Published:Updated:

16-வது பறவைகள் சரணாலயமாக கழுவெளி சதுப்பு நிலம் அறிவிப்பு! இயற்கை ஆர்வலர்கள் வரவேற்பு.

கழுவெளி பறவைகள் சரணாலயம்
News
கழுவெளி பறவைகள் சரணாலயம்

தமிழகத்தில், புலிக்காட்டுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ஏரி இது தான். ஒவ்வொரு வருடமும் சுமார் 75,000 முதல் 1,00,000 எண்ணிக்கை வரையிலான பறவைகள் இங்கு வருகின்றன.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் - வானூர் வட்டத்தில் 5151.60 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது கழுவெளி சதுப்பு நிலம். கடல் நீரும், நன்னீரும் சங்கமிக்கும் இடத்திற்கு அருகாமையிலேயே ரம்மியமான சூழலில் காணப்படுகிறது இப்பகுதி. இந்தியா மட்டுமின்றி அயல்நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பறவைகள், இனப்பெருக்க காலத்தின்போது இப்பகுதிக்கு வந்து ஒன்று சேர்கின்றன. அச்சமயங்களில் மிகவும் அழகாக காணப்படும் இந்த கழுவெளி பகுதி. பறவைகள், அதிக அளவில் வந்து செல்லும் இப்பகுதியை "பறவைகள் சரணாலயம்" ஆக அறிவிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மூலம் கோரிக்கை எழுந்தது. இந்த நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான பணிகள் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில், கழுவெளி சதுப்பு நிலத்தை 16-வது பறவைகளின் சரணாலயமாக இன்று (06.12.2021) அறிவித்துள்ளது தமிழ்நாடு வனத்துறை.

கழுவெளி
கழுவெளி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது தொடர்பாக அப்பகுதி இயற்கை சூழலியல் ஆர்வலர் டாக்டர்.புபேஷ் குப்தா என்பவரிடம் பேசினோம். "இந்த அறிவிப்பு முன்கூட்டியே வந்திருக்கணும். இது சற்று தாமதம் தான் என்றாலும், வரவேற்கக்கூடிய ஒன்று. உணவுக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் இடம்பெயர்ந்து வரும் பறவைகள் ஒன்றாக சேரக்கூடிய ஒரு முக்கிய இடமாக கழுவெளி உள்ளது. நம் தமிழகத்தில், புலிக்காட்டுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ஏரி இது தான். ஒவ்வொரு வருடமும் சுமார் 75,000 முதல் 1,00,000 எண்ணிக்கை வரையிலான பறவைகள் இங்கு வருகின்றன. மரக்காணம் வட்டத்தில் 3027.25 ஹெக்டேர் பரப்பளவிலும், வானூர் வட்டத்தில் 2124.35 ஹெக்டேர் பரப்பளவிலும் பரந்துவிரிந்து காணப்படுகிறது இந்த கழுவெளி. இந்த பகுதிக்கு... பர்மா, பாகிஸ்தான், இலங்கை, இந்தோனேசியா மற்றும் பல நாடுகளில் இருந்தும் உணவு மற்றும் இனப்பெருக்கத்திற்காக அதிக அளவிலான பறவைகள் வந்து குவிகின்றன. அழிவின் விளிம்பில் உள்ள பறவைகள் அதிக அளவில் இங்கு வருகின்றன. குறிப்பாக கூளைக்கடா (பெலிக்கன்), பூ நாரை, மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, அரிவாள் மூக்கன், கரண்டி மூக்கன், பாம்பு தாரை போன்ற பறவைகளை இங்கு அதிகம் பார்க்க முடியும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

உலக அளவில் ஒப்பிடும்போது இந்த பறவைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அவை இந்த பகுதிக்கு கூட்டமாக வருகின்றன. இந்த இடம் பறவைகளுக்கு ஒரு நல்ல இடமாக இருக்கிறது. காரணம் என்னவென்றால், அப்பறவைகளுக்கு ஏற்றதான காலநிலை, உணவு ஆகியவை இந்த இடத்தில் சரியாக அமைந்துவிடுகின்றன. அதேபோல, கழுவெளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 220 ஏரி, குளம், குட்டை இருக்கிறது. மழை நேரத்தில் அவை நிரம்பினால்... அந்த தண்ணீர் கழிவெளிக்கு தான் வருகிறது. அங்கிருந்து கடலுக்கு செல்கிறது. மக்களின் குடியிருப்புகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருப்பதற்கு கழுவெளி அவசியமான ஒன்று. கடற்கரைக்கு அருகாமையிலேயே அமைந்துள்ள மரக்காணம், கூனிமேடு போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் நல்ல குடிநீர் கிடைக்கிறது என்றால் அதற்கு காரணம் கழுவெளி ஏரி தான். இந்த ஏரி இல்லை என்றால்... நிலம் வழியாக உப்பு தண்ணீர் பரவி, இப்பகுதிகளில் மக்கள் வாழமுடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்.

Dr.புபேஷ் குப்தா
Dr.புபேஷ் குப்தா

பறவைகளுக்கு தண்ணீரின் தரத்தை கண்டறியும் தன்மை உண்டு. இந்த கழுவெளி பகுதியை ஒட்டியபடி விவசாய நிலங்கள் அனேகமாக இருக்கிறது. இங்கு வரும் பறவைகள், விவசாய நிலங்களில் காணப்படும் தீமை தரக்கூடிய பூச்சி மற்றும் புழுக்களை சாப்பிட்டுவிடும். அந்த பறவைகளின் எச்சம் மிகப்பெரிய உரமாக தாவரங்களுக்கு அமைகிறது. இப்படியாக பல தகவல்களை சொல்லிக்கொண்டே போகலாம். கழுவெளியை பறவைகள் சரணாலயமாக அறிவித்ததன் மூலம் அந்த ஏரி பாதுகாக்கப்படும், யாராலும் எளிதில் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது, அங்கு வரும் பறவைகளுக்கு பாதுகாப்பு என்பது அதிகமாக இருக்கும், சுற்றுலாத் தலமாக மாறும் வாய்ப்பும் இருக்கிறது. அதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பும் அதிகமாக கிடைக்கும். எனவே இந்த அறிவிப்பை வரவேற்கிறோம். இது பலரின் நீண்டநாள் உழைப்பிற்கும் முயற்சிக்கும் கிடைத்த பரிசு என்றே சொல்லலாம். இந்த கழுவெளிக்காக பலர் உழைத்திருக்காங்க. அதில் ஒரு நபராக கடந்த 5 வருடமாக கழுவெளிக்கு வரும் பறவைகளைப் பற்றி தொடர்ந்து கவனித்து வருகிறேன். இதுவரை இங்கு சுமார் 260 வகையிலான பறவைகள் வந்துள்ளதை கண்டறிந்திருக்கிறோம்.

கழுவெளியை பறவைகள் சரணாலயமாக அறிவித்ததினால், அதிரடியாக அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்களிடம் அதிகாரிகள் கெடுபிடி காட்டாமல்... பறவைகள் சரணாலயம் என்றால்? அவற்றின் முக்கியத்துவம் என்ன? என்பது குறித்து அப்பகுதி மக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என்பதே எங்களுடைய சிறு கோரிக்கை" என்றார்.