Published:Updated:

``ஆர்டர் வரலை; ஆனா, ஏழைகளின் பசியைப் போக்குவதில் மகிழ்ச்சி!” – உணவு சேவையில் தொழிலதிபர்

குனித் சிங்லா (gunit singla)
குனித் சிங்லா (gunit singla)

ரஜினி, விஜய் உட்பட பல பிரபலங்களின் வீடுகளுக்கும் தனிப்பட்ட முறையில் உணவு தயாரித்துக்கொடுப்பதால் பிரபலமானவர், குனித் சிங்லா.

சென்னையைச் சேர்ந்த குனித் சிங்லா, கேட்ரிங் தொழில் செய்துவரும் தொழிலதிபர். ரஜினி, விஜய் உட்பட பல பிரபலங்களின் வீடுகளுக்கும் தனிப்பட்ட முறையில் உணவு தயாரித்துக்கொடுப்பதால் பிரபலமானவர். கொரோனா லாக்டெளனால் இவருக்கு கேட்ரிங் ஆர்டர்கள் வருவது தடைப்பட்டிருக்கிறது. ஆனாலும் இவரது நிறுவனத்தில் தினமும் சமையல் நடக்கிறது. அந்த உணவு, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றோரின் பசியைப் போக்குகிறது. இதுவரை 65,000 பேருக்கு உணவு சமைத்துக்கொடுத்திருக்கிறார், குனித் சிங்லா. இது குறித்து அவரிடம் பேசினோம்.

உணவு தயாரிக்கும் பணி
உணவு தயாரிக்கும் பணி

``கொரோனா லாக்டெளன் தொடங்கிய பிறகு என் நிறுவனத்துக்கு ஆர்டர்கள் வருவது தடைப்பட்டுச்சு. அதேநேரம் உணவின்றி தவிக்கும் பலதரப்பட்ட மக்களுக்குச் சில தன்னார்வலர்களும் அமைப்புகளும் உணவு கொடுத்து உதவுகின்றன. அவர்களில் சிலர் என்னை அணுகினர். நானும் சிலரிடம் வேண்டுகோள் விடுத்தேன். அதன்படி அன்றாட சமையலுக்கான அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருள்களை அவங்களே வாங்கிக் கொடுத்துடுவாங்க. என் நிறுவன ஊழியர்களைக் கொண்டு சமைச்சுக்கொடுப்பேன். மேலும், எரிபொருள், பேக்கிங் செலவுகள் என்னுடையது.

தினமும் மதியம் மற்றும் இரவுக்குத் தரமான உணவைச் சமைத்து பேக்கிங் செய்வோம். சம்பந்தப்பட்டவர்கள் என் நிறுவனத்துக்கு வந்து உணவை எடுத்துட்டுப் போயிடுவாங்க. அந்த உணவுகள் பெரும்பாலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்ற மக்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. இருதரப்பிலும் சேவை நோக்கில் செய்வதால், இந்தப் பணிகளுக்குப் பணம் கொடுக்கல் வாங்கல் எதுவும் நடைபெறாது.

உணவு தயாரிக்கும் பணி
உணவு தயாரிக்கும் பணி

தினமும் 3,000 பேருக்குக் குறையாமல் உணவுச் சமைத்துக்கொடுக்கிறோம். கடந்த ஒரு மாசத்துல 65,000-க்கும் மேற்பட்டோருக்கு உணவுச் சமைத்துக்கொடுத்திருக்கோம்” என்பவர், ஆலந்தூர், பள்ளிக்கரணை பகுதிகளிலுள்ள 200-க்கும் அதிகமான தெரு நாய்களுக்கும் தினமும் உணவு சமைத்துக்கொடுக்கிறார்.

``என் நிறுவனத்தில் 65 ஊழியர்கள் வேலை செய்றாங்க. அதில் வட இந்தியர்களான 35 பேர் என் நிறுவனத்திலுள்ள விடுதியில்தான் தங்கியிருக்காங்க. அவங்களுக்குத் தங்குமிடம், உணவு இலவசம்தான். முன்பைவிட இந்த லாக்டெளனில் ஊழியர்களுக்கு அதிக வேலை இல்லை. இருந்தாலும் சம்பளம் கொடுக்கிறேன். கூடவே, சினிமா பார்க்க, உடற்பயிற்சி செய்ய, குடும்பத்தினருடன் பேச, விளையாட அட்டவணை போட்டிருக்கிறோம். கூடவே அவர்களுடன் தினமும் நாலு முறை வீடியோவில் பேசி ஊக்கப்படுத்துறேன். இதனால ஊழியர்கள் மனச்சோர்வில்லாம மகிழ்ச்சியா இருக்காங்க.

தயார் செய்யப்பட்ட உணவுகள்
தயார் செய்யப்பட்ட உணவுகள்

தற்சமயம் என் நிறுவனத்துக்கு ஆர்டர்கள் வருவது கணிசமாகக் குறைஞ்சிருக்கு. அதனால எனக்கு வருத்தமில்லை. அதேநேரம் என் நிறுவனத்தின் மூலம் ஏழை மக்கள் மற்றும் தெரு நாய்களின் பசியைப் போக்க உதவ முடியுது. இதனால அளவில்லாத மனநிறைவு கிடைக்குது” என்று உற்சாகமாகக் கூறுகிறார், குனித் சிங்லா.

அடுத்த கட்டுரைக்கு