Published:Updated:

இந்தியச் சிறைகளும்... சித்ரவதைகளும்! - ஐ.நா எழுப்பும் கேள்விகள்

இந்தியச் சிறைகளும்... சித்ரவதைகளும்! - ஐ.நா எழுப்பும் கேள்விகள்
இந்தியச் சிறைகளும்... சித்ரவதைகளும்! - ஐ.நா எழுப்பும் கேள்விகள்

இந்தியச் சிறைகளும்... சித்ரவதைகளும்! - ஐ.நா எழுப்பும் கேள்விகள்

"ஒரு நாட்டின் நாகரிகத்தை அதன் சிறைச்சாலைகளைக் கொண்டு அறிந்துகொள்ளலாம்" - எழுத்தாளர் பியோதர் தாஸ்தாவ்ஸ்கி .

ஒவ்வொரு காலகட்டத்திலும், அக்காலச் சமூகம், பல தடைகளைத் தகர்த்தே, தம்மை  உயிர்ப்பித்துக்கொண்டு புதியவகையில்  பரிணமித்து வந்துள்ளது. பிரச்னைகளிலிருந்து விடுபடுதலுக்கான முயற்சிகளே, சமூகத்தின் நாகரிகத்தை மெருகேற்றுகிறது. அந்தவகையில், இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட இழப்பும் வலியும் உலகமெங்கும் புதிய வழிகாட்டலுக்கான முயற்சியைக் கூர்தீட்டியது. அதுவே 1948-ம் ஆண்டில் உதயமான ஐ.நா-வின் 'அனைத்துலக  மனித உரிமைப் பிரகடனமாகும்'. இதையொட்டி மனித உரிமைகள் குறித்தான கவனத்தை ஒரு வடிவத்துக்குக் கொண்டுவருவதற்கான திட்டமிடல்களைத் தொடங்கிய ஐ.நா, சில முக்கியக் கோட்பாடுகளை வரையறுத்தது. அதில், மிகமுக்கியமான 5-ம் பிரிவு,

'யாரும் யாரையும் சித்ரவதை செய்யக்கூடாது. எந்த ஒருவரையும் கொடூரமாக, மனிதத் தன்மையற்று கேவலமாக நடத்தக்கூடாது. எவரையும் கொடூரமான, மனிதத் தன்மையற்ற, கேவலமான தண்டனைக்கு உட்படுத்தக்கூடாது' என்று தெரியப்படுத்துகிறது. இதன் தொடர்ச்சியாக 1987-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி முதல் ஐ.நா சபையின், 'சித்ரவதைக்கு எதிரான உடன்படிக்கை', அமலுக்கு வந்தது. 'ஒரு நபரிடமிருந்தோ அல்லது மூன்றாவது நபரிடமிருந்தோ, ஏதேனும் ஒரு தகவல் அல்லது ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெறுவதற்காக அவரை உடல் ரீதியாகவோ அல்லது உளவியல் ரீதியாகவோ கடும் வலியை அல்லது கொடிய துன்பத்தை உண்டாக்கும் நடவடிக்கையே சித்ரவதையாகும்'. சித்ரவதை என்ற சொல்லுக்கான பொருளாக ஐ.நா உடன்படிக்கையின் வரையறைதான் இது. சிறைக்கைதிகளின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் சாராம்சம் கொண்டதே இந்த உடன்படிக்கையின் சிறப்பம்சமாகும். உலகின் பல்வேறு நாடுகளும் இந்நாளில், சித்ரவதைக்கு எதிரான தங்கள் செயல்பாடுகளைப் பட்டியலிட்டு வெளியிடும். இந்தியாவும் சித்ரவதைக்கு எதிரான தங்கள் பங்களிப்பை வெளியிடுகிறது என்றாலும்  நடைமுறையில் இந்திய சிறைச்சாலைகளின் நிலை என்ன தெரியுமா? 

2015-ம் ஆண்டின் கணக்கின்படி, 'இந்தியச் சிறைகளில் மொத்தமுள்ள 4,19,623 கைதிகளில் 1,584 சிறைவாசிகள் மரணமடைந்துள்ளனர். இதில் 1469 இயற்கை மரணம், 115 பேர் துர்மரணம். மொத்த துர்மரணத்தில் 77 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்' என்று தேசியக்

குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், 5,203 கைதிகள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இந்தியச் சிறைச்சாலைகள், மனச்சிதைவை உண்டாக்கும் மரணக்கூடாரமாக மாறிவிட்டது என்பதை வெளிக்காட்டுகிறது.

தமிழ்நாட்டிலோ, 2000-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையில் மட்டும் 1,289 சிறை மரணங்கள் அரங்கேறியுள்ளன. அதாவது சராசரியாக 4 நாள்களுக்கு ஒருமுறை ஒரு சிறை மரணம் நடக்கிறது. இதில் நெஞ்சு வலியில் 140 கைதிகள், மாரடைப்பில் 35 பேர், எச்.ஐ.வி -யில் 81 பேர் என மேற்கண்டவைகளிலேயே கணிசமான கைதிகள் மரணமுற்றுள்ளனர். தமிழ்நாடு சிறைத்துறை 2000-2013-ம் ஆண்டு வரையில் வெளியிட்ட கணக்காகும். (2014, 2015, 2016 கணக்குகளை வெளியிடவில்லை). இதில் முக்கியமாகத் தற்கொலையாக மட்டும் 69 கைதிகள் மரணமுற்றுள்ளனர். 

"சிறையில் நடக்கும் பெரும்பாலான மரணங்களுக்குக் காரணம் சிறைவாசிகள் தங்களுடைய உடல் நலக்குறைவைச் சொல்லும் போது, சிறை நிர்வாகமோ, அதனை சந்தேகக் கண் கொண்டு அணுகுவதுதான். இதனால் வியாதி அடுத்த கட்டத்துக்குச் செல்கிறது" என்கிறார் வழக்கறிஞர் கேசவன். இவர் சிறைவாசிகளின் மரணங்கள் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, இரண்டாண்டுகளாக நடத்தி வருகிறார். தொடர்ந்து இதுகுறித்துப் பேசும் அவர், "தேசியளவில், சிறை நிலைமைகள் குறித்து முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு ஆர்.சி லக்கோதி அனுப்பிய கடிதத்தை ஒட்டி,  'RE-IN HUMAN CONDITIONS IN  1382 PRISONS' என்ற வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு சிறைச்சாலையிலும்  'ஒரு எம்.டி மருத்துவர், அவருக்குக் கீழ் 6 உதவியாளர்கள், 6 செவிலியர்கள், 3 ஆய்வக வல்லுநர்கள், 1 மருந்தாளுநர், 1 உதவியாளருடன் கூடிய 2 உளநல ஆலோசகர்கள், பொது அறுவைச் சிகிச்சையாளர் - எலும்பியல் - தோல் நோய் - மயக்கவியல் மற்றும் பல் மருத்துவத்தில் 5 நிபுணர்கள் இருக்க வேண்டும்'  என்று 2008-ம் ஆண்டில் தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. இதற்கு முன்பே  சிறைவாசிகளுக்கு வழங்க வேண்டிய மருத்துவ வசதி குறித்து மத்திய அரசு, '1998 Model Prison Manual' வழிகாட்டுதல் கொடுத்துள்ளது. மேலும், இதனை அமல்படுத்த வேண்டும் என 2004-ல் தேசிய மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. ஆனால், இவை எதுவும்  இன்றுவரை அமல்படுத்தப்படவில்லை. இதனால் சிறைச்சாலைகள் சித்ரவதைக் கூடமாகவேக் காட்சி தருகிறது" என்கிறார் காட்டமாக. 

“சிறைத் தொகுதிகளுக்குள் 30, 40 பேருக்கு ஒரு கழிப்பிடம்தான் இருக்கும். சிறை அறைக்கு வெளியே உள்ள கழிப்பிடத்திலோ நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நிற்பார்கள். போதியத் தண்ணீர் இருக்காது. தொற்று நோய்க்கு முக்கியக் காரணம் இது. சிறைக்குள் பெயரளவுக்கு மனநல ஆலோசகர் இருப்பார். ஆனால், பெரும்பாலும் அவர் சிறைவாசிகளைப் பார்ப்பதில்லை'' என தமது அனுபவத்தை பகிர்கிறார் நான்கரை ஆண்டு பொடா சிறைவாசியாக இருந்த 'பொதுமையர் பரப்புரை இயக்க'த்தின் பாஸ்கர். தொடர்ந்து பேசும் அவர், ''சிறைச்சாலைகள் எப்படி இருக்க வேண்டும்? என உலக நாடுகளுக்கு ஐ.நா சில விதிமுறைகளை வகுத்துள்ளது.

'திறந்தவெளிச் சிறைச்சாலைகள் வேண்டும். சுகாதாரமான சிகிச்சை தரும் மருத்துவமனை இருக்க வேண்டும். சிறைவாசிகள் தங்கள் தனித் திறமையை வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். படிப்பதற்கான வாய்ப்பாக நூலகம் அமைக்கப்பட வேண்டும். எந்தநேரமும் விருந்தினர் மற்றும் வழக்கறிஞர் வந்து பார்க்க அனுமதிக்க வேண்டும். ஒருவருக்கு எவ்வளவு உணவு தரவேண்டும் உட்பட்ட ‘ப்ரிசன் மேனுவல்’ எனும் சிறைச்சாலை கையேட்டைச் சிறைவாசிக்குத் தரவேண்டும் என்றும்  வழிகாட்டியுள்ளது. ஆனால், இவை எதையும் இந்தியாவும் தமிழகமும் கடைப்பிடித்ததே இல்லை. சித்ரவதைக்கெதிரான ஐ.நா ஒப்பந்தத்தில், இந்தியா நீண்டநாள்களாகவே கையெழுத்துப் போடவில்லை. முதலாவதாக 1993-ல் நடந்த ஐ.நா-வின் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில், 'இந்தியா சித்ரவதை குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட வேண்டும்' என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தின. இதன்பிறகே 1997-ல் இந்தியா சித்ரவதைக்கெதிரான ஐ.நா-வின் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.

பொதுவாக, ஒரு சர்வதேச ஒப்பந்தத்தை இந்தியாவின் மாநிலங்களவை, மக்களவையில் தாக்கல் செய்து ஒப்புதல் பெறவேண்டும். அதை இந்தியா செயல்படுத்தவில்லை. இதையொட்டி பரவலாக அவ்வப்போது கேள்விகள் எழுந்தாலும், 2008 - ம் ஆண்டில், அதன் வலு கூடியது. 'உடன்படிக்கையில், கையொப்பமிட்ட பிறகு இந்தியா கடந்த 20 ஆண்டுகளாக சித்ரவதையைத் தடுப்பதற்கானச் சட்டம் ஏதும் இயற்றவில்லை. உடனே அதற்கான சட்டம் இயற்ற வேண்டும்' என்று  2008-ம் ஆண்டு சித்ரவதைக் குறித்து நடந்த சர்வதேச அளவிலான மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில், பல்வேறு நாடுகளால் பரிந்துரைகள் வைக்கப்பட்டன. இதனால், கடந்த 2010-ம் ஆண்டு 'ஏழு சிறு பிரிவுகள் கொண்ட சித்ரவதை குறித்த ஒரு சிறிய மசோதா' பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஒரு சடங்காகவே தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அப்போதிருந்த காங்கிரஸ் அரசும் அதற்குப் பின் வந்த பா.ஜ.க அரசும் மேற்குறித்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து நிரந்தரச் சட்டமாக்குவதற்கான எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவேயில்லை" என்கிறார் விரிவாக.

"கடந்த மே 04 - 2017 அன்று 'உலக நாடுகளில் மனித உரிமைகள் நிலை' குறித்து ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா-வின் மீளாய்வுக் கூட்டத்தில், இந்தியாவிடம் 41 நாடுகள், சித்ரவதையை ஒழிப்பதற்காக என்னென்ன  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்ற கேள்விகளை எழுப்பியுள்ளன. இதற்குப் பதிலளித்த இந்தியா, 'தற்போது இதற்கான செயல்பாடுகள் அனைத்தும் சட்ட ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளன' என்று மழுப்பலான பதிலளித்துள்ளது. இதே மீளாய்வுக் கூட்டத்தில், இந்தியாவிடம் மேலும் 250 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இவற்றில் ஒன்றைக்கூட இந்தியா உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான் வருகிற செப்டம்பர் மாதம் – 2017-ல் நடக்கவிருக்கும் ஐ.நா-வின் மனித உரிமைகளுக்கான 36-வது கூட்டத்தொடரில், இந்தியா மேற்கண்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது" என்கிறார் மனித உரிமைக் கல்வி நிறுவனத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரா.சொக்கு. 

சித்ரவதைக்கு எதிரான ஐ.நா பிரகடனத்தைத் தழுவி, இந்தியா சட்டமியற்றவேண்டியது உடனடிக் கடமையாகும். இதன்வழி ஐ.நா உடன்படிக்கை குறித்தக் கல்வியைச் சிறைத்துறை, காவல்துறைக்கு, அரசு போதிக்க வேண்டும். ஏனெனில், சிறைச்சாலை என்பது, சித்ரவதை சாலையல்ல... ஒரு குற்றவாளியை மாணவர் போல கருதி, மனம் திருத்தி முழு மனிதராக மாற்றும் பாடசாலை!

தட்டிக்கொடுப்பதே ஆசிரியரின் அறம்... தண்டிப்பதல்ல!

அடுத்த கட்டுரைக்கு