திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறப்படுவதுண்டு. ஆனால், பெரும்பாலான திருமணங்கள் நிஜத்தில் அப்படி நடப்பதில்லை. தாங்கள் சார்ந்துள்ள சாதி, மதத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு திருமணங்கள் நடத்தும் பல குடும்பங்கள் இன்றளவும் சமூகத்தில் உள்ளன. விரும்பிய வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் உரிமையை, சாதி, மதங்களின் பேரால் பலரும் பறித்துவிடுகின்றனர்.

கலப்பு மணங்களை ஏற்றுக்கொள்ள இந்தச் சமூகம் இன்னமும் தயங்குகிறது. அதே நேரம், பெரியார் போன்றவர்கள் விதைத்துச் சென்ற புரட்சியால் இன்று கலப்பு மணம் புரிந்து, சாதி ஒழிப்புக்கு வித்திடுவோர் எண்ணிக்கையும் பெருகியுள்ளது. ``மாடும் மனிதனுமா திருமணம் செய்துகொள்கிறார்கள்? மனிதர்களுக்குள் திருமணம் செய்துகொண்டால் அது எப்படி கலப்புத் திருமணம் ஆகும்? " என்று கேட்டவர் தந்தை பெரியார்.
இதை நிரூபிக்கும் பொருட்டு, சென்னை, கிண்டியில் அமைந்துள்ள காந்தி மண்டபத்தில் நேற்று முன் தினம் (ஜன. 22) அரசுசாரா நிறுவனமான Younited சார்பில், `கலகலப்பு-100' என்ற நிகழ்வு நடைபெற்றது.
`கலகலப்பு 100'-ன் முக்கிய நிகழ்வாக, காதல் தம்பதியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, அவர்கள் தங்களது காதல் அனுபவங்களை அங்கு வந்திருக்கும் மற்ற தம்பதிகளுடன் சுவைபட பரிமாறிக்கொண்டனர்.

இதன் தொடக்கமாக, காதல் தம்பதிகளுக்கு இடையே கண்ணாமூச்சி விளையாட்டு நடத்தப்பட்டது. மேலும், யாருடைய காதல் சிறந்தது என்று நிரூபிக்கும் வகையில் பல்வேறு சோதனை விளையாட்டுகளும் சுவாரஸ்யமாக நடைபெற்றன.
குழந்தைகளையும் குடும்பங்களையும் குதூகலப்படுத்தும் வகையில், தமிழகத்தில் அழிந்து வரும் பாரம்பர்ய விளையாட்டுகளான பல்லாங்குழி, பம்பரம், பரமபதம், தாயம் போன்றவற்றைப் பலரும் ரசித்து விளையாடினர்.
அரங்கத்தில் கூடியிருந்தவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் `ஸ்டூடன்ட் ஆர்ட்டிஸ்ட் ஃபெடரேஷன்' (Student Artist Federation) அமைப்பினரால் பறையாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மான் கொம்பு சண்டை, சிலம்பாட்டம் போன்ற தமிழர்களின் பாரம்பர்ய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக `ஜெய் பீம்' திரைப்பட இயக்குநர் ஞானவேல், எழுத்தாளர் ஸ்ரீதர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர். இயக்குநர் ஞானவேல், சமத்துவம், சாதி, மதம், கலப்புத் திருமணம் பற்றி தம்பதியர்களிடையே உரையாடினார். மேலும், சாதி என்னும் தலைப்பில் குறும்பட போட்டிக்கான பதிவு குறித்த அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து பேசிய எழுத்தாளர் ஸ்ரீதர் சுப்பிரமணியன், கலப்புத் திருமணத்தின் அறிவியல்பூர்வ நன்மைகள் குறித்து அங்கு கூடியிருந்தவர்களுக்கு விளக்கமளித்தார்.
தொடர்ந்து, பாலினம் தொடர்பாக மக்களிடையே உள்ள தவறான கருத்துகளை மாற்றும் வகையில், உளவியல் ஆலோசகர் ராகினி, உரையாடினார். நிகழ்ச்சியின் இறுதியாக, அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் முதல் பாலின தம்பதி திருநங்கை ஸ்ரீஜா மற்றும் அவருடைய கணவர் அருண் ஆகியோர், தங்களது காதல் வாழ்க்கை குறித்தும், அவர்கள் கடந்து வந்த பாதை குறித்தும் பேசியது, அரங்கத்தில் உள்ளவரை மனம் நெகிழச் செய்தது.

சாதி, மதத்தின் பெயரால் தனி மனித உரிமைக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்களுக்கு மத்தியில் காதலில் சாதி, மதம் கிடையாது; அன்பு ஒன்றே போதும் என்று உரக்கச் சொல்லியது இந்தக் `கலகலப்பு-100'. சாதி, மதத்தைக் கடந்ததுதான் காதல் என்று நம்புபவர்களுக்கு, இதுவோர் இனிய தொடக்கமே!