அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

சாதி அடையாளம் துறப்பு... நல்லதா, கெட்டதா?

சாதி அடையாளம் துறப்பு... நல்லதா, கெட்டதா?
பிரீமியம் ஸ்டோரி
News
சாதி அடையாளம் துறப்பு... நல்லதா, கெட்டதா?

கேள்விக்குறியாகும் சமூக நீதி!

‘வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், இரட்டைமலை சீனிவாசன் பேட்டை, கதவு எண் 25 என்ற முகவரியில் வசிக்கும் திருமதி ம.ஆ.சிநேகா, க/பெ கி.பார்த்திபராஜா என்பவர், எந்த சாதி மற்றும் மதம் அற்றவர் என்று சான்றளிக்கப்படுகிறது.’ - வட்டாட்சியர், திருப்பத்தூர். இந்த இரண்டு வரிச் சான்று நம் மொத்த சமூகத்தையும் உலுக்கியெடுத்திருக்கிறது. ஒருபக்கம் சாதி, மதம் பெருமை பேசும் கட்சிகள் அனலில் தகிக்கின்றன. மறுபக்கம் பாராட்டுகளைக் குவிக்கிறார்கள் மக்கள். டீக்கடை தொடங்கி சமூகவலைதளங்கள்வரை இதே விவாதம்தான். அதேசமயம், ‘உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். இதன் எதிர்விளைவுகளையும் சேர்த்தே சிந்தியுங்கள்’ என்கிற பக்குவமும் அக்கறையும் கவலையும் கொண்ட சமூகநீதிக்கான குரல்களும் எழுகின்றன.

பெரும்பாலும், முற்போக்கான எந்தவொரு சிந்தனையும் தமிழகத்திலிருந்து முளைத்தெழுவது தான் வாடிக்கை. வரலாறும்கூட. அந்த வகையில் முன்னோடியாக நிற்கிறது, ‘சாதி மற்றும் மதம் அற்றவர்’ என்கிற இந்தச் சான்றிதழ். திருப்பத் தூரைச் சேர்ந்தவர் சிநேகா. வழக்கறிஞர். சினேகாவை பள்ளியில் சேர்த்தபோதே சாதி, மத அடையாளங்களைக் ‘கொடுக்காமல்தான் சேர்த்துள்ளனர் பெற்றோர். மற்ற இரு சகோதரிகளான மும்தாஜ் சூர்யா, ஜெனிஃபர் ஆகியோருக்கும் அப்படியே.  சிநேகா, மும்தாஜ் சூர்யா, ஜெனிஃபர் பெயர்களைக் கவனித்தீர்களா... ஒரே வீட்டுக்குள் மும்மதப் பெயர்கள்!

சாதி அடையாளம் துறப்பு... நல்லதா, கெட்டதா?

வீட்டுக்குள் எல்லாம் சரி. ஆனால், வீதிக்கு வந்தால்... கல்வி, வேலை உள்ளிட்ட எதற்காக அரசு அலுவலகப் படியேறினாலும், ‘என்ன சாதி, என்ன மதம்?’ என்கிற கேள்விகள் இவர்களையும் துரத்தாமல் இல்லை. ஒருகட்டத்தில், ‘சாதி இல்லை மதம் இல்லை’ என்பதையே ஒரு சான்றிதழாக வாங்கிவிட்டால் என்ன என்கிற தேடலில் ஆரம்பித்த சிநேகாவின் பத்தாண்டு பயணம், இன்று இந்த சான்றிதழில் வந்து நிற்கிறது. ‘சாதி மற்றும் மதமற்றவர்’ என்று சான்றிதழ் கேட்டு வந்து நின்ற  சிநேகாவைப் பார்த்து அதிர்ந்தார்களே தவிர, துளிகூட அசையவில்லை அதிகாரிகள். இத்தகைய சூழலில், அங்கு பொறுப்புக்கு வந்தார் திருப்பத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி. சிநேகாவின் கோரிக்கை மனுவைக் கையில் எடுத்தார். இதுதொடர்பாக, திருப்பத்தூர் சார் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் ஐ.ஏ.எஸ் கவனத்துக்கும் கொண்டுசென்றார். ‘சாதி மற்றும் மதம் அற்றவர் என்றோ... சாதி மற்றும் மதத்தைக் கேட்கும் அரசு ஆவணங்களில் எதையும் குறிப்பிடத் தேவையில்லை என்றோ நாம் சான்றளிக்க அதிகாரம் இருக்கிறது. அதைக் கொடுப்பதற்கு முன்பாக, சம்பந்தபட்ட நபர் தன் சாதி அடையாளத்தைப் பயன்படுத்தி, அரசின் சலுகைகளைப் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்தக்கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார், பிரியங்கா பங்கஜம். அதன்படியே சான்றிதழ் கொடுத்தார் வட்டாட்சியர். இதை ஃபேஸ்புக்கில்  சிநேகா பதிவிட, விஷயம் தீயாகப் பற்றிக்கொண்டது.

சாதி அடையாளம் துறப்பு... நல்லதா, கெட்டதா?

பாராட்டுக்கு உரிய செயலைச் செய்திருக்கும் வட்டாட்சியர் மற்றும் துணைஆட்சியர், ‘அரசாங்க ஊழியர்கள் ஊடகங்களிடம் பேசக்கூடாது’ என்கிற வாய்ப்பூட்டு காரணமாக, நல்ல விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளக்கூட தயங்கி, ஒதுங்கிச்செல்கிறார்கள். 2000-ம் ஆண்டில் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை பிறப்பித்திருக்கும் அரசாணையில் (205-31/07/2000), ‘ஒரு மாணவர் தன் சாதி, மதம் ஆகியவற்றை வெளிப்படுத்த விரும்பவில்லையென்றால், அதற்கான இடத்தை நிரப்பாமலோ அல்லது சாதி, மதம் அற்றவர் என்றோ குறிப்பிடலாம்’ என்று கூறியிருக்கிறது. 2016-ம் ஆண்டில் பாலகிருஷ்ணன் என்பவர் தொடுத்த வழக்கில், ‘பள்ளிக்கூடங்களில் சாதி, மதம் கேட்கத் தேவையில்லை’ என்று அன்றைய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி மகாதேவன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டிருக்கிறது. தவிர, இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பது அரசியலமைப்புச் சட்டத்திலேயே கூறப்பட்டுள்ளது. அதனால், எந்த மதத்தையும் தேர்ந்தெடுக்கும் மற்றும் பின்பற்றாமலிருக்கும் உரிமையும் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இப்போது விஷயம் பரபரப்பாக பேசப்படும் சூழலில், ‘இந்தச் சான்றிதழால் என்ன பயன்?’ என்கிற கேள்வியும் எழுகிறது. சாதி, மதங்களைவைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அத்தனை கும்பல்களுக்கு இந்த விஷயத்தில் கோபம் பொத்துக்கொண்டு விட்டது. ‘இப்படி நிறைய பேர் சான்றிதழ் கேட்டுக் கிளம்பி வந்தால் நம் பிழைப்பில் மண் விழுந்துவிடுமே’ என்கிற பயம் அவர்களுக்கு. அதேசமயம், ‘இந்தச் சான்றிதழ் குறித்து சந்தோஷப் பட்டுக்கொள்ள முடியவில்லை’ என்கிற குரல்களுக்கும் எழுந்திருக்கின்றன. 

இதுகுறித்தும் சிநேகாவிடம் பேசினோம். “சாதி ஏற்றத்தாழ்வால் இரண்டாயிரம் ஆண்டுகாலம் ஒடுக்கு முறைக்கு ஆளாக்கப்பட்ட சமூகம் மேல் எழுவதற்கான ஓர் ஆயுதம் இடஒதுக்கீடு. இது சமூக நீதி. பெரியாரையும் அம்பேத்கரையும், மார்க்ஸையும் ஏற்றுக்கொண்டு, ஆதிக்கசாதி பிறப்பின் குற்ற உணர்வில் இருக்கும் என்னை போன்றவர்கள் சாதி, மதத்தைத் துறப்பது அவசியம். எனினும் இது முதல் படிக்கட்டு மட்டுமே. இது என் வாழ்வியல் முறை சார்ந்த ஒரு முடிவு, ஆனால், பல்லாண்டுகளாக  ஒடுக்கப்படும் மக்கள் இடஒதுக்கீட்டை ஆயுதமாக, ஏணியாக பயன்படுத்த வேண்டும். இதை அவர்கள் இழிவாகவோ குற்ற உணர்வுடனோ அணுக வேண்டியதில்லை. ஆதிக்க சாதியினர் சாதியைத் துறப்பதும், ஒடுக்கப்பட்டவர்கள் இடஒதுக்கீட்டைப் பயன்படுத்துவதும் இரண்டுமே சாதிய அடுக்குகளைத் தகர்ப்பதற்கான வழிமுறைகள் என்பதே உண்மை. சாதியற்ற சமூகம் உருவாகும்வரை, சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு அவசியம்” என்றார்.

சாதி அடையாளம் துறப்பு... நல்லதா, கெட்டதா?

உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி  அரிபரந்தாமனிடம் பேசினோம். ‘‘சாதி மற்றும் மதம்  ஒழிய வேண்டும் என்கிற சிநேகாவின் முயற்சி பாராட்டுதலுக்குரியது. அவரது பெற்றோரையும் கூடுதலாகப் பாராட்டவேண்டும். சாதி மதமற்றவர் என்று அறிவித்துக்கொள்ளும் தன்மையைப் பெறும் வகையில் அவரை வளர்த்துள்ளனர்.

அதேசமயம், இதன் எதிர்விளைவுகள்தான் எனக்குக் கவலையை ஏற்படுத்துகின்றன.  சிநேகா, பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப் பட்ட அல்லது பட்டியல் இனத்தைச் சேர்ந்தவராக இருந்தால், அரசமைப்புச் சட்டம் வழங்கும் பல்வேறு சலுகைகளையும் உரிமைகளையும் இந்தச் சான்றிதழைப் பெற்றதன் மூலமாக இழக்கவே செய்கிறார். இதையெல்லாம் தெரிந்தே தான் அவர் சான்றிதழ் பெற்றுள்ளார். ஆனால், ஒட்டுமொத்த சமூகத்துக்குமான பார்வையில் நோக்கும்போது, இது பேரிழப்பாகவே இருக்கும்.

சாதி, மதம் நீக்கமற நிறைந்திருக்கும் சமூகத்தில், அவற்றை உதறுவதன் மூலமாக, உதறுவதற்கான நோக்கத்தைச் சாதித்துவிட முடியாது என்பதுதான் உண்மை. சொல்லப்போனால், இதையெல்லாம் உயர்சாதி என்று சொல்லிக்கொள்பவர்கள் வேண்டுமானால் செய்யலாம். மற்ற பிரிவினர் இதைச்செய்யும்போது, பாதிப்புக்குத்தான் உள்ளாவார்கள். இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இனமக்களை கல்வியிலும் ஆட்சி அதிகாரத்திலும் பங்கு பெறுவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பவை. இந்நிலையில், இப்படி சான்றிதழ் வாங்கினால், சமூகநீதிக்கே ஆபத்தாக முடியும். இப்படிச் சான்றிதழ் பெறுபவர்கள் தானாகவே ‘உயர் சாதி’ என்கிற வட்டத்துக்குள் வந்துவிடுவார்கள். அவர்களும் பொதுப் பிரிவில்தான் போட்டியிட வேண்டும். படிப்பு, வசதி என்று பலவற்றாலும் பின்தங்கியிருக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சட்டென்று இப்படி பொதுப்பிரிவுக்கு மாறினால், அங்கே சிறப்பான தனியார் பள்ளிகள், கோச்சிங் வகுப்புகள் என்று படித்துவிட்டு வரும் பணக்கார உயர்சாதி மாணவர்களுடன் போட்டியிடவே முடியாது.

சாதி அடையாளம் துறப்பு... நல்லதா, கெட்டதா?

ஏற்கெனவே கிரீமிலேயர் என்கிற பெயரில் குறிப்பிட்ட அளவிலான பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் சலுகைகளை மத்திய அரசு பறித்துவிட்டது. தமிழகத்தில் மட்டும்தான் கிரீமிலேயர் என்பது இல்லை. இத்தகைய சூழலில், சாதி இல்லை மதம் இல்லை என்று சொல்வதன் மூலமாக இருப்பதையும் இழந்துவிடக்கூடாது.

இன்றைக்கு ஏதோ ஒரு வேகத்தில் அம்மாவோ, அப்பாவோ சாதி வேண்டாம் என்று சான்றிதழ் பெற்றுவிட்டனர். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை, பிற்காலத்தில் ஏதாவது ஒரு காரணத் துக்காக சாதிச் சான்றிதழ் கேட்டால், அதைப் பெறுவது சிக்கலுக்குரிய ஒன்றாகவே இருக்கும். எனவே, ஒட்டுமொத்தமாக அனைத்து சாதி மற்றும் அனைத்து மதங்களும் உயிர்ப்புடன் இருக்கும் வரையில், சான்றிதழ்களில் சாதி மற்றும் மத அடையாளங்களைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவையெல்லாம் அரசியலமைப்பு நமக்கு வழங்கியிருக்கும் பாதுகாப்பு” என்று சொன்ன  அரிபராந்தாமன்,

“சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழைப் பெற்று உயர்சாதி என்கிற வட்டத்துக்குள் வந்துவிட்டாலே சாதிப்பாகுபாடு, மதப்பாகுபாடு, தீண்டாமைச்சுவர், ஆணவக்கொலைகள் எல்லாம் நீங்கிவிடுமா என்ன? அப்படி நீங்கிவிடும் என்றால், இதைவிட வேறு சுலபமான தீர்வு இருக்கமுடியாதே’’ என்றார் அர்த்தம் பொதிந்த புன்னகையுடன்.

அரிபராந்தாமன் சொல்வதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் அச்சங்களும்கூட. இதைப் போக்க வேண்டிய கடமை, அரசுக்கு மட்டுமல்ல... நம் ஒவ்வொருவருக்குமே இருக்கிறது!

- நமது நிருபர்

சான்றாவணம்!

ப்படி வழங்கப்பட்டிருக்கும் சான்றிதழை, ‘சர்டிஃபிகேஷன்’ (Certification) என்றே அலுவலக மொழியில் விளிக்கிறார்கள். அதாவது, இது சர்டிஃபிகேட் (Certificate) அல்ல. ஒரு நபர், அவரின் அப்பாவுக்கு முதல் மகனா... இரண்டாவது மகனா என்கிற குழப்பம் வருகிறது. ஆவணங்கள் மற்றும் பொதுவிசாரணைகள் மூலமாக அது உறுதிப்படுத்தப்பட்டு, அவர்தான் முதல் மகன் என்று வழங்கப்படுவது சர்ட்டிஃபிகேஷன். இதைச் சான்றிதழ் என்று சொல்ல முடியாது. சான்றாவணம் என்று வேண்டுமானால் கூறலாம்.