Published:Updated:

ஆட்சி கலைப்பு சட்டம் 356 தேவையா? - மாநில சுயாட்சி-3

சட்டசபை கலைப்பு

1947 இல் நாடு விடுதலை அடைந்து நமக்கான அரசியலமைப்பு சட்டத்தை வகுத்து கொண்ட பின், ஜூன் 1951 இல் பஞ்சாப் அரசு அரசியலமைப்பு சட்டம் 356 பயன்படுத்தப்பட்டு முதன்முதலாக கலைக்கப்பட்டது, அப்போது முதல் இதுவரை..

ஆட்சி கலைப்பு சட்டம் 356 தேவையா? - மாநில சுயாட்சி-3

1947 இல் நாடு விடுதலை அடைந்து நமக்கான அரசியலமைப்பு சட்டத்தை வகுத்து கொண்ட பின், ஜூன் 1951 இல் பஞ்சாப் அரசு அரசியலமைப்பு சட்டம் 356 பயன்படுத்தப்பட்டு முதன்முதலாக கலைக்கப்பட்டது, அப்போது முதல் இதுவரை..

Published:Updated:
சட்டசபை கலைப்பு

இந்திய அரசியலமைப்பு சட்டம் 356, இது ஆளுநரின் பரிந்துரைப்படி, குடியரசு தலைவர் மாநில அரசுகளை கலைக்கும் அதிகாரத்தையும், அதனை தொடர்ந்து கலைக்கப்பட்ட அந்த அரசுக்கு பதிலாக குடியரசு தலைவர் ஆட்சியை அந்த மாநிலத்தில் நியமித்து ,குடியரசுத் தலைவரின் ஆலோசனைபடி அந்த கலைக்கப்பட்ட மாநிலத்தின் ஆளுநர் அந்த மாநிலத்தை நிர்வகிக்கும் அதிகாரத்தை கொடுத்திருக்கிறது.

நடைமுறைப்படி சொல்லவேண்டுமானால், குடியரசு தலைவர் ஆட்சி என்பது ஒரு மாநில அரசை கலைத்து ஒன்றிய அரசு நேரடியாக ஆளுநர் மூலம் அந்த மாநிலத்தை ஆளுவதே ஆகும். அதாவது, எப்போதெல்லாம் மாநில அரசு இயந்திரம் பழுதடைந்தது என்று நினைக்கிறார்களோ, அப்போதெல்லாம் அதன் மீது ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில், அதாவது ஆட்சியை கலைத்து விட்டு குடியரசு தலைவர் ஆட்சியை நிறுவி, அதன் பிறகு, ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்தி புதிய அரசை தேர்ந்தெடுக்கும் உரிமையை கொடுத்திருக்கிறது. மேலும் இந்த ஆறு மாதம் என்பது நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு ஒவ்வொரு ஆறு மாதம் என்று மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப் படலாம்.

ஆட்சி கலைப்பு  சட்டம் 356  தேவையா? - மாநில சுயாட்சி-3

356 பிரிவின்படி மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஒரு நியமன ஒருங்கிணைப்பாளரான ஆளுநரின் அறிக்கையை பெற்று, ஒன்றிய அரசின் ஒப்புதலுடன் குடியரசு தலைவர் கலைக்கிறார். இதில் ஒரு விஷயத்தை மிக தெளிவாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டவர், அதனால் அவரது அனைத்து நடவடிக்கைகளும் ஒன்றிய அரசுக்கு சாதகமாக இருக்கும் என்பதே யதார்த்தம். அதற்கு உதாரணம் திருமதி. இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் 1966 லிருந்து 1977வரை அரசியலமைப்பு சட்டம் 356 பயன்படுத்தப்பட்டு வெவ்வேறு மாநில அரசுகள் கலைக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1947 இல் நாடு விடுதலை அடைந்து நமக்கான அரசியலமைப்பு சட்டத்தை வகுத்து கொண்ட பின், ஜூன் 1951 இல் பஞ்சாப் அரசு அரசியலமைப்பு சட்டம் 356 பயன்படுத்தப்பட்டு முதன்முதலாக கலைக்கப்பட்டது, அப்போது முதல் இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட முறை மாநில அரசுகள் கலைக்கப் பட்டுள்ளன. இதுவரை நடந்த ஆட்சி கலைப்புகள் பெரும்பாலும் ஒன்றிய அரசின் ஒப்புதலுடன் நடந்தவையே. இன்னும் சொல்லப்போனால் ஒன்றிய அரசின் ஆட்சி கலைப்பிலிருந்து தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களைத் தவிர தப்பாத மாநிலங்களே இல்லை என்றே சொல்லலாம். நமது தமிழ்நாடும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆம், தமிழ்நாடு சட்டமன்றம் இதுவரை நான்கு முறை 356 சட்ட படி ஒன்றிய அரசின் ஆட்சி கலைப்பால் காவு வாங்கப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி

முதலாவதாக, ஜனவரி 1976 ல் மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் கலைக்கப்பட்டது. இரண்டாவதாக பிப்ரவரி 1980 இல் எம்.ஜி .ஆர் தலைமையிலான அதிமுக அரசு மீண்டும் இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் கலைக்கப்பட்டது. இந்த இரண்டு அரசுகளும் சட்டமன்றத்தில் தனி பெரும்பான்மை பெற்ற அரசுகள் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவதாக, ஜனவரி 1988 இல் வி.என். ஜானகி தலைமையிலான அதிமுக அரசு ராஜீவ் காந்தி அவர்கள் ஆட்சி காலத்தில் கலைக்கப்பட்டது. கடைசியாக, நான்காவது முறையாக, ஜனவரி 1991 இல் மீண்டும் மு.கருணாநிதி அவர்கள் தலைமையிலான தனிப் பெரும்பான்மையுடன் இருந்த திமுக அரசை பிரதமர் சந்திரசேகர் அவர்கள் ஆட்சி காலத்தில் கலைக்கப்பட்டது. இந்த 356 அரசியலமைப்பு சட்டம் என்பது எல்லா நேரங்களிலும் ஒன்றிய அரசால் அல்லது குடியரசு தலைவரால் சரியாகத்தான் கையாளப்பட்டுள்ளதா? என்றால் அதன் பதில் இல்லை என்பதே ஆகும். மாறாக, பெரும்பாலான நேரங்களில் அது அரசியல் பழி வாங்களாகவே வரலாற்றில் இருந்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1967 இல் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து இன்று ஸ்டாலின் அவர்கள் தலைமையில் பொறுப்பேற்றது வரை எப்போதெல்லாம் திமுக ஆட்சி பொறுப்புக்கு வருகிறதோ அப்போதெல்லாம் ஆட்சி கலைப்பு என்ற கோஷமும் சேர்ந்தே துரத்தி கொண்டே வரும். ஆம் 1967 ல் திமுக முதல் முறையாக பதவி ஏற்ற பின் தமிழினத்திற்கு அறிஞர் அண்ணா செய்த முத்தான மூன்று விசயங்கள், முதலாவது சுயமரியாதை திருமணத்திற்கு சட்டம் உருவாக்கியது, இரண்டாவது சென்னை மாநிலம் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம், மூன்றாவது இருமொழி கொள்கையை அறிமுகப்படுத்தி அன்னை தமிழ் நிலத்தில் இந்திக்கு இடமில்லை என்று அறிவித்தது. இந்த மூன்று திட்டத்தின் மீது அன்று பேசிய அண்ணா அவர்கள்,

"நான் நிறைவேற்றிய இந்த திட்டத்தை பார்த்துவிட்டு பலருக்குக் கோபமும், ஆத்திரமும் வருகிறது, இவர்களை விட்டு வைக்கலாமா ஆட்சியை கலைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், முடியுமா? என்று நான் சவால் விட மாட்டேன். உங்களால் முடியும்."

அறிஞர் அண்ணா
அறிஞர் அண்ணா

இப்படியாக, 1967 இல் தொடங்கி இன்று வரை பல உப்பு, சப்பில்லாத காரணங்களுக்காக 356 சட்டம் இன் படி ஆட்சி கலைப்பு கோசங்களும், முணு முணுப்புகளும் அரங்கேற தொடங்கி இருக்கிறது. உண்மையில் ஆட்சி கலைப்பு என்பது அவ்வளவு எளிதானதா? இரவோடு இரவாக ஆட்சியை கலைப்பது சாத்தியமா? அதற்கு பதில் ஆம் எளிதானது தான், சாத்தியமானதுதான், ஆனால் அதற்கான சூழ்நிலை இப்போது இல்லை, 1994க்கு முன்பு எஸ்.ஆர். பொம்மை வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முன்பு வரை இருந்தது. இப்போது அதற்கான வாய்ப்புகள் என்பது அவ்வளவு எளிதானதாக இல்லை. அப்படியென்றால், இந்த கோசத்தை எழுப்புபவர்கள் இதை நடைமுறை படுத்தும் இடத்தில் இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை, அப்படியென்றால், இந்த கோசம் என்பது வெறுமனே தங்கள் ஆதரவாளர்களை மகிழ்ச்சி படுத்த மட்டுமே செய்யுமே தவிர வேறொன்றையும் செய்யாது என்பதும் அவர்களுக்கு தெரியும்.

மேலும், இந்திய அரசியலமைப்பை பொறுத்தவரை, இங்கு ஒன்றிய அரசுதான் மேலானது என்றோ அல்லது மாநில அரசுகள் ஒன்றிய அரசுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்றோ எங்கும் குறிப்பிடப்படவில்லை, மாறாக, கூட்டாட்சியில் ஒன்றிய அரசு என்ற அரசுக்கு இணையாக மாநில அரசு என்று ஒன்று உள்ளது. ஒன்றிய அரசுக்கு ஒன்றிய பட்டியலில் சட்டமியற்ற உரிமை உள்ளது என்றால், மாநிலங்களுக்கு மாநில பட்டியலில் சட்டமியற்ற உரிமையுள்ளது, இதில் ஒன்றிய அரசு தலையிட முடியாது, அதேபோல் பொதுப் பட்டியலில் இருவருக்கும் சட்டமியற்ற உரிமையுள்ளது, அதாவது ஒன்றிய அரசுக்கு இணையான சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்டது மாநில அரசு.

இதுதவிர, ஒன்றிய அரசுக்கு என்று ஒதுக்கப்பட்ட துறைகளை ஒன்றிய அரசு கவனிக்கும், மாநில அரசுக்கு என்று ஒதுக்கப்பட்ட துறைகளை மாநில அரசு கவனிக்கும், இதேபோல், இருவருக்கும் தனித்தனியாக வரி வசூலிக்கும் உரிமையும் உள்ளது. இதில் எங்கே ஒன்றிய அரசு,மாநில அரசை விட உயர்ந்தது என்று இருக்கிறது. இது போன்ற ஒன்றிய அரசுக்கு இணையான மாநில அரசு என்ற ஒரு இணை அரசை எப்படி அதற்கு இணையான ஒன்றிய அரசு கலைக்க முடியும், இதை கூட்டாட்சி தத்துவப்படி இது எப்படி சரியானதாக இருக்க முடியும்?

சட்டம்
சட்டம்

இதன் மூலம் நாம் புரிந்து கொள்வது என்பது " கூட்டாட்சி அமைப்பில் மாநில அரசு என்பது ஒன்றிய அரசுக்கு இணையான மற்றும் அதோடு ஒன்றிணைந்து செயல்படும் ஒரு அரசே தவிர, அது ஒன்றிய அரசுக்கு கீழ் செயல்படும் அரசு அல்ல என்பதே ஆகும்.”

மேலும் “கூட்டாட்சி முறை என்பது மாட்டுவண்டி போன்றது, மாட்டுவண்டியின் இரண்டு சக்கரங்களும், சரியாக, சீராக செயல்பட்டால் மட்டுமே வண்டி நகரும், இல்லையேல் வண்டி சேருமிடம் சேராது. மாட்டு வண்டிக்கு எப்படி இரண்டு சக்கரமோ அப்படித்தான் கூட்டாட்சி முறைக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள், இதில் ஏதோ ஒன்று சரியாக செயல்பட வில்லை என்றால் ஒன்றியம் அல்லது அந்த நாடு வளர்ச்சி பாதையை நோக்கி நகராது.”

அடுத்ததாக, “வண்டி சக்கரம் போலவே, வண்டியை இழுக்கும் இரண்டு மாடுகளும் சீராக செயல்பட்டால் மட்டுமே வண்டியும் சீராக செல்லும், ஒருவேளை ஒரு மாடு இன்னொரு மாட்டின் இயக்கத்தை தடுக்குமானால் ஒட்டுமொத்த வண்டியின் இயக்கமும் பாதிக்கப்படும். அது போலவே, ஒன்றிய அரசு, மாநில அரசின் செயல்பாடுகளை தடுக்குமானால் ஒட்டுமொத்த ஒன்றியத்தின் செயல்பாடும் பாதிக்கப்படும்.” இதன் மூலம் மாட்டு வண்டியில் செயல்பாட்டை, கூட்டாட்சியின் செயல்பாட்டிற்கு உதாரணமாக சொல்லலாம்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் 356 என்பது இந்தியா போன்ற பல மொழிவழி தேசிய இனங்கள் வாழக்கூடிய, மொழி,கலாச்சார பண்பாடு வேறுபாடுகள் நிறைந்த, அதுவும் கூட்டாட்சி முறையில் அரசு நடக்கும் ஒரு துணை கண்டத்தில் ஏற்புடையதாக இருக்குமா? என்றால், உண்மையில் அது ஏற்புடையதாக இருக்காது. இந்தியா போன்ற பல இன மக்கள் கூட்டாக வாழக்கூடிய கூட்டாட்சி தத்துவத்தை ஏற்று கொண்ட பல நாடுகளில் இது போன்ற ஒரு ஆட்சி கலைப்பு சட்டம் என்பது இல்லை, அங்கெல்லாம் ஒன்றிய அரசு, மாநில அரசுகளை கட்டுப்படுத்த முடியாது. இன்னும் சொல்லப்போனால், மாகாண அரசு ஒன்றிய அரசுக்கு இணையாக அல்லது அதிகப்படியான அதிக அதிகாரம் கொண்டதாக இருக்கும். அதனால் தான் அந்த கூட்டாட்சி அமைப்பை ஒரு முழுமையான கூட்டாட்சி (Real Federal system) என்றும், இந்திய ஒன்றியத்தில் நடைமுறையில் இருக்க கூடிய கூட்டாட்சியை அரை கூட்டாட்சி(Quasi Federal system) என்றும் அழைக்கிறார்கள்.

அரசியலமைப்பு சட்டம் 356 பிரிவை பற்றிய எஸ். ஆர். பொம்மை வழக்கு பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism