Published:Updated:

நினைவில் காடுள்ள மனிதர்கள்!

நினைவில் காடுள்ள மனிதர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
நினைவில் காடுள்ள மனிதர்கள்!

நினைவில் காடுள்ள மனிதர்கள்!

நினைவில் காடுள்ள மனிதர்கள்!

நினைவில் காடுள்ள மனிதர்கள்!

Published:Updated:
நினைவில் காடுள்ள மனிதர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
நினைவில் காடுள்ள மனிதர்கள்!

டந்த பிப்ரவரி மாதம் பழங்குடியின மக்களை மலைகளிலிருந்து கீழே இறக்கச் சொல்லி  அரசு உத்தரவிட்டது. பிறகு அதை நீதிமன்றம் ரத்து செய்தது. இதற்கு முன்பு பல வாக்குறுதிகள் கொடுத்துத் தமிழகத்தின் பல்வேறு மலைகளிலிருந்து கீழே இறக்கப்பட்ட பழங்குடியின மக்கள் என்ன செய்கிறார்கள் என்று அரசுக்கோ, நீதிமன்றங்களுக்கோ தெரியுமா என்பது கேள்விக்குறிதான்.

வத்திராயிருப்புக்கு அருகில் இருக்கிறது பழங்குடியின மக்கள் வசிக்கிற பகுதியான அத்திக்கோவில். கடந்த 2000-ம் ஆண்டு மலையோடு தொடர்புடைய ஒரு சிறிய காட்டை வேரோடு பிடுங்கி அடிவாரத்தில் கொண்டு வந்து நட்டு வைத்திருக்கிறது அரசு. அந்தப் பகுதிக்குச் சென்றிருந்தேன். அது பல நூறு பலா மரங்களைக் கொண்ட தோட்டம். கடந்த இரவு யானைகள் வந்து போனதற்கான தடம் ஆங்காங்கே தென்பட்டது. தோட்டத்துக்கு மத்தியில் ஒரு பெரிய கிணறும் அதையொட்டி மோட்டார் ரூமும்  இருந்தன. இரண்டு நடுத்தர வயதுப் பெண்கள் பிள்ளைகளுக்குச் சோறு ஊட்டிக்கொண்டிருந்தார்கள்.

நினைவில் காடுள்ள மனிதர்கள்!

அதைக் கடந்த பத்தடி தூரத்தில் 65 வயது பெரியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். பக்கத்தில் 60 வயதுடைய அம்மா அமர்ந்திருந்தார். வான்பார்த்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். அவர் பெயர் மூக்கன். அந்தப் பலா மரத் தோட்டத்திற்குக்  காவலிருப்பதாகச் சொல்லி அறிமுகமானார்.

கோபத்தின் வெளிப்பாடு சில நேரம் மௌனமாக இருந்து கடைசியில் மௌனமாகவே மாறிவிடுகிறது. ஒருசில நிமிடங்களுக்குப் பிறகு பேச ஆரம்பித்தார்.

``2000 வாக்குல மலையில இருந்து கீழ வந்தோம். மொத்தம் 18 குடும்பம். ஒரு பொடகுல (பாறைக் குகை) மூணு குடும்பம் வரை இருப்போம். காட்டு வாழ்க்கைன்னு சொல்ல முடியாது. காடுதான் வாழ்க்கையே. எங்க அப்பா அம்மா காலத்துல இருந்து காடுதான். காட்டுல இருக்க தேன், கிழங்கு, கடுக்காய் எடுக்குறதுதான் எங்க வேலயே. அப்படி எடுக்குற பொருள கீழ இருந்து வரவங்ககிட்ட வித்துடுவோம். காசு பணமா வாங்காம பண்டமாற்று முறைல வாங்கிக்கிடுவாங்க. இப்படித்தான் எங்க காலம் போச்சி, இந்தா உக்கார்ந்திருக்குதுல.. இது என் பொஞ்சாதி. எப்போ கல்யாணம் பண்ணினேன்லாம் தெரியாது. வருச நாட்ல இருந்து கட்டிட்டு வந்தேன். காட்டுக்கு வாக்கப்பட்டவ ” என்று சொல்லிக்கொண்டே மனைவியைப் பார்க்கிறார்.

“வெளியில இருக்கவங்களுக்கு எங்க ஆட்கார  (ஆட்கள்) தெரியாது. எங்களுக்கு வெளிய இருக்க ஆட்கார தெரியாது. காடு தவிர வேற எந்த யோசனையும் வந்ததில்ல. காலம் காலமா ஆண்கள்  எப்படி இருந்தோமோ அப்படித்தான் பொண்ணுங்களும் இருக்காங்க. சொந்தத்துல கண்ணாலம் கட்டிக் குடுக்குறதுனால கண்ணு முன்னாடியே இருப்பாங்க. பெருசா அவங்க குறித்து யோசிச்சதே இல்ல. அங்கே எல்லோருக்குமே சுகபிரசவம்தான்.

எல்லாமே நாங்க இருக்க பொடகுலதான் நடக்கும். அந்தா நிக்கிறாங்களே அவங்க என்னோட மொத பொண்ணு பேரு பால்தாயி. அவங்க பதினஞ்சி வருசம் வரைக்கும் பொடகு வாழ்க்கைதான். எதெல்லாம் நீங்க பிரச்சனன்னு நெனக்கிறிங்களோ அதெல்லாம் பிரச்சனன்னு கீழ வந்ததுக்கு அப்பறம்தான் தெரியுது. மேல அதெல்லாம் இல்லை” என்னும் அவரின் வார்த்தைக்குள் காட்டைவிடப் பெரிய உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நினைவில் காடுள்ள மனிதர்கள்!

மலையில் வாழ்ந்தவரை அவர்கள் காசு பணத்தைத் தேடி ஒருபோதும் ஓடியதில்லை. தேனையும் கிழங்குகளையும் கடுக்காய்களையும்தான் தேடியிருக்கிறார்கள். காடுகளில் கிடைக்கிற பொருள்களை அடிவாரத்திலிருந்து வருகிற ஏஜென்ட்டிடம் கொடுத்துவிடுவார்கள். வேண்டிய பொருள்களைப் பண்டமாற்று முறையில் அவர்களிடமிருந்து  பெற்றுக்கொள்கிறார்கள்.

``காட்டை விட்டு வந்து 18 வருஷத்துக்கும் மேல ஆயிடுச்சி. இப்பவும் வருசத்துக்கு ஒருக்கா, அஞ்சு பேர் சேர்ந்து மலைக்குப் போயிட்டு வருவோம். தேன், கடுக்காய், கிழங்குன்னு எடுத்துட்டு வந்து வித்திடுவோம். 2000த்துல ஒரு படி தேன (ஒன்றரை கிலோ) 6 ரூபாய்க்கு வாங்கிட்டுப் போவாங்க. ஒரு பெரிய தேன் ராட்டைப் பிரிச்சி எடுத்தா 15 படி தேன் கிடைக்கும். இப்போ 350 ரூபாய்க்கு வாங்கிட்டுப்போறாங்க. அத அஞ்சி பேரும் பிரிச்சி எடுத்துக்குவோம். கடுக்காயை மரக்கா கணக்குல வாங்குவாங்க. மூணு படி ஒரு மரக்கா. கடுக்காய் கேட்டு இப்ப யாரும் வரதில்ல. எல்லாரும் தேன் கேட்டுத்தான் வராங்க. தேனுடைய உண்மையான விலை என்னன்னு இப்பவரைக்கும் எங்களுக்குத் தெரியாது. இந்த வேலையெல்லாம் நாங்க கால காலமா செய்யிறது. காசுக்காகச் செய்யல. இப்பவும் காட்டுக்குப் போகணும்னு தோணும். காடு தனக்குன்னு எதையும் ஒளிச்சி வச்சிக்காது, எங்களுக்கு வேணுங்குற எல்லாத்தையுமே அது கொடுத்துச்சி. எங்க போனாலும் வாழ்ந்த இடத்த மறக்க முடியாதுல. பொடகுல இருந்து வெளிய வந்தா காடு, மரம், செடி, கொடின்னு வாழ்ந்துட்டோம், ஆனா இங்க கண்ணுக்கு முன்னாடி சமவெளி பரந்து விரிஞ்சி பெருசா கிடக்கு. அந்தச் சமவெளி எங்களை பயமுறுத்துச்சு.  எங்க போறது என்ன வேல பாக்குறதுன்னு நெறய குழப்பம். அதைவிட நமக்கு யார் வேல குடுப்பாங்க, என்ன மாதிரி வேல குடுப்பாங்கன்னு ஒரு கேள்வி இருந்துச்சு. இப்பகூட அந்தக் கேள்வியும் பயமும் இருக்கு.
இப்போதைக்கு கிடைக்கிற கூலி வேலைய செஞ்சி பொழச்சிட்டு இருக்கோம்.  எங்க அடுத்த தலைமுறை பள்ளிக்கூடம் போவுது. எங்கள மாதிரி இல்லாம அதுக தப்பி பொழச்சிகிரும்ங்க. ஆனா காடு மாதிரி வருமான்னு தெரில” எனச் சொல்லி முடிக்கும் முன்பே அவர் கண்களில் ஈரம் கசிகிறது.

காடுகளிலிருந்து அவர்களைப் பிரித்ததே மிகப்பெரிய வன்முறை. அவர்களிடம், சமவெளியில்  இருக்கிற மனிதர்களைக் காட்டி ``அவர்களைப் போல உங்களால் வாழ முடியாதா?” எனக் கேட்கிறார்கள். இது அதைவிடப் பெரிய வன்முறை.

- அ.ஜார்ஜ்,  படங்கள்: க.ரங்கா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism