Published:Updated:

''மாற்றுப்பாலினத்தவரின் உணர்வுகளை உலகம் புரிந்துகொள்ள வேண்டும்'' - சர்வதேச அளவில் ஒலித்த தமிழ்க் குரல்!

''மாற்றுப்பாலினத்தவரின் உணர்வுகளை உலகம் புரிந்துகொள்ள வேண்டும்'' - சர்வதேச அளவில் ஒலித்த தமிழ்க் குரல்!
''மாற்றுப்பாலினத்தவரின் உணர்வுகளை உலகம் புரிந்துகொள்ள வேண்டும்'' - சர்வதேச அளவில் ஒலித்த தமிழ்க் குரல்!

னிதனுக்குள் நிகழும் பாலியல் வேறுபாடுகளுக்கு (மாற்றுப்பாலினத்தினர்) ஹார்மோன் கலப்பு விகிதம் மற்றும் பிறப்பிலேயே உருவாகும் இயல்புகள் காரணம். இதுபோன்ற பால் மாறுபாட்டுடன் பிறப்பவர்கள், சமூகத்தில் சந்திக்கும் பிரச்னைகள் அதிகம். மனித உயிருக்கான மதிப்புகூட கிடைக்காமல் அவமானத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். வாழும் காலம் முழுவதும் ஒடுக்கப்பட்டும் பாலியல் ரீதியான சுரண்டல்களுக்கு ஆளாக்கப்பட்டும் பாவப்பட்ட வாழ்க்கையை வாழும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக, 'சிருஷ்டி' என்ற அமைப்பை 2011-ம் ஆண்டு தொடங்கி சிறப்பாக நடத்திவருகிறார், மதுரையைச் சேர்ந்த கோபி சங்கர். இந்த அமைப்பின் செயல்பாட்டுக்காக, காமன் வெல்த் விருது வாங்கியுள்ளார். ஆண், பெண் தவிர 58 வகையான பாலினங்களுக்கான தமிழ்ப் பெயர்களை இவர் சமர்ப்பித்துள்ளார். இவர் பட்டியலிட்டுள்ள பாலின வகையினர்களை ஃபேஸ்புக் நிறுவனம் தனது இணையதளத்தில் அங்கீகரித்து, பாலின வகைப்பாட்டுப் பட்டியலில் பயன்படுத்தியும் வருகிறது. 

பாலின சிறுபான்மையினர் உரிமைக்காகத் தொடர்ந்து போராடிவரும் கோபி சங்கர், ஸ்பெயின் நாட்டின் மார்ட்ரிட் என்ற இடத்தில் நடந்த 'வேர்ல்டு பிரைடு 2017' விழாவில் பங்கேற்று திரும்பியுள்ளார். இவர் ஒரு இன்டர்செக்ஸ் பெர்சன் என்பது குறிப்பிடத்தக்கது. பாலினக் குழப்பத்துடன் பிறப்பவர்களை, இடையலிங்கத்தவர் என்கின்றனர். இத்தகைய குழந்தை பிறந்ததும், ஆணாக வளர வேண்டுமா, பெண்ணாக வளர வேண்டுமா எனப் பெற்றோரால் முடிவுசெய்யப்படுகிறது. அதற்கான அறுவைசிகிச்சையை சிறு வயதிலேயே செய்துவிடுகிறார்கள். இதனால், அந்தக் குழந்தை வளர்ந்ததும் பல்வேறு பாலினக் குழப்பங்களைச் சந்திக்கிறது. தனக்குப் பிடித்த மாதிரி வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறது. எனவே, இடையலிங்கத்தவராகப் பிறக்கும் குழந்தை, பருவ வயதை அடைந்த பிறகு, எந்தப் பாலினத்தவராக விரும்புகிறதோ அந்தப் பாலினமாக மாற்றிக்கொள்ளும் அறுவைசிகிச்சையை செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்பதைச் சர்வதேச அரங்கில் வாதம் வைத்துள்ளார் கோபி சங்கர். வருங்காலத்தில் இது மசோதாவாக உருவாக்கப்பட்டு, சர்வதேச அளவில் சட்டமாகும் என்கிறார் கோபி சங்கர். 

தனது ஸ்பெயின் அனுபவங்கள் குறித்துப் பேசிய அவர் ''சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்னைகள் பற்றி இந்தியாவில் கண்டுகொள்ளாத நிலையே தொடர்கிறது. ஆண்டுக்குப் பத்தாயிரம் குழந்தைகள் இடையலிங்கத்தவராகப் பிறந்து, பெற்றோரின் விருப்பப்படி அறுவை சிகிச்சைக்கு ஆளாகின்றனர். இது அடிப்படை மனித உரிமை மீறல். இந்தப் பாலின சிறுபான்மையினர்களின் உரிமைகளுக்காக 'சிருஷ்டி' அமைப்பு தொடர்ந்து போராடுகிறது. 


எனது செயல்பாடுகளின் அடிப்படையில், சர்வதேச அளவில் நடத்தப்பட்ட பாலின சிறுபான்மையினர் உரிமைக்கான மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இப்படி ஒரு மாநாட்டில் கலந்துகொள்ளும் முதல் தமிழன் என்றபோதும், அதுபற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்தப் பயணத்துக்குத்துக்கான செலவுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பார்த்துக்கொண்டனர். எனது செலவுகளுக்காக இரவு பகலாக பதினைந்து நாள்கள் உழைத்து 30,000 ரூபாய் சம்பாதித்தேன். மாற்றுப்பாலினத்தவரின் வலிகளை இங்கு யாருமே புரிந்துகொள்வதில்லை என்பது மிகப்பெரிய வேதனை. அதற்காகப் போராடுகிறவர்களையும் கண்டுகொள்ளாத இந்தியாவின் பொது மனநிலை கவலைக்குரியது. 

'ஸ்பெயின் வேர்ல்டு பிரைடு 2017' விழாவானது எனது பல மனத்தடைகளையும் தகர்த்தது. பிரதமர்கள், அரசின் முக்கிய பொறுப்புகளில் உள்ள எல்லாருக்கும் ஒரே மாதிரியான அங்கீகாரம் வழங்கப்பட்டது. அனைவரும் எளிமையாகப் பழகினார்கள். ஒரு பிரதமரின் மனைவி, எனக்கான உதவிகளைச் செய்து ஆச்சரியப்படுத்தினார். இந்தியாவில் திருநங்கை பிரித்திகா யாஷினி காவல் ஆய்வாளரா இருப்பதைச் சொன்னதும் ஆச்சரியப்பட்டார்கள். அம்பேத்கர் எழுதிய சட்டத்தில், எல்லாரும் பொதுவான உயிர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். எல்லாப் பாலினத்தவரும் அதில் வந்துவிடுகின்றனர். ஆனால், சில நாட்டுச் சட்டங்களில் ஆண், பெண் தவிர வேற்றுப் பாலினத்தவருக்கு எந்த அங்கீகாரமும் இல்லை. இந்திய நாட்டின் நாகரிகம் அந்தளவுக்கு உயர்ந்ததாக உள்ளது என்று வியந்தார்கள். இந்தியாவில் மாற்றுப்பாலினத்தவருக்காக நடத்தப்பட்ட போராட்டங்களை ஏற்றுக்கொண்டார்கள். இடையலிங்கத்தவராகப் பிறக்கும் குழந்தையை, அதன் அனுமதியின்றி குறிப்பிட்ட பாலினமாக மாற்றக் கூடாது என்பதை முன்வைத்தேன். இந்த விஷயம் இனி சர்வதேச அளவில் கவனத்துக்குள்ளாக்கப்படும். இனி பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அந்த உரிமை கிடைக்க வேண்டும்’’ என்று அக்கறை நிறைந்த குரலில் சொல்கிறார் கோபி சங்கர்.