Election bannerElection banner
Published:Updated:

மதுரை: ``அந்தக் குழந்தைங்க பாதுகாப்பான இடத்துக்குப் போயிட்டாங்க!" - நிம்மதியில் தெருவாசிகள்

குழந்தைகள்
குழந்தைகள்

''இந்தக் குழந்தைகளுக்கு ஆதார் கார்டுகூட இல்ல. எனவே, அதையும் அரசு உடனடியா பெற்றுக்கொடுத்து, குழந்தைகளின் கல்வி தொடரவும் உதவி செய்யணும்.''

மதுரை மானகிரி பகுதியில் உள்ளது சாவடித் தெரு. இப்பகுதியைச் சேர்ந்த தெய்வானை என்ற 70 வயது மூதாட்டி, செவித்திறன் குறைபாடு மற்றும் பார்வைக் கோளாறு உடையவர். அரசு வழங்கும் 1,000 ரூபாய் உதவித் தொகையை வைத்து வாழ்ந்துவருகிறார். இந்நிலையில் இவரின் இரண்டு மகன்களில் ஒருவர் இறந்துவிட, மற்றொரு மகன் கடன் தொல்லை காரணமாக வீட்டைவிட்டுச் சென்றதாகக் சொல்லப்படுகிறது.

பாட்டியுடன் குழந்தைகள்
பாட்டியுடன் குழந்தைகள்

இதனால், தெய்வானை பாட்டியின் இரண்டு மகன்களின் குழந்தைகளும், தாய் மற்றும் தந்தையின் ஆதரவை இழந்து பாட்டியுடன் இருந்து வந்தனர்.

பாட்டியின் ஆதரவிலிருந்த மணிமேகலை, ஸ்வேதா, பாண்டி ஆகிய மூன்று குழந்தைகளும் அக்கம் பக்கத்தினருக்கு உதவிசெய்தும் பூ கட்டியும் சிறிது வருமானம் ஈட்டிவந்தனர். இது குறித்து விகடன் தளத்தில், 'எங்களுக்கு இப்ப யாரும் இல்ல, அப்பத்தா மட்டும்தான்!" வயதான பாட்டியோடு தவிக்கும் சிறார்கள்' என்ற தலைப்பில் உருக்கமான செய்தி வெளியிட்டோம். பிற வலைதளங்களிலும் செய்தி வெளியாகியிருந்தது.

இந்தக் குழந்தைகளின் நிலை பற்றி மதுரை மாவட்ட ஆட்சியர் கவனத்துக்குச் செல்ல, குழந்தைகள் மற்றும் பாட்டி இப்போது காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சாவடித் தெருவைச் சேர்ந்த பெண்கள் நம்மிடம், "தெய்வானை பாட்டியையும் மூணு குழந்தைகளையும் மாவட்ட நிர்வாகத்தினர் தேனூருக்குக் கூட்டிட்டு போயிருக்காங்க. அங்க கொரோனா பரிசோதனை செஞ்சதுக்கு அப்புறம், குழந்தைகளைக் காப்பகத்துல சேர்த்திருக்காங்க. பாட்டியைத் தேனூர்ல இருக்கிற முதியோர் இல்லத்துல சேர்ப்பதாவும் அதிகாரிங்க சொன்னாங்க. குழந்தைகளுக்கு உதவி செஞ்ச எல்லாருக்கும் நன்றி'' என்றனர்.

பூ கட்டும் குழந்தைகள்
பூ கட்டும் குழந்தைகள்

சமூக ஆர்வலர்கள் நம்மிடம், ``பாட்டியின் ஆதரவில் இருந்த மூன்று குழந்தைகளும் இந்தச் சின்ன வயதிலேயே நிறைய கஷ்டங்களை அனுபவிச்சுட்டாங்க. தள்ளாடும் வயதில் அந்தப் பாட்டியால் குழந்தைகளைப் பாதுகாக்க, பராமரிக்க முடியலை பாவம். மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுத்து அவங்களைக் காப்பகத்தில் சேர்த்தது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

இந்தக் குழந்தைகளுக்கு ஆதார் கார்டுகூட இல்ல. எனவே, அதையும் அரசு உடனடியா பெற்றுக்கொடுத்து, குழந்தைகளின் கல்வி தொடரவும் உதவி செய்யணும்'' என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு