Published:Updated:

"மணல் கொள்ளை நடக்குற இடங்களைக் காட்டுறேன். நடவடிக்கை எடுப்பீங்களா சார்?" - கலெக்டரை அதிர வைத்த மாணவன்

"மணல் கொள்ளை நடக்குற  இடங்களைக் காட்டுறேன். நடவடிக்கை எடுப்பீங்களா சார்?" - கலெக்டரை அதிர வைத்த மாணவன்
News
"மணல் கொள்ளை நடக்குற இடங்களைக் காட்டுறேன். நடவடிக்கை எடுப்பீங்களா சார்?" - கலெக்டரை அதிர வைத்த மாணவன்

"மணல் கொள்ளை நடக்குற இடங்களைக் காட்டுறேன். நடவடிக்கை எடுப்பீங்களா சார்?" - கலெக்டரை அதிர வைத்த மாணவன்

"அந்தக் காலத்துல ஆசிரியர்கிட்ட கேள்வி கேட்கவே பயந்தோம். இப்போ உள்ள பசங்க கலெக்டருகிட்டயே, அதுவும் கான்ட்ரவெர்ஸியான கேள்வியைக் கேட்கிறாங்க. ஸ்ட்ராங்கான ஜெனரேஷன்தான் இப்ப உள்ள பசங்க" என்று அந்த மாணவனைப் பார்த்துக் மாவட்ட ஆட்சியரும் அரசு பள்ளி ஆசிரியர்களும் மெச்சினார்கள். 'அவர்கள் மெச்சும் அளவுக்கு அந்த மாணவன் என்ன பண்ணினான்?' என்றுதானே கேட்கிறீர்கள்? விஷயம் இதுதான்...

வாக்காளர் அடையாள அட்டை பதிவு சம்பந்தப்பட்ட விழிப்புஉணர்வு நிகழ்ச்சி ஒன்றுக்காக பள்ளிக்கூடத்துக்கு வந்திருந்த மாவட்ட ஆட்சியரிடம், ''சார், இந்த மாவட்டத்துல எங்கெங்கே மணல் கொள்ளை நடக்குதுன்னு எனக்குத் தெரியும். அந்த இடங்களைக் காட்டுறேன். நடவடிக்கை எடுப்பீங்களா சார்?'' என்று மாணவன் ஒருவன் கேட்க, ஆட்சியரும் பள்ளி ஆசிரியர்களும் திகைத்துப் போனார்கள். சில விநாடிகளில் சுதாரித்துக்கொண்ட ஆட்சியர், "நீ பெரிய விசயமா பேசுற. அத பேசுற இடம் இது இல்லை. நீ வந்து கம்ப்ளைன்ட் கொடு. நாம தனியாப் பேசிக்குவோம்" என்று பேசி சூழலை சகஜமாக்கினார். 

இந்த நிகழ்வு நடந்த இடம்... கரூர் மாவட்டம் தாந்தோணிமலை ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணையில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளி. கேள்வி கேட்ட மாணவன், அந்தப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவரும் ராஜேஷ். பதிலளித்த மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வெள்ளியணை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழிப்புஉணர்வு நிகழ்ச்சியில், அருகில் உள்ள ஊர்களைச் சேர்ந்த மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவிகளும் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ், ''பதினாறு, பதினேழு வயதுகளில் இருக்கும் மாணவர்கள் பதினெட்டு வயது நிரம்பியதும் மறக்காமல், வாக்காளர் அடையாள அட்டைக்காக தங்களது பெயரைப் பதிவு செய்து, அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டின் உரிமைகளை நாம் பெறுவதோடு, முழுமையான குடிமகனாக மாற முடியும்'' என்று பேசினார். அதன்பிறகு, ஆட்சியர் என்ன நினைத்தாரோ, பள்ளி தலைமை ஆசிரியரை அழைத்து, ''மாணவர்களோடு ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தலாமே?'' என்றார். தலைமை ஆசிரியரும் ஆர்வமாகி, உரிய ஏற்பாடுகளைச் செய்தார். 

அப்போது ஆட்சியர் கோவிந்தராஜ் மாணவர்களைப் பார்த்து, "உங்க வருங்கால லட்சியம் என்ன? என்ன படிக்கணும், எந்த வேலைக்குப் போகணும்னு முடிவு பண்ணிட்டீங்களா?" என்று கேட்டார். அப்போது எழுந்த ஒரு மாணவி, "சார் எனக்குக் கலெக்டர் ஆகணும்னுதான் ஆசை. இப்போ நாட்டுல நடக்குற விசயங்களைப் பார்க்கும்போது, என்னால ஒரு சாஃப்ட்வேர் கம்பெனிக்குள்ள கைநிறையச் சம்பளம் வாங்கிட்டு உட்கார்ந்திருக்க முடியாது. நாட்டுல நடக்குற தப்புகளை ஒடுக்குற பவர்புஃல் கரங்கள் எனக்கு வேணும். அதுக்கு நான் கலெக்டரா இருக்கணும்" என்று சொல்ல, அந்தப் பதிலில் அசந்துபோனார் ஆட்சியர். அடுத்து எழுந்த மற்றொரு மாணவி, "சார் எனக்கும் கலெக்டராகணும்ங்கிறதுதான் சின்ன வயசில் இருந்தே மனசுக்குள் விதையா கெடக்குற லட்சியம். கலெக்டராவதற்கு எப்படிப் பிரிப்பேர் பண்ணணும், தேர்வுகள் எந்த மாதிரி இருக்கும், நீங்க எப்படிக் கலெக்டரானீங்க?" என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகளை வீசினார். 

அவற்றை உள்வாங்கிக் கொண்ட ஆட்சியர், "மனசை ஒருநிலைப்படுத்தி, 'நான் கண்டிப்பாகக் கலெக்டராகியேத் தீருவேன்'ங்கிற லட்சிய வெறியை மனசுக்குள்ள வச்சுக்கிட்டு தினமும் வெறும் 5 மணி நேரம் படித்தால்கூடப் போதும். வதவதன்னு கண்டதையும் படிக்காம, எதைப் படிக்க வேண்டும்ங்கிற புரிதலோடு படிக்கணும். அதோடு, நுனி புல் மேயாம, மனதில் பதியிற அளவுக்கு ஆழமா படிக்கணும். அன்றாட உலக நிகழ்வுகளை மனதில் அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கணும். இப்படியே பண்ணினால், கடைசியில் நீங்களும் என்னை மாதிரி கலெக்டர் ஆவீர்கள். அதேபோல், கலெக்டர் தேர்வில் பிரைமரி, மெயின், இன்டர்வியூனு பலகட்ட தேர்வுகள் இருக்கு. நீங்கள் விருப்பப்பட்ட பாடத்தை, தமிழிலேயே எழுதும் வாய்ப்பும் உள்ளது. விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், தளராத ஆர்வமும் இருந்தால், வெற்றி உங்களுடையதே. 

நான் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவன். கலெக்டராகணும்ங்கிற வெறி அஞ்சு வயதில் இருந்தே என் மனதில் வேரா, விழுதா விழுந்து கெடந்துச்சு. அதனாலேயே என்னால ஆக முடிஞ்சது. அப்போ, எனக்கு வழிகாட்டக்கூட ஆள் கிடையாது. நான் ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயாராகத் தேவையான புத்தகங்கள் வாங்க காசு இருக்காது. காசு இருந்தாலும், அந்த புக்குகள் எளிதா கிடைக்காது. இப்படி எல்லாத் தடைகளையும் கடந்து, 'நான் என் லட்சியத்தில் நிச்சயம் ஜெயிப்பேன்'னு மனதில் வைத்திருந்த உறுதிதான் என்னைக் கலெக்டராக்கியது. ஆனா இப்போ அப்படியில்லை. எல்லா விசயங்களும் எளிதா கிடைக்குது. வீட்டுக்குள் இருந்துகொண்டு இரண்டு நிமிடங்களில் எந்தத் தகவலையும் பெற கூடிய அளவுக்கு டெக்னாலஜி இருக்கு. உங்க மனசுல உண்மையா ஐ.ஏ.எஸ் ஆவணும்ங்கிற லட்சியம் மட்டும் இருந்தா போதும். நீங்களும் ஐ.ஏ.எஸ்-தான்" என்றவர், மாணவர்களைப் பார்த்து, "மாணவிகளே பேசுகிறார்களே, உங்க பக்கம் இருந்து எதுவும் கேள்விகள் இல்லையா?" என்று மாணவர்களைப் பார்த்துக் கேட்டார்.  

உடனே, பதினோறாம் வகுப்பு படிக்கும் ராஜேஷ் என்ற மாணவன் எழுந்து, "ஐ.ஏ.எஸ் ஆனா எந்தத் தப்பையும் தட்டிக் கேட்கலாம்னு மாணவிகள் சொன்னாங்க. இந்த மாவட்டத்துல ஓடும் காவிரியை சுத்தி நீராதாரம் அதல பாதாளத்துக்குப் போயிடுச்சு. அந்தளவுக்கு காவிரியில் பல இடங்களில் மணல் கொள்ளை நடக்குது. எங்கெங்கே மணல் கொள்ளை நடக்குதுன்னு எனக்குத் தெரியும். அந்த இடங்களைக் காண்பிக்கிறேன். நடவடிக்கை எடுப்பீங்களா சார்?" என்று கேட்க, கலெக்டரும், ஆசிரியர்களும் அதிர்ந்துபோனார்கள். வேர்த்து விறுவிறுத்துப்போன ஓர் ஆசிரியர் அவனை அதட்டி உட்கார வைக்க முயல, அவரைத் தடுத்த கலெக்டர் கோவிந்தராஜ் சிரித்துக்கொண்டே, "நீ பெரிய விசயமா பேசுற. அதுக்கு இது சரியான இடம் இல்லை. என் ஆபீஸ் வந்து கம்ப்ளைன்ட் கொடு. நாம தனியாப் பேசிக்குவோம்" என்று சொல்லி, அந்த இடத்தைச் சகஜமாக்கினார். நிகழ்ச்சி முடிந்ததும், ஆசிரியர்களிடம் விடைபெற்ற கலெக்டர் கோவிந்தராஜ் ''இப்போ உள்ள பசங்க யாரிடமும் பயப்படாமல் கேள்வி கேட்கும் ஸ்ட்ராங்கான ஜெனரேஷனாக இருக்கிறார்கள். அது நல்ல விசயம்தான்" என்று சிலாகித்தபடி, கரூருக்குக் கிளம்பினார்!