Published:Updated:

கட்டடங்களை இடித்து மரங்களை நடும் ராய்பூர் கலெக்டர்..!

கட்டடங்களை இடித்து மரங்களை நடும் ராய்பூர் கலெக்டர்..!
கட்டடங்களை இடித்து மரங்களை நடும் ராய்பூர் கலெக்டர்..!

சுற்றுச்சூழல் மாசுபட்ட உலகின் முதல் பத்து நகரங்களில் ஏழாவது இடத்தில் இருப்பது சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்பூர். வாகனப் புகை, நிலக்கரித் தொழிற்சாலை, உடல் தகனப் பகுதி என நகரம் முழுவதுமே புகை மண்டலமாகத்தான் காணப்படும். இந்த நிலையை ஒற்றை ஆளாக மாற்றிக்காட்டியிருக்கிறார் ராய்பூர் மாவட்ட கலெக்டர் ஓம் பிரகாஷ் செளத்ரி.

எல்லா நகரங்களிலும் மரங்களை வெட்டி கட்டடங்கள் கட்டிக்கொண்டிருக்கும் போது, செளத்ரி மட்டும் கட்டடங்களை இடித்து மரங்களை நட்டுக்கொண்டிருக்கிறார்.ஆம்... நகரின் மையப்பகுதியாக இருக்கும் சுமார் 19 ஏக்கர் பரப்பளவில் இருந்த பழைய கட்டடங்கள் அனைத்தையும் இடித்துவிட்டு, 'ஆக்ஸி மண்டலம்' உருவாக்கும் பணியில் இறங்கியிருக்கிறார் செளத்ரி.

ஆக்ஸி மண்டலம் : 

நகரில் மாசு அதிகரிக்கும்போதும், கார்பன்−டை−ஆக்ஸைடில் அளவு அதிகரிக்கும்போதும் ஆக்ஸிஜனின் அளவு குறைந்துவிடும். இதனால் மக்கள் சுவாசிக்க சிரமப்படுவார்கள். இந்த நிலையை மாற்ற, ஆக்ஸிஜனை அதிகமாக வெளியிடும் மரங்களை நகரின் மையப்பகுதியில் அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியில் நடும்போது, ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும். நெருக்கமான கட்டடங்கள் நிறைந்த நகரங்களில் இதுபோன்ற ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும்போது, கட்டடங்கள் இடிக்கப்பட்டு மரங்கள் நடப்படும். உதாரணத்திற்கு அமெரிக்காவின் சென்ரல் பார்க் பகுதியைச் சொல்லலாம். இப்படி மரங்களை உருவாக்கும் நகரின் குறிப்பிட்டப் பகுதியை "ஆக்ஸி ஸோன்" என்பார்கள். சீனாவும் இந்த ஆக்ஸி ஸோன் உருவாக்கப்பணியில் தீவிரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

1000கோடி மதிப்புள்ள இடம் :

ராய்பூரில், கலெக்டர் செளத்ரி தேர்ந்தெடுத்த இடத்தில் இருக்கும் பழைய கட்டடங்களை அகற்றிவிட்டு அங்கே பொருளாதார மண்டலம் அமைக்கலாம் என அரசு முன்னரே திட்டமிட்டிருந்தது. காரணம் அந்த இடத்தின் மதிப்பு சுமார் 1000 கோடி! அந்த இடத்தில் அரசிற்கு இப்படி ஒரு திட்டம் இருப்பது செளத்ரிக்கு முன்னரே தெரியும். இருந்தாலும் சுற்றுச்சூழல் விவகாரங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் செளத்ரி, நேராக சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங்கை சந்தித்து, ஆக்ஸி மண்டலம் உருவாக்கும் திட்டத்தையும், இப்போது நாம் அமைதியாக இருந்தால், 50 வருடத்தில் மக்கள் வாழத் தகுதியில்லாத இடமாக ராய்பூர் மாறிவிடும் என்று எடுத்துச்சொல்லியிருக்கிறார். முதல்வரும் ஒப்புக்கொள்கிறார்!

கிட்டத்தட்ட 19 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த சுமார் 70 பழைய கட்டடங்கள் அனைத்தும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. நல்ல நிலையில் இருந்த ஒன்றிரண்டு கட்டடங்களில் அருங்காட்சியங்கள், இயற்கை பொருள்கள் கண்காட்சி போன்றவை ஏற்படுத்த வேலைகள் நடந்துவருகின்றன. கட்டட இடிபாடுகள் தற்போது அகற்றப்பட்டு இடம் தயார் நிலையில் உள்ளது. 'அந்த இடத்தில் என்ன செய்யப்போகிறீர்கள்?' எனப் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, 'நிச்சயம் புல்வெளிகள் அமைத்துப் பார்க் உருவாக்கப்போவதில்லை, ஆக்ஸிஜனை அதிகமாக வெளியிடும் மரங்கள் மட்டுமே நடப்படும்' என்றார் செளத்ரி.

ராய்பூர் முழுவதும் 28 குளங்களை மீட்டெடுத்திருக்கிறார். நிலக்கரி தொழிற்சாலைகளை முறைப்படுத்தியிருக்கிறார். வாகனங்களின் புகை வெளியீட்டு அளவைத் தீவிரமாகக் கண்காணித்து விதிமீறல் இருந்தால் கடுமையான தண்டனை வழங்க உத்தரவிட்டிருக்கிறார். பெரும்பாலும் சைக்கிள்களைப் பயன்படுத்துங்கள் என்று சொன்னது மட்டுமல்லாமல் அவரும் அதைக் கடைபிடிக்கிறார். நகர்,முழுவதும் லட்சக்கணக்கான மரங்களை நட்டிருக்கிறார். 'இந்த இடத்தில் மரம் நடலாமா?' என்று நாம் யோசித்து முடிப்பதற்குள் அங்கே மரம் நடப்பட்டிருக்கும். மரம் நடுதலில் அவ்வளவு வேகம் காட்டியிருக்கிறார் செளத்ரி. மக்களை நேரடியாகச் சந்தித்து சுற்றுச்சூழல் பிரச்னைகள் பற்றி விவாதிக்கிறார். அடுத்த நாள் அந்தப்பகுதியின் பிரச்னை கலையப்பட்டிருக்கும். தெருவில் இறங்கி குப்பைகளை தானே முன்வந்து சுத்தம் செய்கிறார். 'நான் சுத்தம் செய்தால்தான், மக்கள் அடுத்தமுறை குப்பைத்தொட்டியில் குப்பைகளைப் போடுவார்கள்' என்கிறார். அடுத்த 10 மாதங்களில் நாம் நம் இலக்கை அடையவேண்டும் என மக்களுக்கு அறைகூவல் விடுத்து உற்சாகப்படுத்துகிறார். மக்களோடு மக்களாகப் பயணித்து அவர்களிடமிருந்து சில யோசனைகளை பெற்றுக்கொள்கிறார். இப்படி ராய்பூரில் அமைதியாக ஒரு சூழலியல் புரட்சியை நிகழ்த்திக்  கொண்டிருக்கும் செளத்ரியைத் தொடர்புகொள்ள முயன்றோம். தொடர் பணியின் காரணமாக அவரால் பேச முடியவில்லை. சென்னை சிட்டிக்கு சில பசுமை ஐடியாக்கள் சொல்லுங்கள் எனக் கேட்டிருக்கிறோம்... 

ராய்பூர் நகரை மாசுக்களின் பிடியிலிருந்து மீட்டு பசுமையின் பாதையில் அழைத்துச்செல்லும் செளத்ரி நிச்சயம் பாராட்டுக்குரியவர்.