Published:Updated:

சரியும் கருவுறுதல் விகிதம், நாட்டிலேயே குறைவு தமிழ்நாட்டில்; மனிதவள பற்றாக்குறை ஏற்படும் அபாயம்?

Representational Image ( Pixabay )

கருவுறுதல் விகிதம் குறைந்துகொண்டே வந்தால், எதிர்காலத்தில் மனிதவளத்துக்காக பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களைத் தமிழ்நாடு நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். அதேபோல, நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும் தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது.

சரியும் கருவுறுதல் விகிதம், நாட்டிலேயே குறைவு தமிழ்நாட்டில்; மனிதவள பற்றாக்குறை ஏற்படும் அபாயம்?

கருவுறுதல் விகிதம் குறைந்துகொண்டே வந்தால், எதிர்காலத்தில் மனிதவளத்துக்காக பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களைத் தமிழ்நாடு நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். அதேபோல, நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும் தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது.

Published:Updated:
Representational Image ( Pixabay )

இந்தியாவில் 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களின் கருவுறுதல் விகிதம், கடந்த 10 வருடங்களில் சுமார் 20% குறைந்திருக்கிறது என `பொது கருவுறுதல் விகிதம்’ (GFR – General Fertility Rate) தொடர்பான தரவு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலகம், ஆண்டுதோறும் மாதிரி பதிவு அறிக்கையை வெளியிடுவது வழக்கம். கருவுறுதல் விகிதம், இறப்பு விகிதம் ஆகியவை மாநில மற்றும் தேசிய அளவில் கணக்கிட்டு வெளியிடப்படும். அந்த வகையில் இந்தியாவில் பொது கருவுறுதல் விகிதமானது, 2008 - 2010-க்குட்பட்ட மூன்று ஆண்டு இடைவெளியில் 86.1% என்றிருந்தது. இது 2018-2020-க்குட்பட்ட மூன்று ஆண்டுகளில் 68.7% எனக் குறைந்திருக்கிறது.

கருவுறுதல்
கருவுறுதல்

2020-ம் ஆண்டு வரை எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தரவுகளின்படி கிராமப்புறங்களிலேயே குறைவான கருவுறுதல் விகிதம் அதிகம் பதிவாகி இருந்திருக்கிறது. கிராமப்புறங்களில் 20.2% வீழ்ச்சியும், நகர்ப்புறங்களில் 15.6% வீழ்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது.

இதுகுறித்து, எய்ம்ஸ் மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு தலைவர் டாக்டர் சுனிதா அளித்துள்ள பேட்டி ஒன்றில், ``திருமண வயதை நீட்டித்திருப்பது, பெண் கல்வி, கருத்தடை சாதனங்களின் உபயோகம் குறித்த விழிப்புணர்வு காரணமாக இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என்பதே எங்கள் கணிப்பு” என்று தெரிவித்துள்ளார்.

இந்தத் தரவின்படி, தமிழ்நாடு மற்றும் டெல்லியில் மொத்த கருவுறுதல் விகிதம் 1.4 எனச் சரிந்துள்ளது. பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், இந்திய அளவில் மிகவும் குறைவான விகிதத்தை தமிழ்நாடு கொண்டிருக்கிறது. அதேபோல, நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும், மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது. இதேபோல கருவுறுதல் விகிதம் குறைந்துகொண்டே வந்தால், எதிர்காலத்தில் மனிதவளத்துக்காக பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களை தமிழ்நாடு நம்பியிருக்கவேண்டிய சூழல் ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது.

சிசு
சிசு
Representative Image

4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குறைவாக இருப்பதால், ஆரம்பப் பள்ளிகள் அல்லது தொடக்க வகுப்புகளின் எண்ணிக்கை குறையக்கூடும் எனச் சொல்லப்படுகிறது. அந்த நிலை நீடிக்கையில், வருங்காலத்தில் இளைய சமுதாயத்தினரின் தொகை கணிசமாகக் குறையத் தொடங்கும். இதுபோன்ற காரணங்களால் வரும் ஆண்டுகளில் பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற வடமாநில தொழிலாளர்களை மனித வளத்துக்காக சார்ந்து இயங்க வேண்டி வரலாம் எனச் சொல்லப்படுகிறது.

- இன்பன்ட் ஷீலா