Published:Updated:

``கலைப்பொருள்களை உலக அளவில் பரப்பியவர்கள் தமிழர்கள்!''- சென்னை `செவாலியர்' விருது நிகழ்ச்சி ஹைலைட்ஸ்

`செவாலியர்' விருது நிகழ்ச்சி
`செவாலியர்' விருது நிகழ்ச்சி

``பாரம்பர்ய கலைப்பொருள்களுக்கான முக்கியத்துவம் அழியாமல் பார்த்துக்கொள்ளும் நாடு இந்தியா."

டிஜிட்டல் யுகத்தில் கைவேலைப்பாடுகளுடன் கூடிய எம்பிராய்டரிங் துணிகளைத் தயாரிப்போர் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் கைவேலைப்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறது `வஸ்திரகலா' நிறுவனம். வீடு மற்றும் நிறுவனங்களின் உள் அலங்காரத் தேவைகளுக்கான இன்டீரியர் துணி வகைகளையும் இருபாலருக்கான ஃபேஷன் ஆடைகளையும் இந்த நிறுவனம் உற்பத்தி செய்கிறது. 

`செவாலியர்' விருது நிகழ்ச்சி
`செவாலியர்' விருது நிகழ்ச்சி

கைவேலைப்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்தத் தொழில் மூலம் ஏராளமான ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதுடன், பிரான்ஸ் நாட்டு எம்பிராய்டரிங் கைவேலைப்பாடுகளையும் உலகம் முழுக்கப் பரப்பி பெருமைப்படுத்தியதற்காக, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான `செவாலியர்' (chevalier de l'ordre des arts et des lettres) என்ற உயரிய விருதை இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான ஜீன் ஃபிரான்கோய்ஸ் லிசாஜூக்கு (Jean-François LESAGE) வழங்கப்பட்டது. இவருக்கு இந்த விருதினை, தமிழகம், பாண்டிச்சேரி மற்றும் கேரள மாநிலங்களுக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதரான கேத்ரின் ஸ்வார்டு (Catherine SUARD) வழங்கினார்.

மேலும், நீண்டகாலப் பணித்திறன் மற்றும் கைவேலைப்பாட்டுத் திறமைக்காக இந்நிறுவன ஊழியர்கள் இருவருக்கும் பிரான்ஸ் நாட்டின் `Médaille d'honneur du travail' என்ற விருதை வழங்கினார், கேத்ரின். சென்னையை அடுத்த திருமழிசையில் அமைந்துள்ள `வஸ்திரகலா' நிறுவனத்தில், இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று (பிப் -24) நடைபெற்றது. 

`செவாலியர்' விருது நிகழ்ச்சி
`செவாலியர்' விருது நிகழ்ச்சி
மகத்தான பெண்களுக்கு மரியாதை விழா!

ஊழியர்களுடன், பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் மற்றும் தொழில்துறையினர் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். விருதுகளை வழங்கிப் பேசிய பிரான்ஸ் நாட்டுக்கான இந்தியத் தூதர் கேத்ரின் ஸ்வார்டு பேசுகையில், "பாரம்பர்யக் கலைப்பொருள்களுக்கான முக்கியத்துவம் அழியாமல் பார்த்துக்கொள்ளும் நாடு இந்தியா. கைவினைப்பொருள்களுக்கான மதிப்பை உலக அளவில் பெருமைப்படுத்தியதில் தமிழர்களின் பங்கும் அதிகம்.

தமிழகத்தில் ஶ்ரீபெரும்புதூரில் கைவேலைப்பாடுகளுடன் கூடிய எம்பிராய்டரிங் தொழில் செய்துவருவோர் அதிகம் உள்ளனர். அதேநேரம் சிறிய அளவில் இந்தத் தொழில் செய்துவந்தவர்களில் 90 சதவிகிதம் பேர் வேறு வேலைக்குத் திரும்பும் அளவுக்கு வருத்தமளிக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. இருந்தபோதும், இந்தத் தொழில் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக 25 ஆண்டுகளுக்கும் மேலாக `வஸ்திரகலா' நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது.

`செவாலியர்' விருது பெறும் ஜீன் ஃபிரான்கோய்ஸ் லிசாஜ்
`செவாலியர்' விருது பெறும் ஜீன் ஃபிரான்கோய்ஸ் லிசாஜ்

கைவேலைப்பாடு பொருள்கள் நீடித்த ஆயுள் கொண்டவை. அவற்றுக்கும், இயந்திர வேலைப்பாடுகளின் மூலம் தயாரித்த துணிகளையும் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். கைவேலைப்பாடுகளில் உருவான துணிகளைப் பயன்படுத்தியவர்கள், தொடர்ந்து அதையேதான் விரும்புவார்கள்" என்றவர், இந்தியாவில் கைவேலைப்பாடுகளில் தயாராகும் எம்பிராய்டரிங் தயாரிப்புகளுக்கும் பிரான்ஸ் நாட்டுக்கும் இடையேயான தொழில் பந்தம் குறித்துப் பெருமையாகப் பேசினார்.

செவாலியர் விருது வென்ற ஜீன் ஃபிரான்கோய்ஸ் லிசாஜ், "இந்த நிறுவன ஊழியர்களால்தாம் எனக்கு இந்த விருது கிடைத்தது. நிறுவன வளர்ச்சிக்கும், இந்தத் தொழிலுக்கான முக்கியத்தும் குறையாமலும் இருக்க நீங்கள் அதிகம் உழைப்பைக் கொடுத்திருக்கிறீர்கள். நாம் இணைந்து இன்னும் நிறைய காலங்கள் உழைப்போம்" என்றார்.

விருது பெறும் மகேஷ் மணி
விருது பெறும் மகேஷ் மணி

சிறந்த பணித்திறனுக்கான விருது வென்ற இந்த நிறுவன ஊழியர் மகேஷ் மணி, "15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிறுவனத்தில் வேலை செய்கிறேன். இப்போது டிசைனிங் துறையில் மேலாளராக இருந்து, நிறுவன உற்பத்திப் பொருள்களுக்கான புதுப்புது டிசைன்களை உருவாக்கிக்கொடுக்கிறேன். நிறுவன முதலாளிகள் முதல் எல்லா ஊழியர்களும் கூட்டு முயற்சியுடன் இணைந்து வேலை செய்கிறோம். இதனால், நிறுவனத்தின் வளர்ச்சியை அதிகப்படுத்துவதுடன், மக்களுக்குத் தரமான பொருள்களைத் தொடர்ந்து வழங்க முடிகிறது. இதுதான் எங்களின் தொடர் வெற்றிக்குக் காரணம்" என்றார் மகிழ்ச்சியோடு.

பணித்திறனுக்கான விருது வென்ற மற்றோர் ஊழியரான கோபி நாராயணசாமி பேசுகையில், "முதலில் மரத்தடியில் துணிகளுக்கான கைவேலைப்பாடுகளைச் செய்துவந்த நிலையில், 23 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். முதலில் இன்டீரியர் வேலைகள் செய்துவந்த நிலையில், இப்போது ஃபேஷன் துணிகளுக்கான டிசைனிங் வேலைகளைச் செய்கிறேன்.

விருது பெறும் கோபி நாராயணசாமி
விருது பெறும் கோபி நாராயணசாமி
``இந்திய கைத்தறியின் பெருமையை உலகம் முழுதும்  சேர்த்தது `மகாநடி'!'' - ஆடை வடிவமைப்பாளர் கௌரங் ஷா

வாடிக்கையாளர் நிறுவனங்களின் தேவை மற்றும் நிறுவன முதலாளிகள் சொல்வதை ஏற்றுக்கொண்டு, என் திறனையும் வேலையில் புகுத்தி புதுப்புது டிசைன்களை உருவாக்கிக்கொடுக்கிறேன். அவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. எனவேதான் இன்று விருது கிடைத்தது. இன்னும் ஊக்கத்துடன் வேலை செய்ய இந்த விருது எல்லோருக்கும் ஊக்கமளிக்கும்" என்றார் உற்சாகத்துடன்.

பிரதிபா பாட்டில் குடியரசுத் தலைவராக இருந்தபோது, குடியரசுத் தலைவர் மாளிகைக்கான உள் அலங்காரத் துணி வகைகளைத் தயாரித்துக் கொடுத்தது உட்பட அரசியல், தொழில்துறை மற்றும் சினிமா பிரபலங்கள் பலருக்கும் இந்த நிறுவனம் துணி வகைகளைத் தயாரித்துக்கொடுத்திருக்கிறது. தவிர வெளிநாடுகள் பலவற்றுக்கும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் ஏற்றுமதியாகின்றன. 

மாளவிகா ஷிவக்குமார்
மாளவிகா ஷிவக்குமார்

இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான மாளவிகா ஷிவக்குமார் பேசுகையில், "1993-ம் ஆண்டு இந்த நிறுவனத்தைத் தொடங்கினோம். தொழில் போட்டிகள் மற்றும் கம்யூட்டர் டிசைனிங் முறைகள் அதிகமாகிவிட்ட நிலையிலும்கூட, தொடர்ந்து கைவேலைப்பாடுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, எங்கள் உற்பத்திப் பொருள்களைத் தயாரிக்கிறோம். மக்களையும் கலைத்திறனையும் நூலால் இணைக்கும் பாலமாகச் செயல்படுகிறோம். இந்தத் தொழிலைக் குழந்தையைப்போல நடத்திவருகிறோம். இந்தத் தொழிலுக்கும் எங்கள் நிறுவன வளர்ச்சிக்கும் எங்களுடைய ஊழியர்களே தூண்களாக இருக்கின்றனர். இன்று நடந்த விருது நிகழ்ச்சி, எங்களின் வருங்காலப் பணிக்கு ஊக்கமாக அமையும்" என்றார் புன்னகையுடன்.

அடுத்த கட்டுரைக்கு