Published:Updated:

''இவரெல்லாம் ஒரு கலெக்டரா..?'' பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவியின் புகார்

''இவரெல்லாம் ஒரு கலெக்டரா..?'' பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவியின் புகார்
''இவரெல்லாம் ஒரு கலெக்டரா..?'' பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவியின் புகார்

''இவரெல்லாம் ஒரு கலெக்டரா..?'' பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவியின் புகார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

‘என்னைத் தேர்வு எழுதவிடாமல் டார்ச்சர் செய்கிறார்’ என்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் விவேகானந்தன் மீது பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் ‘சைல்டு லைனில்’ கொடுத்திருக்கும் புகார், தர்மபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தர்மபுரி, இலக்கியம்பட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவி, சங்கமப் பிரியா. தற்போது நடைபெற்றுவரும் பொதுத்தேர்வை எழுதிக்கொண்டிருக்கிறார். பிறந்ததில் இருந்தே வலது கை நரம்பு பாதிப்பு உள்ள சங்கமப் பிரியா, 40 சதவிகித குறைபாடு உள்ளவர். எனவே, ஒரு மணி நேரம் கூடுதலாக தேர்வு எழுத அனுமதி பெற்றுள்ளார். இந்த நிலையில், 'கலெக்டர் என்னைத் தேர்வு எழுதவிடாமல் டார்ச்சர் செய்கிறார்' என்று சைல்டு லைனில் புகார் கொடுத்துள்ளார். இவர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் மகள் என்பது கூடுதல் அதிர்ச்சி. 

புகார் குறித்து சங்கமப்பிரியாவிடம் பேசினோம், “நான் இலக்கியம்பட்டி ஸ்கூல்ல பத்தாவது படிக்கிறேன். என்னோட வலது கையில் நரம்பு பாதிக்கப்பட்டிருப்பதால் என்னால வேகமாக எழுத முடியாது. அதற்காக கல்வித் துறையில் விண்ணப்பிச்சு அதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிச்சு, ஒரு மணி நேரம் ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கியிருக்கேன். ஆனால், என் அம்மாவைப் பழி வாங்குவதற்காக என்னைத் தேர்வு எழுதவிடாமல் அதிகாரிகளைவிட்டு டார்ச்சர் செய்கிறார் தர்மபுரி கலெக்டர். எக்ஸாம் ஹாலுக்கு வந்து நான் எப்படி எழுதுகிறேன்னு ஃபோட்டோ எடுக்குறது, பெர்மிஷன் ஆர்டர் கேக்குறதுனு ஆரம்பத்தில் இருந்தே டார்ச்சர். அதைகூட பொறுத்துக்கலாம். மார்ச் இருபத்து மூணாம் தேதி, தர்மபுரி மெடிக்கல் காலேஜ் டீன் சாமிநாதனிடம் இருந்து என் பெயருக்கு சம்மன் வந்துச்சு. அதில், உங்களுடைய கை குறைபாட்டை செக் பண்ணனும். இருபத்து நான்காம் தேதி இரவு 8 மணிக்கு வரணும்னு எழுதி இருந்துச்சு. நான் பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகிட்டேன். ஒரு பரீட்சைத்தான் பாக்கி இருக்கு. எல்லாச் சான்றிதழ்களும் கொடுத்துதான் இந்த பெர்மிஷனை வாங்கியிருக்கேன். அப்படி இருக்கிறப்போ, திடீர்னு செக்அப்புக்கு கூப்பிட்டா என்ன அர்த்தம்? அதில் உள்நோக்கம் இருக்குன்னு தெரியுது. படிச்சு கலெக்டராகறது என் கனவு. ஆனால், ஒரு கலெக்டராலயே என் படிப்புக்குச் சிக்கல் வருது. ஒரு கலெக்டர் எப்படியெல்லாம் இருக்கக் கூடாதுங்கறதுக்கு தர்மபுரி கலெக்டர்தான் உதாரணம். எனக்கு மார்க் குறைஞ்சா அதுக்கு அவர்தான் காரணம். அதனால்தான் சைல்டு லைனில் புகார் கொடுத்திருக்கிறேன்'' என்றார் ஆதங்கத்துடன். 

சங்கமப் பிரியாவின் அம்மாவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருமான மகேஸ்வரியிடம் பேசினோம், “அதான் என் பொண்ணு எல்லாம் சொல்லிட்டாளே சார். மூணு நாளா எங்க வீட்ல யாரும் தூங்கலை. அவ்வளவு மன உளைச்சல். என் பொண்ணுக்கும் கலெக்டருக்கும் என்ன பிரச்னை இருக்கப்போகுது சொல்லுங்க. பதினாலு வயசுப் பொண்ணுக்கு சம்மன் அனுப்புறாங்க. என் மேல ஏதாச்சும் கோபம்னா என் மீது நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால், என் பொண்ணோட படிப்பு விஷயத்தில் விளையாடுறாங்க'' என்றவர், கலெக்டருடன் என்ன பிரச்னை என்று சொல்லவே இல்லை. 

இதுகுறித்து விளக்கம்பெற தர்மபுரி கலெக்டர் விவேகானந்தனிடம் பேசினோம், “அந்த மாணவி, சி.இ.ஓ-வின் பொண்ணுங்குறதே இப்பதான் தெரியும். அந்தப் பெண்ணை மட்டும் தனியாக உட்காரவைத்து தேர்வு எழுத அனுமதிக்கிறாங்க. அந்தத் தேர்வு மையத்துக்கு ஸ்குவாடாக சென்ற தர்மபுரி ஆர்.டி.ஓ ராமமூர்த்தி, 'அந்த மாணவி கையில் குறைபாடு இருக்கிறதா என்பதில் சந்தேகம் இருக்கிறது' என அளித்த புகாரின் பேரில்தான் மாவட்ட நிர்வாகம் சார்பாக தேர்வுத் துறை இயக்குநருக்கு ரிப்போர் கொடுத்திருக்கிறோம். தவிர, மாவட்ட நிர்வாகம் இதில் பெரிய ஆக்‌ஷன் எல்லாம் எடுக்க முடியாது. நான் டாச்சர் செய்கிறேன் என்பதெல்லாம் சுத்தப் பொய். மருத்துவத் துறை சார்பாக சம்மன் அளிக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. அது, அந்த மாணவியின் தேர்வுக்கு இடையூறாக இருப்பின், அதுகுறித்து நான் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார். 

விபரம் அறிந்தவர்களோ, “கலெக்டருக்கும், சி.இ.ஓவுக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஏழாம்பொருத்தம்தான். எக்கச்சக்க மோதல்கள். அதனால்கூட இப்படி நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது'' என்கிறார்கள். 

பெரியவர்களின் அதிகார மோதலில், ஒரு மாணவியின் படிப்புக்கு இடையூறு செய்யாதீர்கள். 

- எம்.புண்ணியமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு