Published:Updated:

அறக்கட்டளை தொடங்க அரசு விதிமுறைகள் என்னென்ன? | Doubt of Common Man

ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கு எப்படி அரசின் விதிகள் பல உள்ளதோ, அது போலவே ஒரு அறக்கட்டளைகளைத் தொடங்குவதற்கும் அரசு விதிகள் இருக்கின்றன.

விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் ஜெபா என்ற வாசகர், ``சமூகசேவை செய்வதற்காக அறக்கட்டளை தொடங்க அரசு விதிமுறைகள் என்ன?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!

Doubt of common man
Doubt of common man

சமூக சேவை செய்வதற்கான அறக்கட்டளை ஒன்றைத் தொடங்க வேண்டும் என வாழ்வின் ஏதாவது ஒரு கட்டத்தில் நாம் நினைத்திருப்போம். ஆனால், அறக்கட்டளை தொடங்க வேண்டும் என்றால் என்ன செய்வது, அரசிடம் பதிவு செய்ய வேண்டுமா வேண்டாம் என எந்த வழிகாட்டலும் இல்லாமல் அந்த முடிவையும் கைவிட்டிருப்போம். ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கு எப்படி அரசின் விதிகள் பல உள்ளதோ, அது போலவே ஒரு அறக்கட்டளைகளைத் தொடங்குவதற்கும் அரசு விதிகள் இருக்கின்றன. ஒரு சேவைக்குழுவை அல்லது தொண்டு நிறுவனத்தையோ பதிவு செய்வதற்குப் பல விவரங்களும் ஆவணங்களும் தேவைப்படும். நம் வாசகர் ஒருவருக்கும் சேவைக்குழு தொடங்குவதற்கான விபரங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது Doubt of Common Man பக்கத்தில் கேட்டிருந்தார்.

சமூக சேவை
சமூக சேவை

நம் வாசகரின் கேள்விக்கான பதிலை அறிந்துகொள்ள அறக்கட்டளை ஒன்றை நடத்தி வரும் புகழேந்தி அவர்களிடம் பேசினோம். அவர் கூறியதாவது, "ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் அல்லது சேவை குழுவைப் பதிவு செய்வதற்கு இந்திய அறக்கட்டளைச் சட்டம் 1882-ன் படி சில விதிமுறைகள் உள்ளன. நாம் தொடங்கவிருக்கும் சேவைக்குழு அல்லது தொண்டு நிறுவனம் குறித்த அனைத்துத் தகவல்களையும் பத்திர வடிவில் நாம் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு தொண்டு நிறுவனம் அல்லது ஒரு குழுவைத் தொடங்குபவரின் முழுமையான தகவல்கள் (Founder), அந்தத் தொண்டு நிறுவனம் தொடங்கப்பட்டதற்கான நோக்கம், அந்நிறுவனத்தில் மேற்கொள்ளப்படவிற்கும் செயல்பாடுகள், அத்தொண்டு நிறுவனத்தின் சொத்து மதிப்பு, அவற்றை யாரெல்லாம் நிர்வகிக்கிறார்கள், தொண்டு நிறுவனத்தின் வங்கிக் கணக்கு குறித்த விபரங்கள், அதனை யார் நிர்வகிப்பார்கள் போன்ற தகவல்கள் அனைத்தையும் குறிப்பிட்டு அரசுப் பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். முக்கியமாக ஒரு தொண்டு நிறுவனம் அல்லது அறக்கட்டளையைப் பதிவு செய்வதற்கு மூன்று நபர்கள் வேண்டும், ஒரு நிறுவனர், இரண்டு அறங்காவலர்கள் இருக்க வேண்டும்.

சேவைக்குழு | தொண்டு நிறுவனம்
சேவைக்குழு | தொண்டு நிறுவனம்

மூன்று பேருக்கு மேல் எவ்வளவு நபர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் கண்டிப்பாக மூன்று பேர் இருக்க வேண்டும். பதிவு செய்து மூன்று வருடங்கள் முடிந்திருந்தால் வருமான வரிச் சட்டம் 1961-ன் கீழ் உள்ள 12AA, 80G என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் வருமான வரி விலக்குப் பெற நாம் தகுதி பெறுவோம். இதில், 12AA என்பது அறக்கட்டளையில் மேற்கொள்ளும் செலவுகளுக்கும், வருமானத்திற்கும் வரிவிலக்கு பெறுவதற்கான பிரிவு. 80G என்பது அறக்கட்டளைக்கு நன்கொடை அளிப்பவர்களின் வருமானவரியில் இருந்து விலக்கு பெறுவதற்கான பிரிவு.

பொதுவாக சமூக சேவை செய்யவேண்டும் என எண்ணுபவர்கள் தாராளமாகத் தன்னார்வலர்களாகச் சேவை செய்யலாம், ஆனால் அவர்களுக்குத் தமிழக அரசு சார்பில் சேவை செய்பவர்களுக்கு என வழங்கப்படும் எந்தவிதமான விருதும் கிடைக்காது. அவர்கள் அறக்கட்டளை வைத்திருக்கும் பட்சத்தில் மூன்று வருடங்களாக அவர்களின் அறக்கட்டளையின் மூலம் செய்யப்பட்ட சேவைகள், வருமான விவரங்கள், திட்டங்கள் போன்றவற்றை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும், தகுதி இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அரசு விருது வழங்கப்படும்" எனக் கூறி முடித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு