Published:Updated:

`சிவப்பரிசி பொங்கல்; ஈழத்துக் கவிஞரின் வரிகள்!’- பாரம்பர்ய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அசத்திய தம்பதி

பாரம்பர்ய முறையில் பிறந்தநாள் விழா
பாரம்பர்ய முறையில் பிறந்தநாள் விழா

கேக் வெட்டுவதற்கு மாற்றாக, தமிழர்களின் பாரம்பர்ய நெல் ரகமான குள்ளக்கார் சிவப்பரிசியில் செய்யப்பட்ட சர்க்கரைப் பொங்கலை குழந்தைக்கு ஊட்டி மகிழ்ந்து விழாவை தொடங்கியிருக்கிறார்கள்.

பிறந்தநாள் விழா என்று சொன்னாலே கேக், மெழுகுவத்தி, சாக்கேட், ஹேப்பி பர்த் டே பாடல் இடம் பெறுவது வழக்கமாகிவிட்டது. இதெல்லாம் இல்லாத ஒரு பிறந்தநாள் விழாவைக் காண்பது அரிதிலும் அரிதானது. பிறந்தநாள் கொண்டாட்டங்களில் இவை இன்றியமையாதவை ஆகிவிட்டன. இந்நிலையில்தான் மன்னார்குடியைச் சேர்ந்த ஒரு தம்பதியர், தனது குழந்தையின் முதல் வருடப் பிறந்தாள் விழாவை பாரம்பர்ய முறையில் கொண்டாடி அசத்தியிருக்கிறார்கள். இதில் இடம்பெற்ற அனைத்து அம்சங்களுமே பாரம்பர்ய முறையில் இருந்ததால், பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

`சிவப்பரிசி பொங்கல்; ஈழத்துக் கவிஞரின் வரிகள்!’- பாரம்பர்ய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அசத்திய தம்பதி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர்கள் கார்த்திகேயன் -இனியா தம்பதியர். இவர்களது குழந்தை இமயவரம்பன் இலராவின் முதல் ஆண்டு பிறந்தநாள் விழாவிற்குச் சென்ற குடும்ப நண்பர்கள், உறவினர்களுக்கு முற்றிலும் வித்தியாசமான, இன்ப அனுபவம் நிகழ்ந்திருக்கிறது. மெழுகுவத்தி ஊதி அணைப்பதற்கு மாற்றாக, குத்து விளக்கு ஏற்றப்பட்டது. கேக் வெட்டுவதற்கு மாற்றாக, தமிழர்களின் பாரம்பர்ய நெல் ரகமான குள்ளக்கார் சிவப்பரிசியில் செய்யப்பட்ட சர்க்கரைப் பொங்கலை குழந்தைக்கு ஊட்டி மகிழ்ந்து விழாவைத் தொடங்கியிருக்கிறார்கள்.

வழக்கமான பிறந்தநாள் விழாக்களில் ஹேப்பி பர்த் டே டு யூ பாடல் பாடுவார்கள். ஆனால், இங்கு கவிஞர் அறிவுமதி எழுதி, பாடகர் உன்னிகிருஷ்ணன் மகள் உத்ரா உன்னிகிருஷ்ணன் பாடிய, `நீண்ட காலம் - நீ நீடூழி வாழ வேண்டும். வானம் தீண்டும் தூரம், நீ வளர்ந்து வாழ வேண்டும். எட்டுத் திக்கும் புகழ வேண்டும். எடுத்துக்காட்டு ஆகவேண்டும்’ என்ற பாடல் பாடப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு விருந்து உபசரிப்பாக, குள்ளக்கார் சர்க்கரைப் பொங்கலோடு, வரகரிசி போண்டா, சீரக சம்பா பிரியாணி, நவதானிய சுண்டல், காய்கறி சூப் வழங்கி உபசரித்திருக்கிறார்கள். முற்றிலும் வித்தியாசமாகப் பாரம்பர்ய முறையில் கொண்டாடப்பட்ட இந்தப் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடி, விழாவிற்கு வந்திருந்தவர்களைநெகிழ வைத்த இனியா கார்த்திகேயனிடம் நாம் பேசியபோது ‘’வித்தியாசமா பிறந்தநாள் விழா கொண்டாடணுங்கறது எங்களோட நோக்கம் கிடையாது. கேக் வெட்டுறது ஆங்கிலேய வழக்கம். அதுமட்டுமல்லாம, இது உடலுக்கும் நல்லதல்ல. என்னோட அப்பா பாரதிச்செல்வன் ஒரு டாக்டர். கேக் சாப்பிடுறதுனால ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி அறிவியல்பூர்வமா சொல்லியிருக்காங்க. ஆங்கிலேயே முறைப்படி கொண்டாடாமல், தமிழ்நாட்டோட பாரம்பர்ய முறையில் பிறந்தநாள் கொண்டாடலாம்னு ஒரு யோசனையும் சொன்னார்.

லொக்கேஷன் லீலா பேலஸ்... ஷாலினிக்கு அஜித் கொடுத்த பிறந்தநாள் சர்ப்ரைஸ்!

ஆரம்பத்துல எனக்கு இதுல ஒரு சின்ன தயக்கம் இருந்துச்சு. ஆங்கிலேய முறைப்படி பிறந்தநாள் கொண்டாடுறது எந்தளவுக்கு அபத்தமானதுனு ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் சொன்ன விஷயங்களை, என்கிட்ட அப்பா சொன்னார். மகிழ்வான நிகழ்வுகளில் சர்க்கரைப் பொங்கல் பொங்கி உறவுகளுக்குக் கொடுத்து உண்பது தமிழர் பண்பாடு. பிறந்தநாளில் குழந்தையின் கையில் காயப்படுத்தும் கத்தியைக் கொடுக்கலாமா? ஒற்றுமையை உணர்த்தவேண்டிய நாளில் குழந்தையின் பெயர் பொறிக்கப்பட்ட கேக்கை துண்டு துண்டாக வெட்டலாமா? விழாக்களில் விளக்கேற்றுவது தமிழர் பண்பாடு. பிறந்தநாளில் மெழுகுவத்தி ஒளியை அணைக்கலாமானு கவிஞர் காசி ஆனந்தன் சொன்ன விஷயங்கள் எங்களை யோசிக்க வெச்சது. அதனால்தான் இப்படி கொண்டாடினோம். இந்த ஆண்டுமட்டுமல்ல. இனிமே எங்க இமயவரம்பனுக்கு எப்போதுமே இப்படிதான் கொண்டாடுவோம்” என்றார். இவ்விழாவிற்கு வந்திருந்தவர்களில் பலர், நாமும் இனிமே இதுமாதிரியே கொண்டாடலாம் என நெகிழ்ந்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு