Published:Updated:

தூக்கியடிக்கப்பட்ட மதுரை கலெக்டர்...நினைத்ததை சாதித்த கிரானைட் புள்ளிகள்?

தூக்கியடிக்கப்பட்ட மதுரை கலெக்டர்...நினைத்ததை சாதித்த கிரானைட் புள்ளிகள்?
தூக்கியடிக்கப்பட்ட மதுரை கலெக்டர்...நினைத்ததை சாதித்த கிரானைட் புள்ளிகள்?
தூக்கியடிக்கப்பட்ட மதுரை கலெக்டர்...நினைத்ததை சாதித்த கிரானைட் புள்ளிகள்?

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய அன்சுல் மிஸ்ராவின் அதிரடி நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட கிரானைட் பெரும் புள்ளிகள்,  ஒரு வழியாக தாங்கள் நினைத்தபடியே அவரை இடமாற்றம் செய்ய வைத்துவிட்டனர் என்றும், அவரது இடமாற்றத்திற்கு கிரானைட் புள்ளிகள்தான் காரணம் என்றும் கூறுகின்றனர் மதுரையின் விவரமான புள்ளிகள்.

மதுரையில் அரசுக்கு சொந்தமான கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற மோசடிகளை வெளியுலகிற்கு அம்பலப்படுத்திய அப்போதைய ஆட்சியர் சகாயம் இடமாற்றம் செய்யப்பட்டதும், அவர் இடத்திற்கு அன்சுல் மிஸ்ரா நியமிக்கப்பட்டார்.

அவர் மதுரை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றதும், சகாயத்தைப்போன்றே கிரானைட் மோசடி புள்ளிகளுக்கு எதிராக அதே வேகத்தில் நடவடிக்கைகளை தொடருவாரா அல்லது நெருக்கடிகளுக்கு பணிந்துவிடுவாரா? என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் அந்த சந்தேகம் தேவையற்றது என்பதை தனது நடவடிக்கைகள் மூலம் நிரூபித்தார் மிஸ்ரா. சட்டவிரோத ஆக்கிரமிப்பு குவாரிகளை அகற்றியது, மோசடிகளில் ஈடுபட்டவர்களை உள்ளே தள்ளியது, பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிரானைட் கற்களை கைப்பற்றியது என சுற்றிச்சுழன்றார் மிஸ்ரா.

இந்நிலையில்தான் கிரானைட் மோசடி வழக்குகளில் சிக்கி கைதானவர்கள் ஒவ்வொருவராக ஜாமீனில் வெளிவர ஆரம்பித்தனர். மேலும் வழக்குகளின் வேகமும் குறையத் தொடங்கியது. அப்போதே கிரானைட் குவாரி மோசடி வழக்குகள் இனி அவ்வளவுதானா? என்ற கேள்வி எழுந்தது.

தூக்கியடிக்கப்பட்ட மதுரை கலெக்டர்...நினைத்ததை சாதித்த கிரானைட் புள்ளிகள்?

இதனை மிஸ்ராவிடமே பத்திரிகையாளர்கள் நேரில் கேட்டபோது," சட்ட ரீதியான நடவடிக்கைகள் கட்டாயம் தொடரும். குற்றவாளிகள் தப்ப முடியாது" என திட்டவட்டமாக கூறிய அவர், அது தொடர்பான நடவடிக்கைகளை சத்தமில்லாமல் மேற்கொண்டு வந்தார்.

அது உண்மைதான் என்பதை நிரூபிக்கும்விதமாக, முதலில் கிரானைட் குவாரிகளின் முழு வருமானத்தையும் அரசு கஜானாவுக்கு திருப்பிவிடும் வகையில்,  கிரானைட் மோசடிகளில் ஈடுபட்ட நிறுவனங்களிடமிருந்து கைப்பற்றப்பற்ற கிரானைட் கற்களை உலகளாவிய டெண்டர் கொடுத்து ஏலம்விடும் நடவடிக்கையை மேற்கொண்டார்.

அன்சுலின் இந்த நடவடிக்கை லோக்கல் கிரானைட் புள்ளிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. "இது போன்ற சர்வதேச டெண்டர் முறை வர ஆரம்பித்தால் எங்களால் இனிமேல் தொழில் செய்ய முடியாது. அதேப்போன்று உங்களுக்கும் நாங்கள் கொட்டிக்கொடுக்கும் மாமூலும் இனி கிடைக்காது" என்று உள்ளூர் அதிமுக புள்ளிகள் மற்றும் சில எம்.எல்.ஏ.க்களிடம் இந்த கிரானைட் புள்ளிகள் முறையிட்டு, மிஸ்ராவை மதுரையைவிட்டு தூக்க சொல்லியதாகவும், அதனைத் தொடர்ந்து மிஸ்ராவுக்கு எதிராக அதிமுக புள்ளிகள் ஆட்சி மேலிடத்திற்கு புகார்களை தட்டியதாகவும் கடந்த வாரம் தகவல் வெளியானது.

இந்நிலையிலேயே அன்சுல் மிஸ்ரா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆக மொத்தத்தில் கிரானைட் புள்ளிகள் தாங்கள் நினைத்ததை சாதித்துவிட்டார்கள் என்று மனம் குமுறுகிறார்கள் கிரானைட் மோசடிகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள்.

##~~##
என்ன செய்யப்போகிறார் புதிய கலெக்டராக பொறுப்பேற்க இருக்கும் சுப்பிரமணியன்?

- பா. முகிலன்