Published:Updated:

`ஆன்லைன்' பயிற்சிப் பட்டறை! - அழைக்கும் புதுக்கோட்டை #MyVikatan

எதற்காவது உதவி தேவை என்றால் ஆயிரம் கைகளை முளைக்க வைக்கின்றன. என்ன தகவல்கள் வேண்டுமானாலும் இங்கே ஒரே `க்ளிக்கில்' அள்ளிக்கொள்ள முடிகிறது.

Representational Image
Representational Image

இன்று ஆன்லைன் வழியாக எத்தனையோ பயிற்சிகளும், வகுப்புகளும் நடைபெறுகின்றன. ஆனால் அதே ஆன்லைன் பற்றிய இணையத் தமிழ்ப் பயிற்சி பட்டறையை நடத்துவதற்கு முன்வந்துள்ளது புதுக்கோட்டை கணினித் தமிழ்ச் சங்கமும், 'வீதி கலை இலக்கியக் களம்' அமைப்பும்..!

ஆணோ பெண்ணோ இன்று ஆன்லைன் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை வந்துவிட்டது. எங்கெங்கு காணினும் இணைய வழிச் சமூக ஊடகங்கள். அவற்றில் ஏராளத் தகவல்கள். ஆரோக்கியமான கருத்துகள். எதற்காவது உதவி தேவை என்றால் ஆயிரம் கைகளை முளைக்க வைக்கின்றன. என்ன தகவல்கள் வேண்டுமானாலும் இங்கே ஒரே 'க்ளிக்கில்' அள்ளிக்கொள்ள முடிகிறது. அதேபோல் ஆன்லைன் வர்த்தகமும் கொடிகட்டிப் பறக்கிறது. நம் நடப்புச் சமூகத்தின் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகவே மாறிவிட்டது ஆன்லைன்.

Representational Image
Representational Image

அதேவேளை பொய்யும், புரட்டும், வன்மமும், வதந்திகளும் ராக்கெட்டைவிட பன்மடங்கு வேகமாய் ஆன்லைனில் பறக்கின்றன. பல்வேறு சமூகங்களுக்கிடையேயான மோதலுக்கும் இங்கேதான் வித்திடப்படுகிறது. தனிநபர் தாக்குதல்கள் இங்கே எளிதில் பரப்பப்படுகின்றன. எது உண்மை? எது பொய்? என இனம் கண்டறிய முடியாத வகையில் இருக்கின்றன சில சித்திரிப்பு பதிவேற்றங்கள். ஆபாசக் காட்சிகளுக்கும், அரைவேக்காட்டு உறவுகளுக்கும் பஞ்சம் இல்லை. குறிப்பாக இளைய தலைமுறையினர் பலரும் ஆன்லைன் அடிமைகளாகவே மாறிப்போய் வருகின்றனர். இந்த ஆன்லைன் சமூக ஊடகங்கள் நமக்கு வரமா? சாபமா? என்ற அச்சம் நிறைந்த கேள்விகளை நாம் எளிதில் கடந்துவிட முடியவில்லை.

எனவே இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களைப் பற்றிய புரிதலையும் அதன் தாக்கத்தையும் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதற்கான ஆரோக்கியமான வழியினைத் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பை புதுக்கோட்டை கணினி தமிழ்ச்சங்கமும், வீதி கலை இலக்கியம் களமும் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இந்த இரு அமைப்புகளும் இணைந்து வரும் அக்டோபர் மாதத்தில் இரண்டு நாள்கள் இணையத் தமிழ்ப் பயிற்சிப் பட்டறையை புதுக்கோட்டையில் நடத்த உள்ளன.

நா.முத்துநிலவன்
நா.முத்துநிலவன்

இப்பட்டறையில் அளிக்கப்பட உள்ள பயிற்சிகள் குறித்து இப்பட்டறையின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நா.முத்துநிலவன், நம்மிடம், ``இந்த இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையில் தமிழில் தட்டச்சுப் பயிற்சி, வலைப்பக்கம் உருவாக்குதல், முகநூல், வாட்ஸ் அப் செயல்பாடுகள், இன்ஸ்டாகிராம், ட்விட்டர்களை கையாளுதல், யூடியூப் சேனல் உருவாக்குதல், மின்சுவரொட்டி தயாரித்தல், தமிழ் வளர்ச்சிக்கான இணைய வாய்ப்புகள், பவர் பாயின்ட் உருவாக்குதல், வலைதளங்களில் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆன்லைன் வணிக வாய்ப்புகள், மின்நூல்கள் பதிவேற்றுதல் இப்படி ஆன்லைன் தொடர்பான 17 வகையான பயிற்சிகளை அளிக்க இருக்கிறோம். இதற்கான பயிற்சியை இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற பல்வேறு வல்லுநர்கள் அளிக்க இருக்கிறார்கள்.

இந்தப் பயிற்சியின் அவசியமும் முக்கியத்துவமும் குறித்து இப்பட்டறையின் ஒருங்கிணைப்பாளர்களில் மற்றொருவரான கவிஞர் மு.கீதா, ``தமிழ் மொழி காலம் காலமாக தன்னை காலத்திற்கேற்ப புதுப்பித்துக்கொண்டே வருகிறது. அதற்கான தகுதியை தமிழ் பெற்று வரும் நிலையில் நாம் மட்டும் மாறாமல் இருந்தால் ஒருவித தேக்கநிலை ஏற்பட்டு விடும். நவீனத் தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் இந்தச் சூழலில் நம்மை நாமே தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். சமூக ஊடகங்களில் நாம் எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக் கூடாது? என்பதை முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

மு.கீதா
மு.கீதா

வருங்காலச் சந்ததியினருடன் இணைந்து பயணிக்க வேண்டிய சூழலில் நவீன ஊடக அறிவு ஒவ்வொருவருக்கும் மிக முக்கியம். தற்போது வளரிளம் பருவத்தினருக்கும் மாணவர்களுக்கும் சமூக ஊடகங்கள் பற்றிய சரியான வழிகாட்டல்கள் இல்லை. அதேபோல் பெண்களும் இந்தச் சமூக ஊடகங்களின் வழியே தவறான நபர்களிடம் சிக்கிக்கொள்ளும் அபாயமும் உள்ளது. எனவே அதுபோன்ற விழிப்புணர்ச்சிக்காகவும், சமூக ஊடகங்களின் வழியே நல்ல சமுதாயத்தைக் கட்டமைப்பதற்காகவுமே இந்தப் பயிற்சி பட்டறை நடத்தப்படுகிறது" என்கிறார்.

-பழ.அசோக்குமார்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக்கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/