இந்தியாவில் நேற்று இன்று நாளை என்று முக்காலங்களிலும் பல சந்தைகளில் ஏற்ற இறக்கங்கள் இருப்பினும் என்றும் நிலையாக இருக்கும் ஒரே சந்தை ``திருமணச்சந்தை". அதிகப்படியான இந்தியர்களின் வாழ்நாள் இலக்கே திருமணம்.

ஒவ்வொரு இந்தியரின் Short term goal (குறுகிய கால லட்சியம்) - தான் நன்கு கற்று, வேலை பெற்று, நல்ல துணையை அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் நிம்மதியாக செட்டில் ஆகிவிட வேண்டும். அடுத்து Long term goal (நீண்ட கால லட்சியமாக)- தன் குழந்தைகளுக்கு நல்ல கல்வி பெறச்செய்து வளர்த்து நல்ல துணையின் கையில் பிடித்து தர வேண்டும். இதற்கிடையில் அரசியல் மாற்றம், விலையேற்றம், காலநிலை மாற்றம் என்று எது வருமாயின் அதை பாரமாக ஏற்றுக்கொள்ளாமலும், தன் கனவுகள், ஆசைகள், சமுதாய அக்கறைகளுக்காக வைத்திருந்த திட்டங்கள் என்று எது உடைந்து போகும் ஆயினும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமலும் வாழ பழகிவிட்டோம்.
இவ்வாறாக இருக்கும் திருமணத்தை அவ்வளவு எளிதாக இங்கே அரங்கேற்றிவிட முடியாது. எத்தனை கல்யாணமாலை நிகழ்ச்சிகள் வந்தாலும், எத்தனை இணையதளப் பதிவேடுகள் வந்தாலும் இன்றளவும் திருமணம் என்பது மிகவும் Complex ஆன ஒன்று. அதற்கு பல காரணிகளும் உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
காதல் திருமணம் என்றொரு வழியைத் தேர்ந்தெடுத்து அதில் வெற்றி காண்பது தற்போது சுலபம் ஆகிவிட்டது. ஆனால் பெற்றோரால் நிச்சயிக்கப்படும் திருமணங்களின் பின்னால் இருக்கும் வலிகளும் கதைகளும் ஏராளம்.

கிட்டத்தட்ட இந்தத் திருமணப் பயணத்தை நான் ஒரு வெளிநாட்டுப் பயணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க முயல்கிறேன். பொதுவாக எந்த நாட்டுப் பயணமாயினும் அத்தியாவசிய ஒன்று கடவுச்சீட்டு. அவ்வாறாகிப்போனது ஜாதகச்சீட்டு. இது முறையாக சரியாக இருந்தால் மட்டுமே நீங்கள் அடுத்த படிக்கு செல்ல முடியும். அடுத்த படி Visa Process போன்று. இங்கே உங்களது பல தரப்பட்ட விவரங்கள் சரி பார்க்கப்படும். படிப்பு, வேலை, குடும்பப் பின்னணி, சொத்துப் பின்னணி என்று இதில் சரிபார்த்து உறுதி செய்யப் பெற்று இறுதியாக Immigration Process போன்று இன்னும் தெரிந்தவர்கள் மூலம் பல பின்னணிகளையும் சரி பார்த்து பின் பயண தேதி குறித்து காத்திருக்க வேண்டும். இந்த இடைவெளியில் பயணம் தடை பெற்றுவிட கூடாதென வேண்டி ஒரு வழியாக குறித்த தேதியில் விமானம் ஏறுவது போன்ற ஒரு பெருஞ்செயல் மணமேடை ஏறுவது என்பது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சமீப காலமாக singles, மொரட்டு singles என்ற அடைமொழிகள் கொண்டு 90ஸ் கிட்ஸ் தங்களது கல்யாணம் குறித்து வேதனையாக விளையாட்டாகப் பதிவிடும் பதிவுகள் மிக அதிகம். அவர்களிடம் கேட்கும் அதிகப்படியான கேள்வி, இன்னும் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்தக் கேள்வியைவிட இதன் பின்னணியில் இருக்கும் பார்வை இன்னும் மோசமாக இருந்திருக்கக் கூடும். அது இவர்கள் வாழ்க்கையை வெற்றியாக வாழத்தெரியாத தோல்வியாளர்களைப் போன்றதொரு பார்வை. அந்தத் தருணத்தில் சொல்ல வேண்டும் போலத் தோன்றிய பதில் தான் இந்தப் பதிவு. ''LATE MARRIAGE IS NOT EQUAL TO UNSUCCESSFUL LIFE.''

உண்மையில் இப்போது 27 வயதுக்கு மேல் திருமணம் செய்ய காத்திருப்பது LATE MARRIAGEஆ? சிறிது அலசுவோம்.
முன்னதொரு காலம் பையன் தவறான வழியில் செல்லத் தொடங்குகிறானோ என்ற அச்சத்தில் சீக்கிரம் கால்க்கட்டு போட்டால் சரி ஆகிவிடும் என்று திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால் இன்றோ பையனுக்கு History of Arrears இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டுதான் கல்யாணப்பேச்சே தொடங்கப்படுகிறது. மாப்பிள்ளை மற்றும் மாப்பிள்ளை வீட்டார் என்ற கர்வத்திற்கெல்லாம் இங்கே இப்பொழுது துளிகூட இடமில்லை. பெண் வீட்டாரின் டிமாண்ட் அவ்வாறு மாறிவிட்டது. நல்ல பையனா என்ற ஒற்றைக் கேள்வியைத் தாண்டி இன்று பல கேள்விகளுக்கு பதில் அளித்தாக வேண்டும். வெளிநாடு செல்வாரா, பெண்ணையும் கூட்டிச் செல்வாரா, பிள்ளை பிறந்தால் கவனித்துக்கொள்ள பெண்ணின் தாயாரையும் கூட்டிச் செல்வாரா, டெவெலப்மென்ட் ப்ராஜெக்டா, நைட் ஷிப்ட் உள்ளதா, IT வேலையை விட்டால் தொழில் தொடங்கும் ஆர்வம் இருக்கிறதா என்றெல்லாம் பல்வேறு கேள்விகள். பரீட்சையைவிட இதற்கு விடை காண்பது இக்கால ஆண் பிள்ளைகளுக்கு ஒரு சவால்தான்.
ஒரு ஆண் சந்திக்கும் கேள்விகளைத் தாண்டி இங்கே திருமணம் ஆகாத பெண் பல கேள்விகளுக்கும் பார்வைகளுக்கும் ஆளாகிறாள். படித்த படிப்பிற்கு எப்படியாவது நல்ல வேலை பெற்றுவிட வேண்டுமென்ற ஆவல், நன்கு வேலை செய்ததற்கு எப்படியாவது ப்ரோமோஷன் பெற்று விடவேண்டுமென்ற முனைப்பு, நடுத்தரக் குடும்ப கனவுகளை நிறைவேற்றிவிட வேண்டுமென்ற ஆசை என்று ஆணுக்கு நிகராக வேலைவாய்ப்புச் சந்தையில் தன்னை ஐக்கியமாக்கிக் கொள்கிறாள்.

பொதுவாக 20 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் உயர்கல்வி படிப்பை தொடராமல் 18 வயதிலிருந்தே திருமணத்திற்குத் தயாராகி வருகையில் அதிகப்படியாக 7 வருடங்களுக்குள் அதாவது 25 வயதிற்குள் எப்படியோ நிச்சயமாகி விடும். ஆனால் இன்று, நன்கு படித்து பணி செய்து வருவாய் ஈட்டி ஒரு பெண்ணும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பாடுபடுகிறாள். அதற்கு அவளும் சில காலங்களை எடுத்துக்கொள்கிறாள்.
ஆணோ பெண்ணோ படிப்புதான் வாழ்க்கை என்று சொல்லிச் சொல்லி பதின்பருவம் வரை வளர்க்கப்படுகிறார்கள். படித்து முடித்த பிறகு தனக்கான அங்கீகாரத்தை தேடிக்கொள்ள வேண்டும் என்று ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். இவ்வாறாக வளர்ந்த பிள்ளைகள் முட்டி மோதி இந்தப் போட்டி நிறைந்த உலகில் ஒரு இடம் தேடும் பொழுது "சரிப்பா நல்லா படிச்ச நல்ல வேலைக்குப் போன, ஆனா இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கியே தம்பி, சீக்கிரம் ஒரு நல்ல சேதி சொல்லு" என்று கல்யாணம்தான் பிரதானம் என்ற அமைப்பை ஏற்படுத்திவிடுகிறார்கள். இதற்கு பின்னால் இருக்கும் நோக்கம் நல்லதாக இருப்பினும் இவ்வளவு நாள் பாடுபட்டு எட்டிய வெற்றியை சிறிது உதாசீனப்படுத்துகிறார்களோ என்றே மனம் கவலை கொள்கிறது.
அறிவியல், கலாசாரம், மண்ணின் மரபு ஆகியவற்றின் படி அந்தந்த வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டியது அவசியம்தான். ஆனால் இங்கே திருமணத்தை அவ்வளவு எளிதாக அரங்கேற்றி விடமுடியாது. ஒட்டு மொத்த புகாரையும் இந்த சிங்கள் கிட்ஸின் மேல் திணித்து விடமுடியாது. வாழ்க்கையில் செட்டில் ஆகி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இவர்கள் வைக்கும் வாதம் உண்மைதான். ஆனால் இந்த வாதத்தை வற்புறுத்தி அவர்களிடம் திணித்தது இந்தப் பேராசை கொண்ட சமுதாயம் தான்.

எந்த இளைஞனும் திருமணம் வேண்டாம் என்று கொடி ஏந்துவதில்லை. பெண்ணைப் பார்த்தோமா.. சீர் பேசினோமா .. தாம்பூலம் மாற்றினோமா என்றில்லாமல் பல்வேறு சமூகச் சிக்கல்களைக் கொண்டுள்ளது இன்றைய திருமண வைபோகம். அதில் இந்த இளைஞர்கள் பெற்றோர்களை சமன் செய்து, அந்நியர்களின் கேள்விகளுக்கு விடை அளித்து, தன் கனவுகளுக்கு உயிர் கொடுத்து, தன் ஆசைகளை அடக்கி வைத்து மிக அழகாக பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு தேவை அன்பான வார்த்தையும், கனிவான ஊக்கமும்தான். இன்னும் கல்யாணம் செய்யவில்லையா, என்னப்பா நீ காசுக்காக வாழ்க்கையை பணயம் வைக்கிறாயே, சாதிக்கிறதெல்லாம் இருக்கட்டும் முதல்ல ஒரு கல்யாணத்த முடி என்று கேள்விகளால் துளைத்தெடுக்காமல், நம்பிக்கையைக் குறைக்காமல் அவர்களது கனவுகளுக்கு கை கொடுங்கள். அவர்களுக்காக விரைவாக நல்ல வரனைத் தேட முயற்சி செய்யுங்கள். சொற்களைவிட செயல் சிறப்பானது.
ஆக இரு பாலினத்தாருமே பல விதமான அழுத்தங்களை சுமந்த படியே இந்த நிலையைக் கடந்து வரவேண்டி இருக்கிறது. இது போதாது என்று முறையான வாழ்க்கை முறை இல்லாத காரணத்தினால் பருமன், வழுக்கை, உடல் சோர்வு, மனச் சோர்வு என்று ஒரு மிக நீண்ட பட்டியலும் ஒட்டிக்கொள்கிறது.

தன் வயதில் இருப்போரெல்லாம் திருமணம் முடிந்து தங்கள் துணையோடும் குழந்தையோடும் இடும் பதிவுகளைப் பார்த்து பொறாமைக்கும், ஆசைக்கும் நடுவில் ஒரு மெல்லிய கோட்டுக்குள் நின்று கொஞ்சம் பெருமூச்சு விட்டு, பின் ஒரு LIKE ஐ போட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டும் என்று இலகுவாகக் கடந்து விடுகிறார்கள். இந்த தாமதம் தன் பெற்றோரை கவலைப்படுத்திவிட கூடாதென்றும், தன்னால் தன் தங்கை, அண்ணன் அவர்களது திருமணமும் தாமதப்படுகிறதே என்ற குழப்பத்தோடும் சோகத்தை கண்ணில் மறைத்தே காலத்தைக் கடக்கிறார்கள். பல கவலைகள் இருந்தபோதிலும் துவண்டுவிடாமல் சிறிது கெத்தாக சிங்கிள்ஸ் டா என்று மகிழ்ச்சியாகக் கூறி தங்களை தாங்களே புத்துணர்வு பெறச்செய்து, வாழ்க்கையின் பல பாடங்களை இந்த இடைவெளியில் கற்றுக்கொண்டு, இன்னும் பக்குவதோடும், மன எழுச்சியோடும் முன்பைவிட மேலும் சிறப்பாக ஓடுவதற்கு நன்கு தயாராகி வருகிறார்கள்.
23 வயதில் திருமணம் செய்து பல காரணங்களால் வேலையை விட்டு, பிறந்த வீட்டிற்கு உதவ முடியவில்லை, என் கனவுகள் காணாமல் போயின என்று பின்னாளில் சலித்துக்கொள்ளும் பெண்களைவிட, இன்னும் சிறிது காலம் எடுத்து தன் பிறந்த வீட்டு தேவையைத் தீர்த்து, தன் திருமணத்திற்கு தானே தயார்செய்து கொண்டு 30 வயதில் மணம் முடிக்கும் பெண்கள் அதீத வெற்றியாளர்களே!!! வேலை கிடைத்து 2 வருடங்களில் எல்லாம் திருமணம் செய்து பின் மனைவியை தன் வீட்டுக்கடன், வண்டிக்கடன் இன்ன பிற கடன்கள் போன்றவற்றை அடைப்பதற்கு பார்ட்னர் ஆக பார்க்கும் ஆண்களுக்கு இடையே, கொஞ்சம் காத்திருந்து, தன் தேவையைத் தீர்த்து, எல்லாம் சரி செய்து வாழ்க்கையை மட்டும் வாழ துணையைத் தேடி காத்திருக்கும் ஆண்கள் அதீத வெற்றியாளர்களே.

இது திருமணம் செய்தவர்களை சாடும் பதிவல்ல. இன்னும் திருமணம் செய்யவில்லையா என்ற கேள்விக்கான பதில். பெண் வீட்டாரின் டிமாண்ட், ஆண் வீட்டாரின் வரதட்சணை என்பதை தாண்டி இன்றைய இளைஞர்களுக்கு பல சவால்கள் நிறைந்ததாய் இருக்கின்றது திருமணம். இதை இக்காலப் பெரியோர்கள் புரிந்து கொண்டு ஆவன செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலான இளைஞர்களின் அவா. MARRIAGE IS MARRIAGE. THERE IS NO EARLY OR LATE IN IT!!
-நாக சரஸ்வதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/