தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஆவணம்- பெரியநாயகிபுரம் வழியாகப் பாய்கிறது காவிரியின் கிளை ஆறான கல்லணைக் கால்வாய். இந்த ஆற்றின் கரைகளிலிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விலையுயர்ந்த மரங்களை வனத்துறையினர் உதவியுடன் ஒரு கும்பல் வெட்டியது தொடர்பாக கடந்த ஜூ.வி இதழில் எழுதியிருந்தோம்.

இதில் தொடர்புடைய மர வியாபாரிகளான கணேசன், ராஜேந்திரன், சண்முகநாதன் ஆகிய மூவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சண்முகநாதன் தலைமறைவாகியுள்ள நிலையில், மற்ற இருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வனத்துறையைச் சேர்ந்த வனவர் ராமதாஸ், வனக்காப்பாளர் கணபதிசெல்வம் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வனச்சரகர் இக்பாலிடம் விசாரணை தொடர்கிறது. இரண்டு லாரிகளில் தூத்துக்குடிக்குக் கடத்திச் செல்லப்பட்ட மரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது குறித்து பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி வீரசேனனிடம் பேசினோம். “ஆற்றங்கரையை பலப்படுத்த வனத்துறையினரால் கரைகளில் தேக்கு, மருதம், ரோஸ்வுட் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. அவை வனத்துறையினராலும், இயற்கையாக வளர்ந்த மரங்கள் பொதுப்பணித் துறையினராலும் பராமரிக்கப்படுகின்றன. ஆனால், அந்தத் துறையினர் சிலரே இந்தக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஏதாவதொரு பொய்யான காரணத்தைச் சொல்லி, மர வியாபாரிகளைவைத்து ஆற்றங்கரையோரம் உள்ள மரங்களை வெட்டிக் கடத்துவது பல ஆண்டுகளாகவே தொடர்கிறது. எத்தனை மரங்கள் இருக்கின்றன என்ற புள்ளிவிவரம் வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறையினரிடம் இருக்கிறது. அதை ஆராய்ந்தாலே இதுவரை எத்தனை மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளன என்ற உண்மை தெரியவரும். இப்போது மரங்கள் வெட்டப்பட்டதில் வனத்துறை, பொதுப்பணித்துறையைச் சேர்ந்த பலருக்கும் தொடர்பிருக்கிறது. சிலர்மீது மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு பலரைக் காப்பாற்ற முயற்சிகள் நடக்கின்றன” என்றார்.

இது குறித்து தஞ்சை மாவட்ட வனச்சரகர் ஜோதிக்குமாரிடம் பேசினோம், “என் தலைமையில் ஏழு பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. இரண்டு லாரிகளில் தூத்துக்குடிக்குக் கடத்திச் செல்லப்பட்ட மரங்கள் மரக்கடை ஒன்றில் பதுக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்து மீட்டிருக்கிறோம். அவற்றை பொது ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும்” என்றார்.
பேராவூரணி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பிரசன்னாவிடம் பேசினோம். “வனத்துறைக் கட்டுப்பாட்டிலிருந்த மரங்களே வெட்டப்பட்டிருக்கின்றன. இதற்கும் எங்கள் துறைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்றார்.