Published:Updated:

புதிய முன்னுதாரணம்..!- கர்நாடக நாட்டுப்புறக்கலை அகாடமிக்குத் தலைவரான திருநங்கை

திருநங்கை ஒருவர் அகாடமிக்குத் தலைவராகப் பொறுப்பேற்பது இதுவே முதல்முறை.

மஞ்சம்மா
மஞ்சம்மா

மஞ்சம்மா என்னும் 62 வயது நாட்டியக் கலைஞரை மாநிலத்தின் நாட்டுப்புறக்கலை மற்றும் கலைஞர்கள் நல்வாழ்வு அகாடமியின் தலைவராக அறிவித்துள்ளது கர்நாடக மாநில அரசு. இவர் ஒரு திருநங்கை. திருநங்கை ஒருவர் அகாடமிக்குத் தலைவராகப் பொறுப்பேற்பது இதுவே முதல்முறை. கர்நாடகாவின் 'ஜோகட்டி' நாட்டியக் கலையில் தேர்ந்த நிபுணர் மஞ்சம்மா. இதனால், அவரின் பெயரே ஜோக்கட்டி மஞ்சம்மா' என்றாகி விட்டது. அவரின் வாழ்க்கை மற்றும் சந்தித்த போராட்டங்கள் குறித்த பாடம் அந்த மாநிலத்தின் ஐந்தாம் வகுப்பு பாடத்திலும் கர்நாடக நாட்டுப்புறக்கலைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டப்படிப்பிலும் இடம்பெற்றிருக்கிறது.

மஞ்சம்மா
மஞ்சம்மா

மஞ்சம்மா, மற்ற திருநங்கைகளைப் போலவே தொடக்கத்தில் குடும்பத்தால் தவிர்க்கப்பட்டவர். ”மாற்றுத்திறனாளியாக இருக்கும் குழந்தையைக் கூடக் காப்பாற்றி வளர்ப்போம். ஆனால், உன்னை ஏற்றுக்கொள்ளமுடியாது” என்று தந்தையால் வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர். அதற்குப்பிறகு தற்கொலைக்கு முயன்று, ஊர்விட்டு ஓடிவந்து , பிச்சையெடுத்து எனப் போராடிக் கொண்டிருந்தவர் நாட்டுப்புறக்கலைஞர்களுடன் சேர்ந்து கர்நாடக நாட்டுப்புறக்கலைகளான சௌடகி படா, ஜோகட்டி உள்ளிட்ட கலைகளைக் கற்றார்.

ஒருவேளை உணவுக்காகக் கலையைக் கற்கத் தொடங்கியவர், பின்னாளில் இட்லி விற்றுக்கொண்டே நாட்டியப் பயிற்சியை மேற்கொண்டார். இட்லி விற்றும் மாலை வேளைகளில் டியூஷன் எடுத்தும் கிடைக்கும் பணத்தைக் கலையைக் கற்றுக்கொள்ளச் செலவழித்தார். தற்போது அகாடமியின் தலைவராக மஞ்சம்மா பொறுப்பேற்றிருக்கும் நிலையில் தன்னை வெளியே துரத்திய அதே குடும்பம் தனக்கு வாழ்த்து தெரிவித்ததை ஆனந்தக் கண்ணீருடன் பகிர்கிறார்.

கர்நாடக மாநில கலாசாரத்துறையின் இந்த முன்னெடுப்பு பல்வேறு மாநிலக் கலைத்துறைக்கும் முன்னுதாரணமாக அமையட்டும்.

கர்நாடக ஜனபடா அகாடமி என்னும் நாட்டுப்புறக்கலைஞர்கள் மற்றும் கலைகளுக்கான மையம் கன்னடம் மற்றும் கலாசாரத்துறையின்கீழ் இயங்கிவருகிறது. இதன் தலைவராக இருப்பவர்கள் கலைகள் மற்றும் கலைஞர்கள் சார்ந்த அரசின் கொள்கை வரையறைகளைத் தீர்மானிப்பது மற்றும் அது தொடர்பான வழிகாட்டுதல்களில் பங்களிப்பார்கள். கர்நாடக மாநில கலாசாரத்துறையின் இந்த முன்னெடுப்பு பல்வேறு மாநிலக் கலைத்துறைக்கும் முன்னுதாரணமாக அமையட்டும்.