
அவதூறு பரப்புகின்றனர்! கமிஷனரிடம் கருணாஸ் புகார்
சமூகவலைதளங்களில் தன் மீது அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகரும், எம்.எல்.ஏ-வுமான கருணாஸ், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'முதல்வர் தேர்வு குறித்து நான் எந்தக் கருத்தும் கூறவில்லை. ஆனால், நான் கூறியதாக, சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர்.

குறிப்பாக, நான் ஒரு சமூகம் சார்ந்த இயக்கம் நடத்தி வந்தாலும், அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்கிறேன். நான் எந்தக் கருத்து தெரிவிப்பதாக இருந்தாலும், அதை வெளிப்படையாகவே கூறுவேன். எனவே, இதுபோன்ற அவதூறுகளை பொது மக்கள் நம்ப வேண்டாம் ' என்றார்.
அதேபோல், அ.தி.மு.க.வின் சி.ஆர்.சரஸ்வதியும், தன் மீது அவதூறு பரப்புவதாகக் கூறி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.