Published:Updated:

மாபெரும் சபைதனில் - 7

மாபெரும் சபைதனில்
பிரீமியம் ஸ்டோரி
News
மாபெரும் சபைதனில்

- ஓவியம்: டிராட்ஸ்கி மருது

(மாபெரும் சபைதனில் தமிழ் பிராமி எழுத்தில்)
(மாபெரும் சபைதனில் தமிழ் பிராமி எழுத்தில்)

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமை. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு அருகே இருக்கும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் வளாகத்தில் குழுமியிருக்கிறோம். எல்லோரின் முகத்திலும் பதற்றம் தொற்றியிருக்கிறது. அவ்வப்போது அலைபேசியை நோக்குவதும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதுமாக நிமிடங்கள் கரைகின்றன. சிங்கப்பூர், லண்டன், சுவிட்சர்லாந்து என உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பலர் தொடர்புக்கு வந்து, “என்னவாயிற்று?” என்று விசாரிக்கிறார்கள். இறுதியாக, நாங்கள் எதிர்பார்த்த அந்த மின்னஞ்சல் கலிபோர்னியாவிலிருந்து வந்துவிட்டது. எல்லோரின் முகங்களும் பதற்றம் தணிந்து மலர்ந்தன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆமாம்... கலிபோர்னியா, மவுன்டன் வியூ பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருந்த யூனிக்கோடு குழும தொழில்நுட்பக் குழுவின் கூட்ட முடிவுக்காகத்தான் அங்கு எல்லோரும் காத்திருந்தோம். தமிழ் மொழியில் தொடர்ந்து புழக்கத்தில் இருந்துவரும் பின்னக் கணக்குகளையும், அதற்கான குறியீடுகளையும் யூனிக்கோடு வரிவடிவச் சட்டகத்தில் இடம்பெறச் செய்வதற்கான முன்மொழிவுகள்மீது அன்றுதான் தொழில்நுட்பக் குழுவின் வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பு வெற்றியில் முடிந்தது.

வேகமாக மாறிவரும் கணினி யுகத்தில், உலகிலுள்ள எந்த ஒரு மொழியின் வரிவடிவத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரத்தை யூனிக்கோடு அமைப்பு கையில் எடுத்துக்கொண்டு வெகு நாள்களாகின்றன. சீன, ஜப்பானிய மொழிகளுக்கெல்லாம் ஆயிரக்கணக்கில் இட ஒதுக்கீடு செய்துவிட்டு, தமிழுக்கு வெறும் 128 இடங்களை மட்டுமே ஒதுக்கியதால் பல ஆண்டுகளாகவே யூனிக்கோடு குழுமத்தின்மீது கணித்தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து வருத்தங்களைப் பதிவு செய்து வந்துள்ளார்கள். 1988-ல் நடந்த அந்தப் பின்னடைவுக்குப் பிறகு, உயிர்மெய் எழுத்துகளுக்கு உரிய இடங்களைப் பெற முடியாததால் தமிழ்க் கணினி அச்சு முறையில் எழுந்த சிக்கலைத் தீர்க்க வெகுநாள்கள் போராட வேண்டியிருந்தது. தமிழக அரசும், உலகெங்கும் உள்ள கணித்தமிழ் ஆர்வலர்களும் இணைந்து செயல்பட்டபிறகு கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யூனிக்கோடு அமைப்பின் உறுப்பினராக உள்ள மிகச் சில மாநிலங்களுள் தமிழ்நாடும் ஒன்று. மத்திய, மாநில அரசுகளுடன் உலகெங்கும் உள்ள தொழில்நுட்பத் தமிழர்களும் இணைந்தால் யானை பலம்தானே? யூனிக்கோடு அமைப்பின் துணைத் தலைவர் லிசாமூர் ஒருமுறை குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. “உலகின் எந்த மொழியைப் பற்றி விவாதிக்கும்போதும் இருப்பதைவிட, தமிழ்மொழி குறித்து விவாதிக்கும்போது கூடுதல் கவனத்தோடு இருப்போம். ஏனெனில் ஏதேனும் தவறாக முடிவெடுத்துவிட்டால் உலகெங்குமிருந்து வரும் மின்னஞ்சல்களை எங்களால் சமாளிக்கவே முடியாது” என்றார். பெருமையாக இருந்தது.

மாபெரும் சபைதனில் - 7

தமிழ்மொழியில் வழக்கில் இருக்கும் கால், வீசம், குருணி, உழக்கு, முந்திரி, குழி, மா போன்ற பின்ன எண்களையும், அதற்கான குறியீடுகளையும் யூனிக்கோடு கூடுதல் தளத்தில் இடம்பெற வைக்க தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தது. அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டதில் அனைவருக்கும் மகிழ்ச்சி. அந்த அறையில் அமர்ந்திருந்த கணித்தமிழ் ஆர்வலர்கள் மிகுந்த பெருமிதத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். அதுவரை தவழ்ந்த அமைதி கலைந்தது. பேச்சு, மெதுவாக மின்பதிப்பாக்க முயற்சிகள் பக்கம் திரும்பியது.

ஒரு லட்சம் நூல்களை மின்பதிப்பு செய்து இணையத்தில் உலவவிடும் முயற்சி குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். ‘இந்திய மொழிகளில் அதுவே மிகப்பெரிய திட்டமாக இருக்கும்’ என்றார்கள். அதற்கான வழிமுறைகள் பற்றி விவாதம் திரும்பியது. கனவுகளோடும் எதிர்பார்ப்போடும் நிகழ்ந்த அந்தச் சந்திப்பில் ஒருவர் மட்டும் சலனமின்றி அமர்ந்திருந்தார். ஒரு தனியார் வங்கியில் உலகெங்குமுள்ள பல கிளைகளில் உயர்பதவியில் அமர்ந்து பணியாற்றிவிட்டு எஞ்சிய காலத்தைக் கணித்தமிழ் வளர்ச்சிக்குச் செலவிடத் துடிப்பவர். அவரின் பக்கம் கவனம் திரும்பியது. விவாதிக்க அழைத்தோம்.

சுற்றிலும் அமர்ந்திருந்தவர்களை ஆழமாகப் பார்த்துவிட்டு, பேசத் தொடங்கினார். “இந்தச் சிறு வெற்றிக்கே இவ்வளவு மகிழ்ச்சி அடைகிறீர்களே... ஒரு லட்சம் புத்தகங்களை மின்பதிப்பு செய்யும் திட்டத்திற்கே பெருமிதம் கொள்ளும் உங்களுக்கு, ஐரோப்பாவிற்கு வெளியே அச்சடிக்கப்பட்ட முதல் நூல் தமிழில்தான் வந்தது என்பது தெரியுமா?” என்றபோது அந்த அறையில் ஆச்சர்யம் தகித்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். சிறிய மௌனத்துக்குப் பிறகு மீண்டும் அவர் பேசத் தொடங்கினார்.

“1554-ம் ஆண்டு, பிப்ரவரி 11-ம் தேதி. அன்றைய தினத்தில்தான் போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரத்தில் ‘கார்த்தில்லா’ என்ற தலைப்பில் 38 பக்கங்களைக் கொண்ட சிறு தமிழ்நூல் முதன்முதலில் அச்சிடப்பட்டது. தமிழ்ச் சொற்களை ரோமன் எழுத்துகளைக் கொண்டு பதிப்பித்து, சொல்லுக்குச் சொல் போர்த்துகேய மொழிபெயர்ப்புடன் வெளியாகியது அந்த நூல். அதைவிட ஒரு வியப்பு, அந்த நூல் வெளியாக உதவிய வின்சென்ட் நாசரேத், ஜோர்கே கார்வல்லோ, தோமே டி குருஸ் மூவரும் தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழர்கள். `கார்த்தில்லா’ அச்சடிக்கப்பட்ட காலத்தில், உலகப்புகழ் பெற்ற நாடக மேதை ஷேக்ஸ்பியர் பிறந்திருக்கவில்லை. இந்தியாவில் பேரரசர் மகா அக்பர் அரியணை ஏறியிருக்க வில்லை.கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்து 50 ஆண்டுகள்கூட ஆகியிருக்க வில்லை. உலக அறிவியல் புரட்சிக்கு வித்திட்ட மாபெரும் அறிவியலாளர்கள் கலிலியோ, நியூட்டன் இருவரும் பிறந்தி ருக்கவே இல்லை. இப்புத்தகம் அச்சடிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் கழித்தே உலக அதிசயமான தாஜ்மகால் யமுனை ஆற்றங்கரையில் எழுந்தது.

மாபெரும் சபைதனில் - 7

இன்றும் அந்த நூல், லிஸ்பன் நகரின் பெலம் இனவியல் அருங்காட்சியகத்தில் இரும்புப் பெட்டி ஒன்றில் மிகப் பாது காப்பாக வைக்கப்பட்டுள்ளது.

தமிழில் முதன்முதலில் அச்சு வடிவ நூல்வெளியான காலத்தை, உலகின் மற்ற மொழிகள் அச்சு வாகனம் ஏறிய ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. ரஷ்யமொழியில் முதல் அச்சுநூல் வெளிவந்தது 1563-ல்தான். சீன மொழியிலும் பெருவியன் மொழியிலும் 1584-ல். 1590-ல் ஜப்பான், 1624-ல் ஆப்பிரிக்கா, 1821-ல் கிரேக்கம்... இந்த வரிசை யில்தான் அந்த மொழிகளி லெல்லாம் அச்சு நூல் அறிமுக மானது. இப்போது தெரிகிறதா தமிழின் உயரம்?” என்ற கேள்வி யோடு முடித்தவரை கண்கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தோம்.

அடுத்ததாக எழுந்தார், கூட்டத்தில் இருந்த தமிழ்ப்பேராசிரியர் ஒருவர்.

“பழந்தமிழ் இலக்கியங்கள் இன்று நம் கரங்களில் தவழ நாம் பனைமரத்துக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்” என்று அவர் தொடங்கிய விதமே ஈர்ப்பாக இருந்தது.

“கல்லில் கலைவண்ணம் படைக்கலாம்தான். ஆனால் காப்பியங்களைப் படியெடுத்திட முடியாது. செப்புப்பட்டயங்கள் செல்வந்தரின் செல்வாக்கை நிலைநிறுத்தலாம். எனினும் செவ்விலக்கியங்களைத் தாங்கிட அவற்றால் முடியாது. எனவேதான், காலவெள்ளத்தில் சிக்கி அழிந்துபோகாமல் காக்க பழந்தமிழ் இலக்கியங்களைப் பனையோலைகளில் வடித்து வைத்தார்கள்...” என்றவர் சுவடி நுட்பங்களை விளக்கத் தொடங்கினார்.

“தென்னிந்தியா மற்றும் இலங்கையில் பரவலாக எழுபது அடி உயரம்வரை வளரக்கூடிய விரிபனை வகை ஓலைகள்தான் சுவடி எழுதப் பயன்பட்டன. பனைமரத்தின் முதல் மூன்று குருத்து மட்டைகளைத் தவிர்த்துவிட்டு, மீதமுள்ள மட்டைகளைத் தேர்ந்தெடுத்து, நரம்பு நீக்கிப் பிரித்து கூழாங்கற்களைக் கொண்டு தேய்த்து, இடைவெளிகள் நீக்கப்பட வேண்டும். நிழலில் உலர்த்தப்பட்ட ஓலைகளைத் தேவைக்கேற்ற நீள அகலத்தில் நறுக்கி, மடக்கெழுத்தாணி கொண்டு எழுத வேண்டும் என்று அவர் விவரித்தபோது, அருகில் இருந்த எங்களின் மடிகளில் மடிக்கணினி அகன்று பனையோலை தவழ்வதுபோல் தோன்றியது.

விடவில்லை அவர். ஓலைச்சுவடிகளை நோக்கி உ.வே.சா, தாமோதரனார் போன்றவர்கள் மேற்கொண்ட பயணங்கள் குறித்தும், அனல்வாதம், புனல்வாதம் புரிந்தும், அறியாமையாலும், ஆகம விதிகளைத் தவறாகப் பயன்படுத்தியதாலும் நாம் இழந்த கலைச்செல்வங்கள் குறித்தும் அவர் பேசிக்கொண்டே போனார். இந்தியாவில் காணக் கிடைக்கும் ஓலைச்சுவடிகளில் கணிசமான எண்ணிக்கை தமிழில் கிடைக்கிறது என்று அவர் முடித்தபோது அவர் முகத்தில் மட்டுமல்ல, அமர்ந்திருந்த எங்கள் முகத்திலும் பெருமிதம்!

மாபெரும் சபைதனில் - 7

அவர் அமர்ந்த நொடி, “ஓலைச்சுவடிகள் மட்டுமா? கல்வெட்டுகளும்தான்” என்ற குரலோடு எழுந்தார் தொல்லியல் ஆய்வாளர் ஒருவர். “இந்தியாவில் கிடைக்கும் கல்வெட்டுகளில் 52 சதவிகிதம் தமிழ்க் கல்வெட்டுகள். தமிழி, வட்டெழுத்து, மெய்க்கீர்த்தி, செப்புப்பட்டயம்” என்றெல்லாம் அவர் பட்டியலிட்டுக்கொண்டே சென்றதில் கூட்டம் மயங்கித்தான் போனது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் காணக் கிடைக்கும் நடுகற்கள், கற்பதுக்கைகள் குறித்தும் சங்க இலக்கியங்களில் காணப்படும் பதிவுகள் குறித்தும் அவர் பேசப்பேச, அனைவரும் உற்சாகத்தில் மிதந்தோம்.

“கீழடி உட்பட இதுவரை தமிழகத்தில் கிடைத்துள்ள பானையோடுகளில் காணப்படும் தமிழி எழுத்துகள், எழுத்துகளே தோன்றுவதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட கீறல்கள்... இவற்றையெல்லாம் எண்ணிக்கையில் கணக்கிட்டால் இந்தியா முழுவதும் கிடைத்துள்ள வற்றில் 75 சதவிகிதம் தமிழ்தான்... இதன் தொழில்நுட்பங்களைப் பரிசோதித்தால் தமிழ்ச் சமுதாயம் அன்றே பரவலான எழுத்தறிவைப் பெற்றிருந்தது” என்று அவர் சொல்லி முடித்தபோது அரங்கில் பெரும் கரவொலி எழுந்தது.

கைத்தட்டலுக்காக இடைநிறுத்தி மீண்டும் தொடங்கினார் அவர். கரிக்கையூர், கீழ்வாளை, மேலூர் எனப் பாறை ஓவியங்கள் மிகுந்திருக்கும் ஊர்களின் பெயர்களை அடுக்கியதில் அனைவரும் வாயடைத்துப்போனோம். ‘தமிழகத்தில் அதிக பாறை ஓவியங்களும் உள்ளன’ என்றார்.

இறுதியாக, நைந்துபோன ஒரு பழங்காகிதம் சங்கத் தமிழரின் வாழ்வையும் வளத்தையும் வெளியே கொண்டு வந்த விதம்பற்றி அவர் சொன்னது இன்றுவரை நினைவில் நிழலாடுகிறது. “25 ஆண்டுகளுக்கு முன், ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகர மியூசியத்தில் ‘பேபிரஸ்’ தாளில் எழுதப்பட்ட அரிய கையெழுத்து ஆவணம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. சேர நாட்டுத் துறைமுகமான முசிறியில் வாழ்ந்த வணிகர் ஒருவருக்கும், நைல் நதிக்கரையில் அமைந்த அலெக்ஸாண்டிரியா எனப்பட்ட ரோம நாட்டுத் துறைமுகத்தில் வாழ்ந்த கிரேக்க வணிகருக்கும் கி.பி.150-ம் ஆண்டு வாக்கில் போடப்பட்ட வணிக ஒப்பந்தம் அது.

‘ஹெர்மபோலன்’ என்று பெயரிடப்பட்ட கப்பல் ஒன்றில் ஏற்றப்பட்ட ஏற்றுமதிப் பொருள்களின் பாதுகாப்பு, பொருள்களுக்கான காப்பீடு, செலுத்த வேண்டிய சுங்க வரி என விரிகிறது அந்த ஒப்பந்தம். கிரேக்க மொழியில் எழுதப்பட்ட அந்த ஆவணம்தான் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் வணிக ஒப்பந்தம். அதுமட்டுமல்ல, அந்தப் பழைமையான ‘பேபிரஸ்’ தாளில் இன்னும் பல உண்மைகள் உறைந்துபோயிருந்தன. ‘ஹெர்மபோலன்’ கப்பல் ஏற்றிச்சென்ற பொருள்கள் ஆறு பொதிகளாக, 1,154 தோலன் 285 திரமம் எடை கொண்டதாக இருந்தன. அதன் பணமதிப்பை வைத்து அலெக்ஸாண்டிரியாவில் ஓர் நீர்வழிச்சாலையையே உருவாக்கிட முடியும் என்றும், இன்றைய மதிப்பில் அது அறுபது கோடி ரூபாய்க்கு சமம் என்றும் அந்தத் தொல்லியல் ஆய்வாளர் கூறி அமர்ந்தபோது அரங்கம் உறைந்துபோயிருந்தது.

அந்தத் தொல்லியல் ஆய்வாளரின் பேச்சில் இரண்டு விஷயங்கள் வெளிச்சம் கொண்டன. சேர நாட்டு நறுமணப் பொருள்கள்மீது கொண்ட மோகத்தால் ரோமப் பேரரசு இழந்த செல்வம் குறித்துக் கிடைக்கும் பல குறிப்புகளை இணைத்துப் பார்த்தால், சங்க காலத் தமிழரின் வணிகம் ஏற்படுத்திய தாக்கம் புரியும்.

மாபெரும் சபைதனில் - 7

அதுமட்டுமல்ல, கிரேக்க மொழியில் எழுதப்பட்ட ஆவணம், அந்தத் தமிழ் வணிகருக்கு கிரேக்க மொழியும் தெரிந்திருக்கிறது என்ற உண்மையை உரத்துச் சொல்கிறது. அந்த வணிக ஒப்பந்த எழுத்துகளுக்குப் பின்னால் தமிழரின் கப்பல் கட்டும் திறன் மறைந்திருக்கிறது. முசிறி துறைமுகத்திலிருந்து செங்கடல் துறைமுகத்துக்கு நாற்பது நாள்களுக்குள் சென்று சேர உதவும் அரபிக்கடல் பருவக் காற்றைப் பயன்படுத்தும் தமிழரின் வானியல் அறிவும் அதில் ஒளிந்திருக்கிறது. கடல் நீரோட்டம் நாவாய் செலுத்துவோரின் சுமையைக் குறைத்த உண்மையும், இறக்குமதி செய்யும் நாட்டின் சட்டதிட்டங்கள் தெரிந்து வணிகக் குழுக்கள் நாட்டிய வெற்றிக்கொடியும் அந்த ஒப்பந்தத்தின் உள்ளீடாக உறங்கிக்கொண்டிருக்கின்றன.

கணித்தமிழ் வெற்றியைக் கொண்டாடி மகிழ வந்தவர்களும், மின்பதிப்பாக்க முயற்சி குறித்த பெருமிதத்தில் திளைக்க வந்தவர்களும் அந்த அரைமணி நேர விவாதத்தில் வரலாற்றின் குழந்தைகளாக மாறிப்போனார்கள். ஆதி மனிதரின் அலைபாயும் உணர்வுகள் பாறை ஓவியங்களில் இழைந்தோட, பானை ஓடுகள் பழந்தமிழரின் கல்வியறிவைப் பறைசாற்ற, அரச கட்டளையும் அன்றாட நிகழ்வுகளும் கல்வெட்டில் பதிவாக, பனை மர நிழலில் பயணித்த பழந்தமிழ் இலக்கியங்கள், கடல் கடந்து அச்சு வாகனம் ஏறிய சிந்தனைகள் எனக் காலந்தோறும் தடைகளைத் தகர்த்து நடைபயிலும் தாய்மொழியின் உயரம் புரிந்தது.

இது பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த தொடர் ஓட்டம். தமிழர் மரபை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அழிவின்றிக் கொண்டு சேர்க்கும் நீண்ட பயணம்.

வரலாற்றின் வழியெங்கும் வரவேற்று நிற்கும் மழலைக் குழந்தைகளின் கரங்களில் மலர்க் கொத்துகள், கண்களில் உற்சாகம், இதழோரம் கசியும் புன்னகை... அவர்களுடைய கன்னங்களை வருடியபடியே தொடர்கிறது தமிழ்மொழியின் நீண்ட பயணம்!

- நடை பயில்வோம்...

சபைக் குறிப்பு

இந்தியாவில் அச்சேறிய முதல் நூலும் தமிழ் நூல்தான். ஹென்ரிக்ஸ் அடிகளார் மொழிபெயர்த்த ‘தம்பிரான் வணக்கம்’ என்ற நூல்தான் அது. 16 பக்கங்கள் கொண்ட இந்தச் சிறுநூல் 1578-ல் கேரளாவின் கொல்லம் நகரில் அச்சானது. அதற்கு முன்பு, 1554-ம் ஆண்டில் போர்ச்சுகல் நாட்டில் அச்சிடப்பட்ட ‘கார்த்தில்லா’ நூலில் தமிழ்ச்சொற்கள் ரோமன் எழுத்துகளில் இருந்தன. ஆனால் ‘தம்பிரான் வணக்கம்’தான் தமிழ் எழுத்துகளைக் கொண்ட முதல் நூல்.

மாபெரும் சபைதனில் - 7

இத்தொடரை ஒலிவடிவில் கேட்க Vikatan Audio யூடியூப் தளத்தை சப்ஸ்க்ரைப் செய்யவும்.