Published:Updated:

``48 குழந்தைகளுக்கு அம்மா நான்" - நெகிழும் நடிகர் ஜார்ஜ் விஜய்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குடும்பத்துடன் ஜார்ஜ் விஜய்
குடும்பத்துடன் ஜார்ஜ் விஜய்

தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்து மாரி, விக்ரம் வேதா உட்பட பல திரைப்படங்களில் தனித்துவமான நடிப்பால் மிளிரும் நடிகர் ஜார்ஜ் விஜய் நெல்சனின் மறுபக்கம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"மத்தவங்களுக்கு உதவும்போது, அவங்க முகத்துல இருக்க சந்தோஷம், வாழ்றதுக்கான அர்த்தத்தை நமக்கு சொல்லும். மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கும். அந்த உணர்வுதான் இந்த 48 குழந்தைகளையும் எனக்கான உலகமாக்கியிருக்கு. இப்போதைக்கு இவங்க வாழ்க்கைக்கான சின்ன வெளிச்சம் நான். இவங்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொடுக்கிற பொறுப்பு எனக்கு இருக்கு. இவங்களுக்குத் தேவை உதவி மட்டும் இல்ல. அரவணைப்புடன்கூடிய வழிகாட்டுதலும்" - தன்னைச் சுற்றியிருக்கும் மனநலம் சார்ந்த சிறப்புக் குழந்தைகளின் ஆர்ப்பரிப்புடன் பேச ஆரம்பிக்கிறார் ஜார்ஜ் விஜய் நெல்சன்.

ஆதரவற்ற குழந்தைகள்
ஆதரவற்ற குழந்தைகள்

சின்னத்திரையில் காமெடி ஷோ மூலம் தன்னுடைய நடிப்புப் பயணத்தைத் தொடங்கியவர் ஜார்ஜ் விஜய். விக்ரம் வேதா, மாரி போன்ற திரைப்படங்களிலும் தன்னுடைய அழுத்தமான நடிப்பால் அசத்தியவர். நடிகர் என்பதைத் தாண்டி மனநலம் பாதித்த சிறப்புக் குழந்தைகளுக்குள் இருக்கும் திறனை பயிற்சிகள் மூலம் மேம்படுத்தி, அவர்களுக்கான அடையாளத்தை மேடை நிகழ்ச்சிகள் மூலம் உருவாக்கிக் கொடுத்து வருகிறார் ஜார்ஜ். இது குறித்து அவருடன் ஒரு உரையாடல்.

"எனக்கு சொந்த ஊரு ராமநாதபுரம். திறமையை மட்டுமே நம்பி எதிர்காலத்தைத் தேடின நடுத்தர குடும்பத்துப் பையன். சின்ன வயசிலேயே மேடை மீது ஆசை அதிகம். ஸ்கூல் படிக்கும்போது பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, நாடகம்னு கிடைக்கிற எந்த வாய்ப்பையும் விடமாட்டேன். மேடையில் இருக்கும்போது, கிடைக்கிற கைதட்டல், உலகத்தையே ஜெயிச்ச மாதிரி இருக்கும். அந்தக் கைதட்டல் சத்தத்தை மட்டுமே நம்பிக்கையாக்கி வாழ்க்கையில் இவ்வளவு தூரம் வந்துட்டேன். உண்மையைச் சொல்லணும்னா சின்ன சின்ன மேடை நிகழ்ச்சிகள்கூட ஒருவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை உருவாக்கித் தரும்.

ஆதரவற்ற குழந்தைகள்டன் ஜார்ஜ்
ஆதரவற்ற குழந்தைகள்டன் ஜார்ஜ்

அப்படியான ஒரு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும்தான் இந்தக் குழந்தைகளுக்கு நான் உருவாக்கிக் தரணும்னு நினைக்கிறேன். இவங்களுக்கு தேவை காசு பணம் இல்ல. வாய்ப்புகள். தன்னைச் சுத்தி என்ன நடக்குது தெரியாத இவங்களால் அந்த வாய்ப்புகளைத் தேடி ஓட முடியாது. அதனால் வாய்ப்புகள் இவங்களைத் தேடி வர என்னால் முடிஞ்ச எல்லா முயற்சிகளையும் எடுத்துக்கிட்டு இருக்கேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்க இருக்க ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறமையிருக்கு. மத்த குழந்தைகளைவிட கொஞ்சம் மெதுவா கத்துப்பாங்க அவ்வளவுதான். பொதுவா சிறப்பு குழந்தைகளோட பெத்தவங்க குழந்தையை கஷ்டப்படுத்திறகூடாதுனு வேற எதையும் சொல்லிக் கொடுக்க யோசிப்பாங்க. ஆனா, அது தப்பு. இந்தக் குழந்தைகளுக்குப் பிடிச்சமான ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொடுக்கும்போது அவங்க அதுல நிச்சயம் சாதிப்பாங்க. இவர் பேரு அனிஷ் குமார். சூப்பரா பாடுவாரு." என்று ஜார்ஜ் முடிக்கும் முன்னரே, "கண்ணான கண்ணே" பாடலைத் தெளிவான உச்சரிப்பில் பாடி அசத்துகிறார் அனிஷ்.

அனிஷ் குமார்
அனிஷ் குமார்

எவ்வளவு சூப்பரா பாடுறாரு பாத்தீங்களா... சிறப்புக் குழந்தைங்கிற ஒரே காரணத்துக்காக இவங்க திறமையை ஒதுக்கிறதில் என்ன நியாயம் இருக்கு" என்று தன்னைச் சுற்றியிருக்கும் குழந்தைகளின் கைகளைப் பற்றிக்கொள்கிறார் ஜார்ஜ்.

"ஆரம்பத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்காகத்தான் என்னோட பயணம் தொடங்குச்சு. அவங்களுக்கு நடிப்பு, பாட்டு, டான்ஸ்னு அவங்க விருப்பப்படுகிறதை ஃபிரெண்ட்ஸ் மூலமா சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சேன். அந்தக் குழந்தைகளோட சேர்ந்து நிறைய ஸ்டேஜ் ஷோ பண்ணிருக்கேன். நிகழ்ச்சி மூலமா கிடைக்குற மொத்த தொகையையும் வெச்சு அந்தக் குழந்தைகளுக்குத் தேவையானதை பண்ணிக் கொடுத்துருவேன். உதவியும் கிடைச்சுது. சமூகத்தில் அவங்களுக்கான அங்கீகாரமும் கிடைச்சுது.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு சமூகத்தில் நிறைய பேர்கிட்ட இருந்து உதவி கிடைக்குது. சிலர் குழந்தைகளைத் தத்துகூட எடுத்துக்கிறாங்க. ஆனா, எல்லா இடத்துலையும் ஒதுக்கப்படுறது சிறப்புக் குழந்தைகள்தாம். சிறப்பு குழந்தைகளுக்கு சரியான வழிகாட்டுதல் கொடுத்தா கண்டிப்பா அவங்களுக்கு நல்ல எதிர் காலத்தை அமைச்சு குடுக்க முடியும்னு தோணுச்சு. அதனால் நிறைய காப்பகங்கள் ஏறி இறங்குனேன். எந்த உதவியுமே கிடைக்காமலிருந்த திருவெற்றியூர் காப்பக குழந்தைகளுக்கு உதவி செய்ய ஆரம்பிச்சேன்.

Vikatan

இவங்ககிட்ட நெருங்கிப் பழக பழக ஒவ்வொருவர்கிட்டயும் பாட்டு, டான்ஸ், பேச்சுன்னு ஒவ்வொரு திறமை இருக்கிறதைப் புரிஞ்சுக்கிட்டேன். அதை வெளிக்கொண்டு வர, என் நண்பர்களோட சேர்ந்து குழந்தைகளுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சேன். 'ஸ்டார்ஸ் ஆஃப் சென்னை', 'ஸ்பெஷல் ஒலிம்பிக்' போன்ற ஸ்டேஜ் ஷோக்களை நடத்தி அதில் இந்தக் குழந்தைகளை பங்கெடுக்க வெச்சேன். நிறைய பேர் கைதட்டினதைப் பார்த்ததும் குழந்தைகள் ரெண்டு மடங்கு உற்சாகம் ஆயிட்டாங்க. அவங்க கத்துக்கிட்டதைவிட மேடையில் சூப்பரா பெர்ஃபாமன்ஸ் பண்ணாங்க. அந்த ஈவெண்ட்டில் கிடைத்த தொகையை வெச்சு குழந்தைகளுக்கு அவங்க திறமையை வளர்த்துக்க என்னென்ன தேவையோ அதையெல்லாம் வாங்கிக் கொடுத்தேன்.

அவங்களுக்காக ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சேன். குழந்தைகளோட திறமையை வீடியோவாக எடுத்து பதிவிட்டுக்கிட்டே இருப்பேன். எப்படியாவது எதுலையாவது அவங்க திறமைக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கணுங்கிறதுதான் என்னோட ஆசை. பெரிய பிரபலங்கள் முன்னாடி அந்தக் குழந்தைகளோட திறமை வெளிப்பட்டா குழந்தைகளோட எதிர்காலம் நல்லா இருக்கும்னு நிறைய செலிபிரெட்டிகளிடம் டேட் கேட்பேன். ஒரு சிலரைத் தவிர யாருமே ரெஸ்பான்ஸ் பண்ணல. வருத்தமா இருக்கும். ஒரு முறை தயங்கிட்டே தனுஷ் சார்கிட்டயும், அருண் விஜய் அண்ணண்கிட்டையும் குழந்தைகளோட நிகழ்ச்சி பத்தி சொன்னேன். ரெண்டு பேரும் குழந்தைகளுக்காக உதவி பண்ண வந்தாங்க. அருண் விஜய் அண்ணன் நிகழ்ச்சி ஆரம்பிச்சதில் இருந்து முடியுற வரை குழந்தைங்க கூடவே இருந்தாங்க. 'விக்டர், விக்டர்'னு ' என்னை அறிந்தால்' படத்தில் அண்ணன் நடிச்ச பேரைக் கூப்பிட்டு குழந்தைகள் கொண்டாடி தீர்த்துட்டாங்க. இப்போ கூட சில குழந்தைகள், ’நான் விக்டர் சார் முன்னாடி பாட்டு படிச்சேன், ஆடுனேன்’னு சந்தோசமா சொல்லுவாங்க. இந்தக் குழந்தைகளைப் பொறுத்தவரை அன்பைத் தவிர அவங்களுக்கு எதுவுமே பெரிசு கிடையாது

அருண் விஜய்யுடன் ஜார்ஜ்
அருண் விஜய்யுடன் ஜார்ஜ்

ஒவ்வொரு முறை நான் காப்பகத்துக்குள்ள போகும்போதும், என்னைப் பார்த்ததும் குழந்தைங்க ரொம்ப ஜாலியா ஆகிருவாங்க. நிறைய குழந்தைகள் என்ன 'ஒத்த ரோசா'னு தான் கூப்பிடுவாங்க. நான் போடுற எல்லா கெட்-அப்பையும் ரசிப்பாங்க. எபிசோடுகளைப் பார்த்து சிரிப்பாங்க. அதனால் நான் எந்த கெட்-அப் போடுறதையும் அசிங்கமா நினைக்கல. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இந்தக் குழந்தைகளுக்காக நான் இயங்குறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்தக் குழந்தைகளை மனநலம் குன்றியவங்கனு சொல்றதை விட, வாழ்நாள் முழுக்க பூமியில் சந்தோஷமா வாழ வந்தவங்கனு தான் சொல்லணும். இந்தக் குழந்தைகளுக்கு அம்மா ஸ்தானத்திலிருந்து என்னால் முடிஞ்ச உதவிகளை உயிர் இருக்க வரை செஞ்சுட்டே இருப்பேன். உலகத்தை அன்பால் நிறைப்போம்" எனக் குழந்தைகளுடன் விடைபெறுகிறார் ஜார்ஜ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு