Published:Updated:

``1,000 ரூபாய்க்குக் கொத்தடிமையானேன்; இப்போ 10 பேருக்கு ஊதியம் வழங்குறேன்!” - தையம்மா

எவ்வளவுதான் உழைச்சாலும் அவுங்க கொடுக்கிற சம்பளத்தை வச்சி வாங்கின கடனைக்கூட எங்களால அடைக்க முடியல. பசி, நோய், விரக்தி இவற்றுக்கிடையேதான் ஐந்து ஆண்டுகள் ஓடின.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

னித வாழ்வு என்பது பெரும்பாலும் தேவைகளைச் சார்ந்தே இயங்கிக்கொண்டிருக்கிறது. நடைமுறையில் இந்தத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் காரணியாக பணம்தான் உள்ளது. வாய்ப்புகள் என்பதை மையப்படுத்தித்தான் வாழ்வியல் என்பது தீர்மானிக்கப்படுகிறது. இதில் ஒருபிரிவினர், வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றவர்களாகவும், மற்றொரு பிரிவினர் வாய்ப்புகள் மறுக்கப்பட்டோராகவும் உள்ளனர். வாய்ப்புகள் படைத்த சிலருக்கு வறுமை என்பது வாழ்வில் கடந்துபோகக்கூடிய ஒரு சிறிய காலகட்டம். ஆனால், பலருடைய வாழ்வோ வறுமையால் மட்டுமே நிறைந்துள்ளது. இந்தப் பூமியில் நிலமற்று வாழும் பலகோடி மக்களுக்கு உடலுழைப்பு மட்டும்தான் `மூலதனம்’. ஆனால், அந்த உழைப்புக்கேற்ற ஊதியங்கள் முறைப்படி பகிர்ந்தளிக்கப்படுகிறதா என்பதுதான் மனித வரலாற்றின் பன்னெடுங்காலமாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் மாபெரும் கேள்வி?

இந்தச் சவால்கள் மன்னராட்சி முறையிலிருந்து மக்களாட்சி முறை வரையிலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. விடுதலைக்குப் பிறகு இந்தியா, மக்களாட்சி என்ற ஜனநாயக கோட்பாட்டைக் கையிலெடுத்தது. ஆனால், இன்றும் இந்த ஜனநாயகம் சென்று சேராத பல வீதிகள் உள்ளன. 2011-லிருந்து ஐந்து ஆண்டுகள் கைகளில் பச்சிளங்குழந்தையோடு குடும்பத்தோடு கொத்தடிமை வாழ்வை வாழ்ந்தவர் தையம்மா. கடந்த 2016-ம் ஆண்டு இந்த இழிநிலையிலிருந்து மீட்கப்பட்ட தையம்மா, இன்று தன்னுடைய கடினமான உழைப்பால்  சுயதொழில் தொடங்கி சிறுமுதலாளியாக உள்ளார்.

கொத்தடிமை வாழ்விலிருந்து முதலாளியானதுவரை தன்னுடைய வலிகள் நிறைந்த வாழ்வனுபவத்தைப் பகிர்கிறார் தையம்மா. ``வேலூர் மாவட்டத்திலுள்ள அத்தியாணம் என்பதுதான் எங்களுடைய சொந்த ஊர். நாங்கள்  தினமும் கூலி வேலைக்குச் சென்று அதன்மூலம் கிடைக்கும் வருவாயில்தான் வாழ்வை நடத்திவந்தோம். விவசாயத்தில் பெரிய லாபம் இல்லாமல் போனது போன்ற காரணங்களால் கூலி வேலைகூட இல்லாத நிலைதான் ஏற்பட்டது. அப்போதுதான் என் கணவர் எங்க ஊருக்குப் பக்கத்திலிருந்த விறகு விற்கும் பெரு முதலாளி ஒருவரிடம் வேலைக்குப் போனார். அதே காலகட்டத்தில்தான் எங்களுக்குப் பெண் குழந்தை பிறந்திருந்தது. பெரிய கனவுகளோடு திருமண வாழ்வை வாழ ஆரம்பித்திருந்த காலம் அது. ஆனால், அதன்பின் நடந்தது எல்லாம் சோகக் கதைகள்தான்.

அப்போது எங்கள் குழந்தைக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போக முதலாளிகிட்ட வெறும் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிகிட்டுப் போனோம். நாங்கள் ஆஸ்பத்திரியிலிருந்து ஊருக்குத் திரும்பி வர மூணு நாள் ஆச்சு. அதுக்குள்ள நாங்கள் ஏதோ ஏமாத்திட்டு ஊரவிட்டே ஓடிட்ட மாதிரி எங்க மாமியாரை வீடு புகுந்து அடிச்சுட்டாங்க. நாங்கள் வீட்டுக்கு வந்தவுடனே, எங்களையும் அடிச்சு வேலைக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. முதல்ல, சில வாரம் நாங்க எங்க வீட்டுல இருந்துதான் அந்த விறகு வெட்டும் இடத்துக்குப் போயிட்டு வந்தோம். ஆனா, `நீங்க வீட்டுல இருந்து வந்திங்கனா ஒழுங்கா வேலை செய்ய மாட்டிங்க... இங்கவே தங்குங்க'னு எங்களை ஒரு மாமரத்துக்கு அடியில தங்க வச்சிட்டுங்கா. நாங்க கொத்தடிமை வாழ்க்கைதான் வாழுறோம்னு தெரியாமலேயே அந்த வாழ்வை வாழ ஆரம்பிச்சிட்டோம்.

பொழுது முழுக்க விறகு வெட்டணும். அது மட்டும்தான் வாழ்க்கையா இருந்துச்சு. எவ்வளவுதான் உழைத்தாலும் சம்பளமென்று எல்லாம் ஒன்றும் கிடைக்காது. வாரம் ஐந்நூறு ரூபாய் கொடுத்து அதை மூணு குடும்பத்தைப் பிரித்து எடுத்துக்கச் சொல்வாங்க. எவ்வளவுதான் உழைச்சாலும் அவுங்க கொடுக்கிற சம்பளத்தை வச்சி வாங்கின கடனைக்கூட எங்களால அடைக்க முடியல. பசி, நோய், விரக்தி இவற்றுக்கிடையேதான் ஐந்து ஆண்டுகள் ஓடின. திடீரென இதுபற்றிக் கேள்விப்பட்டு வந்த அரசு அதிகாரிகள் எங்களை அங்கிருந்து மீட்டாங்க. அதன் பிறகு அரசு அளித்த நிதிகளைக் கொண்டு, நாங்களே எங்களுக்குத் தெரிஞ்ச விறகு விற்கும் தொழிலைத் தொடங்கினோம். இப்போ, எங்களுடன் இணைந்து பத்துப் பேர் வேலை செய்றாங்க. வரும் வருமானத்தில் அனைவரும் நியாயமான முறையில்  பகிர்ந்துகொள்கிறோம். யாராக இருந்தாலும் அவர்களுக்கு வாய்ப்புகள் மட்டும் கிடைத்தால், அடிமையிலிருந்து அதிபதியாக மாறலாம்” என்றவரிடம், ``உங்கள் குழந்தையை என்ன படிக்கவைக்க ஆசைப்படுகிறீர்கள்" எனக் கேட்டதற்கு, ``நாங்கள்தான் பல ஆண்டுகள் சுயமாக முடிவெடுக்க முடியாமல் அடிமை வாழ்வை வாழ்ந்தோம். எங்கள் குழந்தைகளும் ஏன் இது மாதிரியான அடிமை வாழ்வை வாழ வேண்டும்? அவர்கள் சுயமாகச் சிந்தித்து என்னவாக  விரும்புகிறார்களோ, அதை அவர்கள் அடைய உறுதுணையாக இருப்போம்” என்றார்.

உலகம் சமநிலைப் பெற வேண்டும்.... இங்கு உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு