Published:Updated:

போக்குவரத்து வாகனங்களுக்கு அடையாள எண்கள் எப்படி வழங்கப்படுகின்றன? | Doubt of Common Man

வாகன உரிம எண்
News
வாகன உரிம எண்

வாகன உரிம எண்களில்லாத வாகனங்களைச் சாலைகளில் இயக்குவது சட்டப்படி தவறானது என்றும் இந்தியப் போக்குவரத்துத் துறையின் விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது

விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் ராஜேஷ் என்ற வாசகர், "போக்குவரத்து வாகனங்களுக்கு அடையாள எண்கள் எப்படி வழங்கப்படுகின்றன?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
Doubt of common man
Doubt of common man

இந்தியாவில் சாலைகளில் இயக்கப்படும் அனைத்து வகையான வாகனங்களுக்கும் அடையாளமாக, இந்தியப் போக்குவரத்துத் துறையினால் வாகன உரிம எண்கள் (Vehicle Registration Numbers) வழங்கப்படுகின்றன. இந்த வாகன உரிம எண்களைத் தகட்டில் எழுதி வாகனங்களில் முன்புறம், பின்புறம் என்று இரு புறங்களிலும் பார்வைக்குத் தெரியும்படி பொருத்தி வைத்திருக்க வேண்டுமென்றும், வாகன உரிம எண்களில்லாத வாகனங்களைச் சாலைகளில் இயக்குவது சட்டப்படி தவறானது என்றும் இந்தியப் போக்குவரத்துத் துறையின் விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வாகன உரிம எண்கள் எப்படி வழங்கப்படுகின்றன? இந்த எண்களில் வாகனங்கள் எப்படி அடையாளப்படுத்தப்படுகின்றன என்பது போன்ற தகவல்கள் இங்கு தரப்பட்டிருக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வாகன உரிம எண்
வாகன உரிம எண்

வாகன உரிம எண்கள்

இந்தியாவில் வாகனங்களுக்கு உரிமம் வழங்கும் பணிகளை மாவட்ட / வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் செய்து கொண்டிருக்கின்றன. முன்பு இவ்வலுவலகங்கள், மூன்று ஆங்கில எழுத்துகளால் அடையாளப்படுத்தப்பட்டு, அந்த அலுவலகத்தால் வழங்கப்படும் வாகன உரிம எண்களில், அலுவலக அடையாளமாக மூன்று எழுத்துகளும், அதன் கீழாக நான்கு எண்களில் வாகனங்களுக்கான எண்களும் வழங்கப்பட்டு வந்தன. இம்முறையில், மாநிலம் / ஒன்றியப் பகுதிகளுக்கான அடையாளம் குறிக்கப்படாமலிருந்ததால், பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. அதன் பிறகு, வாகன உரிம எண்களில் மாநிலம் / ஒன்றியப் பகுதிகளின் அடையாளம் சேர்க்கப்பட வேண்டுமென்கிற கருத்து வலுப்பெறத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, மாநிலம் / ஒன்றியப் பகுதிகளுக்கு இரண்டு ஆங்கில எழுத்துகளின் அடையாளக் குறியீடு வழங்கிடத் தீர்மானிக்கப்பட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மாநிலம் / ஒன்றியப் பகுதி அடையாளக் குறியீடு

1980 ஆம் ஆண்டில் வாகன உரிம எண்களில் மாநிலம் / ஒன்றியப் பகுதிகளின் அடையாளமாக இரண்டு ஆங்கில எழுத்துகளைக் கொண்ட குறியீடு இடம் பெறத் தொடங்கியது. இந்தியாவிலுள்ள மாநிலம் / ஒன்றியப் பகுதிகளுக்கான அடையாளமாக வழங்கப்படும் சுருக்கக் குறியீடுகள் கீழே தரப்பட்டிருக்கின்றன.

  • ஆந்திரப்பிரதேசம் – AP

  • அருணாசலப் பிரதேசம் – AR

  • அசாம் - AS

  • பீகார் - BR

  • சத்தீஸ்கர் – CG

  • கோவா – GA

  • குஜராத் – GJ

  • அரியானா – HR

  • இமாசலப்பிரதேசம் – HP

  • ஜம்மு காஷ்மீர் - JK

  • ஜார்க்கண்ட் – JH

  • கர்நாடகம் – KA

  • கேரளம் – KL

  • மத்தியப்பிரதேசம் – MP

  • மகாராஷ்டிரம் – MH

  • மணிப்பூர் – MN

  • மேகாலயா – ML

  • மிசோரம் – MZ

  • நாகாலாந்து – NL

  • ஒடிசா – OR / OD

  • பஞ்சாப் – PB

  • இராஜஸ்தான் – RJ

  • சிக்கிம் – SK

  • தமிழ்நாடு – TN

  • திரிபுரா – TR

  • தெலங்கானா - TS

  • உத்தரகாண்ட் – UA / UK

  • உத்தரப்பிரதேசம் – UP

  • மேற்கு வங்காளம் – WB

Vehicle Registration Certificate
Vehicle Registration Certificate

இதே போன்று ஒன்றியப் பகுதிகளில்,

  • அந்தமான் நிக்கோபர் தீவுகள் – AN

  • சண்டிகர் – CH

  • தாத்ரா மற்றம் நகர் அவேலி – DN

  • டாமன் மற்றும் டியூ – DD

  • தில்லி – DL

  • இலட்சத்தீவுகள் – LD

  • புதுச்சேரி – PY

எனும் அடையாளக் குறியீடுகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.

மேற்காணும் மாநிலங்களுக்கான அடையாளக் குறியீடுகளில் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு UA, UK என்று இரு குறியீடுகள் இருக்கின்றன. இக்குறியீடுகள் உத்தரகாண்ட் மாநிலம் முன்பு உத்தராஞ்சல் என்று அழைக்கப்பட்டதால், UA எனும் அடையாளக் குறியீட்டைக் கொண்டிருந்தது. அதன் பின்னர், 2007 ஆம் ஆண்டில் மாநிலத்தின் பெயர் உத்தரகாண்ட் என்று பெயர் மாற்றப்பட்டதால் அடையாளக் குறியீடும் UK என்று மாற்றப்பட்டது. இதனால் இம்மாநிலத்தில் இரண்டு அடையாளக் குறியீடுகளைக் கொண்ட வாகனங்களும் இயக்கத்திலிருக்கின்றன.

இதே போன்று, ஒடிசா முன்பு அழைக்கப்பட்ட ஒரிசா எனும் பெயரிலான அடையாளக் குறியீடான OR பயன்படுத்திக் கொண்டிருந்தது. மாநிலத்தின் பெயர் ஒடிசா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின்பு, OD என்று அடையாளக் குறியீடாக மாற்றம் செய்யப்பட்டது. எனவே, இம்மாநிலத்திலும் இரண்டு அடையாளக் குறியீடுகளைக் கொண்ட வாகனங்கள் இயக்கத்திலிருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆந்திரப்பிரதேச மாநிலத்திலிருந்து பிரிக்கப்பெற்ற தெலங்கானா மாநிலத்திற்கு TS எனும் அடையாளக் குறியீடு வழங்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஜம்மு – காஷ்மீர் மாநிலம், ஒன்றியப் பகுதியாக மாற்றம் செய்யப்பட்ட போதும், அம்மாநிலத்தின் அடையாளக் குறியீடாக வழங்கப்பெற்ற JK எனும் அடையாளக் குறியீடே தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய வாகன உரிம எண்கள்

தற்போது வழங்கப்பட்டு வரும் வாகன உரிம எண்களில், முதல் இரு ஆங்கில எழுத்துகள் வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ள மாநிலத்தின் பெயரையும், அதை அடுத்திருக்கும் இரு எண்கள் மாவட்ட / வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினையும், அதைத் தொடர்ந்து வாகனங்களுக்கான நான்கு இலக்க எண்களும் இடம் பெற்றிருக்கின்றன. இந்த நான்கு இலக்க எண் நிறைவுக்குப் பின், எண்ணின் முன்னொட்டாக ஆங்கில எழுத்துகள் சேர்க்கப்பட்டு வருகின்றன.

Vehicles
Vehicles

உதாரணமாக, தமிழ்நாட்டிலுள்ள தேனி மாவட்டம், தேனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் வழியாக வழங்கப்பட்ட வாகன உரிம எண் TN60 0001 என்று இருக்கிறது. இதில் TN என்பது தமிழ்நாடு மாநிலத்தின் இரு ஆங்கில எழுத்துகளிலான சுருக்கக் குறியீடாகவும், 60 என்பது வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் அடையாளக் குறியீடாகவும், 0001 என்பது வாகன உரிமப் பதிவுகளின் வரிசை எண்ணாகவும் இருக்கிறது. இந்த எண்களின் தொடர்ச்சி 9999 என்று நிறைவுற்ற பிறகு, நான்கு இலக்க எண்ணின் தொடர்ச்சியாக, A எனும் ஆங்கில எழுத்தினை எண்ணின் முன்பாகச் சேர்த்து உரிம எண் வழங்கப்பட்டது. அதாவது, TN60 A 0001 என்று இருந்தது. தற்போது இந்த உரிம எண்ணின் தொடர்ச்சி ஆங்கில எழுத்துகள் அனைத்தும் நிறைவுற்று, இரு ஆங்கில எழுத்துகளின் முன்னொட்டுகளைச் சேர்த்துத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அதாவது, TN 60 AA 0001 என்று இரு ஆங்கில எழுத்துகளைக் கொண்டு தொடங்கிச் சென்று கொண்டிருக்கிறது.

வாகன உரிம எண் தகடு வகைகள்

  • தற்போதைய நிலையில், வாகன உரிம எண் இடம் பெறும் தகடுகள் கீழ்க்காணும் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

  • சொந்தப் பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான வாகன உரிம எண் வெள்ளை நிறப் பின்னணியில் கறுப்பு நிறத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

  • வாடகை வாகனங்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட வணிகப் பயன்பாட்டு வாகனங்களின் உரிம எண் மஞ்சள் நிறப் பின்னணியில் கறுப்பு நிறத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

  • ஓட்டுநர் இல்லாமல், வாடிக்கையாளரே தன் தேவைக்கு வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தும் வாடகை வாகனங்களுக்கான உரிம எண் கறுப்பு நிறப் பின்னணியில் மஞ்சள் நிறத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

  • வெளிநாட்டுத் தூதரக வாகனங்களுக்கான உரிம எண் வெளிர்நீல நிறப் பின்னணியில் வெள்ளை எழுத்துகளைக் கொண்டிருக்கின்றன.

  • இந்தியக் குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர்கள் அலுவல் முறைக்காகப் பயன்படுத்தும் சிறப்பு வாகனங்களுக்கு வாகன உரிம எண் தகடுகள் தேவையில்லை. இவ்வாகனங்களில் சிவப்பு நிறத் தகட்டில் இந்திய தேசிய இலச்சினை இடம் பெற்றிருக்கிறது.

  • இந்தியப் பாதுகாப்புப்படை வாகன உரிம எண் தனிப்பட்ட சிறப்பு எண்களைக் கொண்டதாக இருக்கின்றன. இதில் முதல் எழுத்து அல்லது மூன்றாம் எழுத்துக்குப் பதிலாக மேல் நோக்கிய அம்புக்குறியீடு பயன்படுத்தப்பட்டிருக்கும்.

மேற்காணும் ஆறு வகையான வாகன உரிம எண் தகடுகள் தவிர்த்து, தற்போது புதிதாகப் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் மின்கல வாகனங்களுக்குப் பச்சை நிறப் பின்னணியில் வாகன உரிம எண்களை இடம்பெறச் செய்வது குறித்து இந்திய அரசு பரிசீலித்துவருகிறது என்றும் சொல்லப்படுகிறது.

வாகன உரிம எண் தகடு வகைகள்
வாகன உரிம எண் தகடு வகைகள்

வாகன உரிம எண் தகடு பயன்பாடு

வாகன உரிம எண்களை அடையாளம் காணும் வகையில், வாகனத்தின் முன்புறம், பின்புறம் வாகன உரிம எண் எழுதிய தகடுகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். சில மாநிலங்களில் வாகனத்தின் முன்புறம், பின்புறம் மட்டுமன்றி, வாகனத்தின் பக்கவாட்டிலும் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வாகன உரிம எண்களில் இடம்பெறும் ஆங்கில எழுத்துகள், இலத்தீன் எழுத்துகளாகவும், எண்கள், அராபிய எண்களாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், வாகன உரிம எண் தகடுகள் இரவில் ஒளியூட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன், எழுத்துகளும் குறிப்பிட்ட அளவில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

வாகன உரிம எண்ணை மேற்குறிப்பிட்ட முறையினைத் தவிர்த்து, தங்கள் விருப்பம்போல் மாற்றம் செய்து பயன்படுத்துவது குற்றமாகும்.

வாகன உரிம எண் தகடு மாற்றம்

இந்திய அரசு ஜூன் 1, 2005 அன்று மத்திய இயந்திர வாகனங்கள் விதிகள் 1989-ன் 50வது விதியைத் திருத்திப் புதிய, மோசடி செய்யவியலாத பாதுகாப்பு வாகனப் பதிவு எண் தகடுகளைக் (HSRP) கொண்டு வருவதைக் கட்டாயமாக்கியது. இதன்படி, அனைத்துப் புதிய வாகனங்களும் புதிய வாகன உரிம எண் தகடுகளைக் கொண்டிருக்க வேண்டும் எனவும், முன்பிருந்து பயன்பாட்டிலிருக்கும் வாகனங்கள், தங்கள் வாகன உரிம எண் தகடுகளை இரண்டாண்டுக் காலத்திற்குள் மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அறிவித்தது.

இந்த உயர் பாதுகாப்பு வாகன உரிம எண் தகடுகள் காப்புரிமை பெற்ற குரோமியம் முப்பரிமாண ஒளிப்படம், சீரொளி எண்ணமைப்பு, எண் - எழுத்து வழி வாகனச் சோதனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் அடையாளம், 45 பாகை சரிவில் இந்தியா எனப் பொறிக்கப்பட்ட மீள் - எதிரொளிப்பு சுருள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இந்த எழுத்துருக்கள் தெளிவான காட்சிகளாக இடம்பெற்றிருக்கும். முப்பரிமாண ஒளிப்படத்தின் கீழே இடது புறத்தில் வெளிர் நீலத்தில் "IND" என்ற எழுத்துகள் இருக்கும்.

High security registration plate
High security registration plate

இந்த நடைமுறை இன்னும் முழுமையான செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படவில்லை. இதை நடைமுறைப்படுத்த வேண்டிய மாநில அரசுகள் இத்தகைய உயர் பாதுகாப்பு வாகன எண் உரிமத் தகட்டுத் தயாரிப்பாளர்களை அலுவல் முறையில் நியமிக்காததால், இந்நடைமுறை முடங்கிக் கிடப்பதாகச் சொல்லப்பட்டது. இதுபோன்று, புதிய வாகன உரிம எண் தகடு மாற்றம் தொடர்பான பல்வேறு வழக்குகள் இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்துகொண்டிருக்கின்றன என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில், இந்திய உச்ச நீதிமன்றம் நவம்பர் 30, 2004 அன்று இந்த விதியை அனைத்து மாநிலங்களும் செயற்படுத்த வேண்டும் என விளக்கம் வெளியிட்டது. அதன் பின்பும், புதிய வாகன உரிம எண் தகடுகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாமலே இருந்து வருகிறது. இந்தப் புதிய வாகன உரிமத் தகடுகளை அறிமுகப்படுத்தாமல், நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குறிப்பிட்டு, ஏப்ரல் 8, 2011 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் தில்லி, பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலப் போக்குவரத்துச் செயலர்களை நீதிமன்றத்திற்கு வரவழைத்து எச்சரித்தது.

இந்தியாவில் மேகாலயா, சிக்கிம் மற்றும் கோவா மாநிலங்களில் மட்டும் உயர் பாதுகாப்பு வாகன உரிம எண் தகடுகள் முழுமையாகச் செயற்படுத்தப்பட்டுப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. திரிபுரா, கர்நாடகா, மகாராஷ்டிரம் மற்றும் கேரளா ஒப்பந்தப் புள்ளிகள் பெற்ற போதும், மேற்கொண்டு புதிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. மற்ற மாநிலங்கள் இதுகுறித்து எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் இருந்து கொண்டிருக்கின்றன.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man