Election bannerElection banner
Published:Updated:

`தனிமை வார்டு; தந்தையின் இறுதிப் பயணத்தைப் பார்க்காத சோகம்!'- கலங்கவைக்கும் கேரள இளைஞரின் வாழ்க்கை

லினோ ஏபல் - கீத்து திருமணம்
லினோ ஏபல் - கீத்து திருமணம்

தந்தையைப் பார்க்க வேண்டும் என்கிற விருப்பத்துடன் வந்த லினோ, கடைசியாகக் கூட அவரது முகத்தைப் பார்க்க முடியாததால் வேதனையடைந்தார். இதுகுறித்து அப்போது கேரள முதல்வர் பினராய் விஜயன், தன் முகநூல் பக்கத்தில் லினோவின் செயலைப் பாராட்டி இருந்தார்.

கொரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலாக மாறாத வகையில் கேரள அரசு மிகத் திறமையாகக் கையாண்டு வருகிறது. அரசின் செயல்பாடுகள் மட்டும் அல்லாமல், அந்த மாநில மக்கள் ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பும் சமூகக் கடமையும் அதன் பின்னணியில் இருக்கிறது.

representational image
representational image

இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியைச் சேர்ந்த இளைஞரான லினோ ஏபல் என்பவரின் சமூக அர்ப்பணிப்பு கேரளா முழுவதும் வைரலாகப் பரவியுள்ளது. தன்னைப் பற்றி மட்டுமல்லாமல் பிறரைக் குறித்த அவரது சிந்தனை காரணமாகப் பலரும் அவரைப் பாராட்டி வருகிறார்கள்.

லினோ ஏபல் கதை இதுதான்... தொடுபுழாவைச் சேர்ந்த 30 வயது இளைஞரான லினோ ஏபல், கத்தார் நாட்டில் வேலை செய்து வந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவரது தந்தை ஏபல் ஓவ்சப், கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டார். இதுபற்றி லினோவுக்கு அவரது சகோதரர் தெரிவித்ததும் உடனடியாக விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்தார்.

லினோ ஏபல்
லினோ ஏபல்

கடந்த மார்ச் 8-ம் தேதி அவர் வந்தபோது, உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. மாஸ்க் அணிந்து பயணம் செய்த போதிலும் லினோவுக்கு சிறிது இருமலும் தொண்டையில் வலியும் இருந்தது. அதனால் விமான நிலையத்தில் இருந்து இறங்கியதும் வீட்டுக்குச் செல்லாமல் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றார்.

அங்கு அவர் கொரோனா பரிசோதனை முடிவுக்காகக் காத்திருந்த நிலையில், அவரைத் தனிமை வார்டில் அனுமதித்தனர். அந்தச் சமயம் அவரது தந்தையும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரைப் பார்க்க லினோவால் முடியவில்லை. மறுநாள் (மார்ச் 9-ம் தேதி) லினோவின் தந்தைக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டதுடன் உயிரிழந்தார்.

உயிரிழந்த லினோவின் தந்தை ஏபல் ஓவ்சப்
உயிரிழந்த லினோவின் தந்தை ஏபல் ஓவ்சப்

அவரது உடல், லினோ அனுமதிக்கப்பட்ட தனிமை வார்டுக்கு எதிரில் இருந்த பிணவறைக்குக் கொண்டு செல்லப்பட்டு உடற்கூறாய்வு முடிந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தன் வார்டுக்கு முன்பாக இருந்து ஆம்புலன்ஸில் தந்தையின் உடல் எடுத்துச் செல்வதை ஜன்னல் வழியாகப்பார்த்து லினோ கண்ணீர் வடித்தார்.

தந்தையைப் பார்க்க வேண்டும் என்கிற விருப்பத்துடன் வந்த லினோ, கடைசியாகக் கூட அவரது முகத்தைப் பார்க்க முடியாததால் வேதனையடைந்தார். இதுகுறித்து அப்போது கேரள முதல்வர் பினராய் விஜயன், தன் முகநூல் பக்கத்தில் லினோவின் செயலைப் பாராட்டி இருந்தார்.

மனைவியுடன் லினோ ஏபல்
மனைவியுடன் லினோ ஏபல்

லினோவின் திருமணம் ஏற்கெனவே நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 11-ம் தேதி அவருக்கும் கீத்து என்பவருக்கும் திருமணம் நடந்தது. அதில், நெருக்கமான உறவினர்கள் 20 பேர் மட்டுமே பங்கேற்றனர். இது சமூக வலைதளங்களில் வைரலானதுடன் லினோவுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

இது பற்றி லினோ தன் முகநூல் பக்கத்தில், “மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற என் தந்தைக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே கத்தாரிலிருந்து வந்தேன். எனக்குக் காய்ச்சல் இல்லாதபோதிலும் சளியும் இருமலும் இருந்ததால் நானே மருத்துவரிடம் சென்று வெளிநாட்டிலிருந்து வந்த தகவலைச் சொன்னேன். நான் சொல்லாமல் இருந்திருந்தால் வெளியே தெரிந்திருக்காது.

நான் விமானத்தில் வந்து நேராக வீட்டுக்குச் சென்றிருந்தால் என் தந்தையின் முகத்தைப் பார்த்திருப்பேன். ஆனால் என்னால் பிறருக்கு நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பு இருந்தது.
லினோ ஏபல்

ஆனால் எனக்கு நோய் இருந்து, அது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பரவிவிடக்கூடாது என்பதற்காகவே மருத்துவரிடம் சென்றேன். ஒவ்வொருவரும் இதேபோல கவனத்துடன் செயல்பட்டால் மட்டுமே நோய்த் தொற்றைத் தடுக்க முடியும்.

எனக்குச் சோதனை நடத்தப்பட்டதில் கொரோனா இல்லை என்று தெரியவந்தது. நான் வெளிநாட்டிலிருந்து வந்ததால் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டேன். அந்தச் சமயத்தில் என் தந்தையும் அதே மருத்துவமனையில் இருந்தும் என்னால் பார்க்க முடியவில்லை.

`மீண்டும் அதே வார்டில் பணியாற்ற விரும்புகிறேன்!’-கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நர்ஸ் உருக்கம்

கடைசியாக அவர் இறந்த பின்னரும் என்னால் அவர் முகத்தைப் பார்க்க முடியவில்லை. ஜன்னல் வழியாக அவரை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸைப் பார்த்து அழ மட்டுமே முடிந்தது. இந்த வருத்தம் எனக்குக் காலம் முழுவதும் இருக்கும்” என்று தன் ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளார். 

அவருக்கு தற்போது திருமணம் நடந்துள்ள நிலையில் கேரளா முழுவதும் லினோவின் செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு