டிருந்தப்போ, என் பக்கத்துல இருந்த ஒருத்தர், `கொஞ்சம் சத்தம் கூட்டிப்படிங்க... நானும் கேட்டுக்கிறேன்'னு சொன்னாரு. அவர் பார்வையற்றவர். அந்தத் தருணம்தான் என்னை இவங்களுக்காக வொர்க் பண்ண வெச்சது” - தான் ஆரம்பித்த இடத்தை நினைவுகூர்கிறார் கோமதி.

குரலிலே தெரிவது தேவதை! - கோமதி

விழிச்சவால் உள்ளவர்களுக்குப் பாடப் புத்தகங்கள் தொடர்பான வழிகாட்டுதல் மட்டுமன்றி, இன்னபிற நூல்களையும் அவர்களிடம் அறிமுகப்படுத்துகிறார் கோமதி. கடந்த வருட இறுதியில் வெளியாகி வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பெரியார் அன்றும் இன்றும்’ நூலை ஒலி வடிவாகப் பதிவு செய்தார் கோமதி. சுமார் 1000 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை 13 பெண்களை ஒருங்கிணைத்து, அவர்களின் உதவியுடன் 86 மணிநேரம் கொண்ட ஒலிப் புத்தகமாகக் கொண்டுவந்து விழிச்சவால் கொண்ட பல நூறு பேருக்குப் பெரியாரின் கருத்துகளைச் சேர்த்திருக்கிறார்.

“நம் நாட்டுல தொழில்நுட்பம் எவ்ளோ வளர்ந்துடுச்சு. ஆனா, விழிச்சவால் உள்ளவங்களுக்குப் படிக்க, சரியான பிரெயில் சிஸ்டம் இல்ல. இருக்கிற அரைகுறை சிஸ்டத்துக்குக் கீழேயும் ரொம்ப ரொம்பக் குறைவான புத்தகங்கள்தான் இருக்கு. அதுவும் ஆங்கில எழுத்துகள் கொண்ட புத்தகங்கள் தான் இருக்கு. தமிழ்ல இன்னும் குறைவு. அரசு கவனத்துக்கு இதையெல்லாம் எப்படிக் கொண்டு போறதுன்னே தெரியல” என வருந்துகிறார் கோமதி.

ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் கோமதியின் ‘வீக் எண்டு புரோகிராம்’ பல ஆண்டுகளாகவே விழிச்சவால் கொண்டவர்களுடன் நேரம் செலவிடுவது மட்டுந்தான். அதோடு, நிறைய நண்பர்களுக்கு இதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் சொல்லி அழைத்துச் செல்கிறார். ஐ.டி நண்பர்களுடன் இணைந்து, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விழிச்சவால் உள்ளவர்களின் வாசிப்பையும், அவர்கள் தேர்வுக்குத் தயாராவதையும் எளிமைப்படுத்தும் பணியில் இருக்கிறார். இதற்கிடையில், விழிச்சவால் உள்ளவர்களுக்கு ‘அம்பேத்கர் அன்றும் இன்றும்’ புத்தகத்தை ஒலிப்புத்தகமாக மாற்றும் பணியிலும் இருக்கிறார் கோமதி.

கடந்த சில ஆண்டுகளில் கடன் தொல்லை யால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் பிள்ளைகளின் கல்வித் தேவையை ஒருங்கிணைக்கும் பணியிலும் ஈடுபடுகிறார் கோமதி. தகப்பன் இறந்துபோன விவசாயக் குடும்பங்களிலிருந்து இதுவரை 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வியைத் தொடர்ந்ததில் கோமதிக்கு முக்கியப் பங்குண்டு.

“அபிராமி திரையரங்கில் தொழிலாளியாக அப்பா வேலை பார்த்தார். ரொம்ப வைராக்கியமாதான் படிச்சு வளர்ந்தேன். பார்வை இருக்கிற எனக்கே நிறைய கஷ்டம் இருந்ததுன்னா, பணமும் இல்லாம, பார்வையும் இல்லாம எவ்ளோ மாணவர்கள் கஷ்டப்படுவாங்க. அவங்களுக்கு என்னாலே முடிஞ்ச அளவுக்கு உதவுறேன்” எனச் சொல்லிச் சிரிக்கும் அந்த எளிமையில் மிளிர்கிறது மனிதம் என்கிற சொல்லுக்கான பொருள்.
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- தமிழ்ப்பிரபா,  படம் : ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism