Published:Updated:

``மாற்றுப்பாலினத்தவரை குடும்பத்தினர், நண்பர்கள்கூட புரிந்து கொள்வதில்லை.."-திருநம்பி அயானின் சோகம்!

அயான் - தாரா

``என் உடல், என்னை சிறையில் அடைத்தது போல் உணர்த்துகிறது. மன அழுத்தம் அதிகமானது. பெண்ணுக்கு உடலில் ஏற்படும் மாற்றங்களான மாதவிடாய் சுழற்சி வரும்போது என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. சீக்கிரம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.”

``மாற்றுப்பாலினத்தவரை குடும்பத்தினர், நண்பர்கள்கூட புரிந்து கொள்வதில்லை.."-திருநம்பி அயானின் சோகம்!

``என் உடல், என்னை சிறையில் அடைத்தது போல் உணர்த்துகிறது. மன அழுத்தம் அதிகமானது. பெண்ணுக்கு உடலில் ஏற்படும் மாற்றங்களான மாதவிடாய் சுழற்சி வரும்போது என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. சீக்கிரம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.”

Published:Updated:
அயான் - தாரா

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட ஒற்றுமையான நாடு என்பது பெயரளவில் மட்டுமே. மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், மொழியின் பெயரால் , பாலினத்தின் பெயரால் இங்கு ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன. எல்லா மதங்களிலும் பாலின வேற்றுமை அதிகமாகவே உள்ளது. பெண் என்றால் அடங்கிப்போக வேண்டும், அமைதியும் சாந்தமும் அவளின் குணங்கள். ஆண்கள் அடக்கக்கூடியவர்கள், வலிமையும் கோபமும் அவனின் குணங்கள் என்றே இன்றும் இந்திய குடும்பங்களில் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.

பெண்ணின் உணர்வையும் சுதந்திர தாகத்தையும் புரிந்து கொள்ளாத சமூகத்தால், ஆண் பெண் இல்லாத மாற்றுப் பாலினத்தவரின் உணர்வுகளை எப்படிப் புரிந்து கொள்ள இயலும்? மாற்றுப் பாலினத்தவர்கள், பெண்களைவிட அதிகமான ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகின்றனர். அவர்கள் குரல்களை கேட்பதற்கு இங்கு யாரும் தயாராக இல்லை என்பதே நிதர்சனம். ஆனாலும், மாற்றுப் பாலினத்தவர், தங்களின் பிரச்னைகளையும் வலிகளையும் பொது சமூகத்துக்கு உணர்த்த, தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.

தாரா
தாரா

அயான்... இவர் ஒரு திருநம்பி. பெண்ணாகப் பிறந்து தன்னை ஆணாக உணர்ந்து வாழ்பவர். இவர் தாரா என்னும் பெண்ணை விரும்புகிறார்; விரைவில் இருவரும் திருமணம் செய்ய உள்ளனர். அயான் ஒரு திருநம்பியாக எதிர்கொள்ளும் சவால்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

அயான் நம்மிடம் பேசும்போது... ``எனக்கு ஐந்து வயசு இருக்கும் போதே, என்னை பையனாக உணர்ந்தேன். சின்ன வயசுலேயே ஓர் ஆண் எப்படியெல்லாம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வானோ, அதையெல்லாம் நான் செய்ய முயல்வேன். கிராப் வெட்டிக் கொண்டேன்; ஜீன்ஸ் பேன்ட்டும் சட்டையும் தொடர்ந்து அணிய ஆரம்பித்தேன். ஆனால் பள்ளிக்குச் செல்லும்போது மட்டும் கட்டாயம் குட்டைப் பாவாடை தான். குட்டைப் பாவாடை அணிந்து பள்ளிக்குச் செல்வது எனக்கு வெறுப்பேற்படுத்தும்.

சிறுவயதில் என்னிடம் ஏற்பட்ட மாற்றங்களை, யாரிடம் சொல்வதென்று தெரியாமல் திணறிப்போனேன். குடும்பத்தில் உள்ளவர்களும் புரிந்து கொள்ளவில்லை. நண்பர்களும் புரிந்து கொள்ளவில்லை. மன அழுத்தம் அதிகமானது. பெண்ணுக்கு உடலில் ஏற்படும் மாற்றங்களான மாதவிடாய் சுழற்சி வரும்போது என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நான் ஓர் ஆண் எனக்கு ஏன் இப்படி ஏற்படுகிறது என்று அருவருப்பாக உணர்வேன். எனக்கு ஏற்படும் உணர்வலைகள், டாம்பாய்களுக்கும் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட பெண்களுக்கும் ஏற்படும் மனநிலை என்று சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். பெண்களுக்கு ஆண் உடை அணிவதில் விருப்பம் மறுக்கப்படும் போது, விரக்தியும் கோபமும் ஏற்படும். ஆனால் ஒரு திருநம்பியால் பெண் உடலில் இருப்பதையே ஏற்றுக்கொள்ள முடியாது. எனக்கு மார்பகம் இருப்பதே பிடிக்கவில்லை. குளிக்கும் போதெல்லாம் என் உடலைக்கண்டு வெறுக்கிறேன். என் உடல், என்னை சிறையில் அடைத்தது போல் உணர்த்துகிறது. பல நேரங்களில் தற்கொலை எண்ணமும் தோன்றும். சீக்கிரம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளேன்.

திருநம்பி அயான்
திருநம்பி அயான்

நான் ஆணாக உணர்வது என் தவறா? நான் இப்படி இருப்பதால், என் அக்கா திருமணத்துக்கு கூட அனுமதிக்கவில்லை. என் அம்மாவோ, அவரது இறப்புக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்படியும், அதுவரை அவரை மரியாதையுடன் இந்தச் சமூகத்தில் இருக்கவிட வேண்டுமென்றும் கூறினார். அவரின் அந்த வார்த்தைகள் என்னைக் காயப்படுத்திவிட்டன. என் காதலி தாரா மட்டுமே, நான் எப்படி இருக்கேனோ அப்படியே ஏற்றுக் கொண்டவள். தாரா இளங்கலை படிக்கும் போது எனக்கு அறிமுகமானார். அவர் பிறந்தது குஜராத்... வளர்ந்தது தமிழ்நாடு. நான் யார் என்பதை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு கொண்டார். இருப்பினும் என்னை காதலிக்கிறார். நான் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடித்தாலும், ஒருவேளை இல்லையென்றாலும் என்னை ஆணாகவே ஏற்றுக்கொண்டு காதலிப்பவர் என் தாரா.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி கழிப்பறைகள் இருக்கையில், எங்களுக்கு மட்டும் ஏன் இருப்பதில்லை. பெரும்பாலான பயணங்களின் போது, ஆண் கழிப்பிடத்தை பயன்படுத்த முயல்வேன். ஆனால் அங்கு வெஸ்டர்ன் டாய்லெட்டோ, இந்தியன் டாய்லெட்டோ பெரும்பாலான இடங்களில் இருப்பதில்லை. வெறும் யூரினரி மட்டுமே இருக்கும். அந்நேரங்களில் இயற்கை உபாதைகளை அடக்கிக்கொள்வது சிரமமாக இருக்கும். எனவே, எல்லா இடங்களிலும் பாலின சமத்துவ கழிப்பிடம் இருந்தால் அது மாற்றுப் பாலினத்தவருக்கு பேருதவியாக இருக்கும்.

அயான்
அயான்

என் வீட்டில் உள்ளவர்களிடம் பல சண்டைகள், உரையாடல்கள், வாக்குவாதங்கள் மூலம், எனக்கு ஏற்படும் மாற்றங்கள் இயற்கையானவைதான் என்பதைப் புரிய வைத்தேன். தற்போது அவர்களும் ஆதரவாக இருக்கிறார்கள். இன்னும் ஓரிரு வருடங்களில் அறுவை சிகிச்சை முடித்து திருமணமும் செய்து கொள்வேன்” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் அயான்.

அயான் போன்ற மாற்றுப் பாலினத்தவர்களின் தேவைகளை அரசு உணர்ந்து, நிறைவேற்ற வேண்டும்; அவர்களின் நலனின் கூடுதல் அக்கறையெடுத்து அரசு நிர்வாகங்கள் செயல்பட வேண்டும்!