சாலையில் வீசப்பட்ட குப்பை... 80 கி.மீ பயணம் - திரும்ப வந்து எடுக்கவைத்த கர்நாடக அதிகாரிகள்!

அதைப் பார்த்த பொதுமக்கள் சிலர் அவர்களை செல்போனில் தொடர்புகொண்டு திரும்பச் சென்று அந்த இடத்தைச் சுத்தம் செய்துகொடுக்க வலியுறுத்தியிருக்கிறார்கள்.
சுற்றுலா தலங்களில் வீசியெறியப்படும் குப்பைகள், இயற்கை அழகை மாசுபடுத்தும். இதைத் தவிர்க்க அரசுகளும், இயற்கை ஆர்வலர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பல மாநில அரசுகள் தண்டனை விதிப்பதை நடைமுறைப்படுத்தியிருக்கின்றன. அந்தவகையில், கர்நாடகா மாநிலம் மடிகேரியில் உள்ளூர்வாசிகள், அதிகாரிகளின் அறிவுரையால், இரண்டு சுற்றுலாப் பயணிகள் தாங்கள் சாலையில் வீசிச் சென்ற பீட்ஸாப் பெட்டிகளை 80 கி.மீ பயணம் செய்து வந்து அப்புறப்படுத்திய சம்பவம் நடந்திருக்கிறது.
கர்நாடகா மாநிலம், மடிகேரிக்குச் சுற்றுலா வந்த இரண்டு பேர், பீட்ஸா பெட்டிகளைச் சாலையிலேயே வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அவை குடகு மாவட்ட சுற்றுலாத்துறை பொதுச்செயலாளர் மடேதிரா திம்மையா (Madetira Thimmaiah) உட்பட அந்தப் பகுதிவாசிகள் கண்ணில்பட்டிருக்கின்றன.

அதன் பிறகு நடந்தவற்றை விளக்கிய மடேதிரா திம்மையா, ``மலைகிராமப் பகுதியான இந்தச் சுற்றுலாத் தலத்தில் பொது இடங்களில் குப்பைகளை வீசுவதைத் தடைசெய்திருக்கிறோம். தடையை மீறுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். இந்தப் பகுதியைச் சுத்தமாக வைத்திருக்க கடகடாலு (Kadagadalu) ஊராட்சிப் பணியாளர்களும் தீவிரமாகப் பணியாற்றிவருகிறார்கள். கடந்த புதன்கிழமை முதல் ஊராட்சிப் பணியாளர்களுடன் சேர்ந்து எங்கள் பகுதியைச் சுத்தம் செய்துகொண்டிருந்தோம்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:15 மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதுதான், அந்த பீட்ஸா பெட்டிகளைப் பார்த்தேன். நாங்கள், இந்த மலைப் பகுதியைச் சுத்தமாக வைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், இந்தப் பெட்டிகளை பார்த்ததும் எங்கள் முயற்சி அனைத்தும் வீணானதுபோல உணர்ந்தேன். பிறகு, அந்தப் பெட்டிகளைத் திறந்து பார்க்க முடிவு செய்தேன். அதிர்ஷ்டவசமாக அதற்குள் செல்போன் நம்பருடன்கூடிய ஒரு பில் இருந்தது.
நான் குறிப்பிட்ட அந்த எண்ணுக்கு அழைத்து அவருடன் பேசினேன். குப்பைகளை வீசிச் சென்றதற்காக அவர் மன்னிப்புக் கேட்டார். அவரைத் திரும்ப வந்து, பீட்ஸா பெட்டிகளை எடுத்துச் செல்லும்படி கேட்டேன். ஆனால், அவர் குடகு மாவட்டத்தைவிட்டுச் சென்றுவிட்டதால், திரும்பி வர மறுத்துவிட்டார்.
அதனால், நான் உள்ளூர் காவல்துறையினரை உதவிக்கு அழைத்தேன். காவல்துறை உதவி ஆய்வாளர் பேசிய பிறகும் அவர்கள் வர மறுத்தனர். அதன் பிறகுதான் நாங்கள் இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டோம்.
அவர்களின் செல்போன் நம்பரும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அதைப் பார்த்த பொதுமக்கள் சிலர் அவர்களை செல்போனில் தொடர்புகொண்டு திரும்பச் சென்று அந்த இடத்தைச் சுத்தம் செய்து கொடுக்க வலியுறுத்தியிருக்கிறார்கள். பொதுமக்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக மாலை 3:45 மணி அளவில் இருவரும் 80 கி.மீ பயணம் செய்து வந்து, குப்பைகளை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டனர். இதற்காக அவர்கள் மிகவும் வெட்கப்பட்டனர்’’ என்றார்.