Published:Updated:

`அன்னிக்கு மட்டும் பைக் சாவிய பிடுங்கியிருந்தா’- உடல் உறுப்புதான நாள்; ஹிதேந்திரன் பெற்றோர் உருக்கம்

ஹிதேந்திரன் பெற்றோர்

''ஹித்து நல்ல உயரம்னாலும் ரொம்ப ஒல்லியா இருப்பான். அவனால, அந்த பைக்கோட வெயிட்டை சமாளிச்சிருக்க முடியாது. தவிர, அப்பா தூங்கி எழுந்திருக்கிறதுக்குள்ள வீட்டுக்குப் போயிடணும்னு பதற்றமா வண்டி ஓட்டியிருப்பான். ஹெல்மெட்டும் போடலை.''

`அன்னிக்கு மட்டும் பைக் சாவிய பிடுங்கியிருந்தா’- உடல் உறுப்புதான நாள்; ஹிதேந்திரன் பெற்றோர் உருக்கம்

''ஹித்து நல்ல உயரம்னாலும் ரொம்ப ஒல்லியா இருப்பான். அவனால, அந்த பைக்கோட வெயிட்டை சமாளிச்சிருக்க முடியாது. தவிர, அப்பா தூங்கி எழுந்திருக்கிறதுக்குள்ள வீட்டுக்குப் போயிடணும்னு பதற்றமா வண்டி ஓட்டியிருப்பான். ஹெல்மெட்டும் போடலை.''

Published:Updated:
ஹிதேந்திரன் பெற்றோர்

காலம் எப்படிப்பட்ட இழப்புகளையும் மெள்ள மெள்ள மறக்கடித்து விடும். சில இழப்புகள் மட்டும், அது சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றம் காரணமாக வரலாற்றிலேயே நிலைத்து விடும். அப்படிப்பட்டதோர் இழப்புதான் சிறுவன் ஹிதேந்திரன் மரணம். 2008-ம் வருடம் செப்டம்பர் 20-ம் தேதி மாலை நேரம், விபத்தில் சிக்கிய ஹிதேந்திரன் இரண்டு நாள்கள் கழித்து மூளைச்சாவு அடைந்தான். ஹிதேந்திரனின் பெற்றோர் அசோகன், புஷ்பாஞ்சலி இருவரும் மருத்துவர்கள் என்பதால், மகன் இனி உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்பதை ஏற்றுக்கொண்டு, மகனுடைய உடலுறுப்புகளை தானம் செய்தனர். அந்த வகையில் ஹிதேந்திரனின் நினைவு தினம் (செப்டம்பர் 23) இன்றுதான்.

இந்த நாளை இனிவரும் வருடங்களில் 'தமிழ்நாட்டின் உடல் உறுப்புகள் தான விழிப்புணர்வு தின'மான அனுசரிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, திருக்கழுக்குன்றத்தில் இருக்கும் ஹிதேந்திரன் வீட்டுக்குச் சென்றோம்... `ஹிதேந்திரன் சாலை'யின் வலதுபக்க ஆரம்பத்திலேயே இருக்கிறது அவர்களுடைய வீடு. வரவேற்பறை முழுக்க பார்க்கும் இடமெல்லாம் ஹிதேந்திரன் புகைப்படங்களே நிறைந்திருக்கின்றன.

ஹிதேந்திரன் வீடு
ஹிதேந்திரன் வீடு

``எங்க பிள்ளைக்கு முன்னாடியும் தமிழ்நாட்டுல உடல் உறுப்புகள் தானம் நடந்துட்டுதான் இருந்துச்சு. ஆனா, ஹிதேந்திரனுக்கு அப்புறம் அரசியல் தலைவர்கள் ஆறுதல் சொல்ல எங்க வீடு தேடி வந்தது, மீடியாக்களோட பங்களிப்புன்னு இது எல்லாருக்கும் தெரிய ஆரம்பிச்சிடுச்சு. அதைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸும் வந்தது. கடைசியில ஹித்து பிறந்ததே உடலுறுப்பு தான விழிப்புணர்வுக்குதான்னு சொல்ற மாதிரி எல்லாம் நடந்திடுச்சு. இப்போ, அவனோட நினைவு நாளை `தமிழ்நாட்டின் உடல் உறுப்புகள் தான விழிப்புணர்வு தின'மான அனுசரிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருக்கு. ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு'' என்றபடி பேச்சை தொடங்கினார் ஹிதேந்திரனின் அப்பா.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவரைத் தொடர்ந்து ஹிதேந்திரனின் அம்மா புஷ்பாஞ்சலி பேச ஆரம்பித்தார். ``சம்பவம் நடந்த அந்த நாள் இப்பவும் எனக்கு நினைவிருக்கு. அன்னிக்கு ஹித்து கெமிஸ்டரி எக்ஸாம் எழுதிட்டு வந்திருந்தான். நானும் ஹித்து அப்பாவும் லன்ச் ஹவர்ல கிளினிக் மூடிட்டு பைக்ல வீட்டுக்கு வந்தோம். இவர் சாப்பிட்டுட்டு தூங்கப் போயிட்டாரு. 'அம்மா ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு. ஃபிரெண்டு வீட்டுக்குப் போகணும். அப்பா பைக் எடுத்துட்டுப் போறேன்'னு என்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டுதான் போனான். ஃபிரெண்டு வீட்டுக்குப் போயிட்டு திரும்பி வர்றப்போதான் ஆக்ஸிடென்ட் ஆச்சு.

அவனுக்கு அவன் அப்பாகிட்ட ரொம்ப பயம். என்கிட்ட ரொம்ப செல்லம் கொஞ்சுவான். எப்படியோ என்னை கன்வின்ஸ் பண்ணி பைக்கை எடுத்துட்டுப் போயிட்டான். ஹித்து நல்ல உயரம்னாலும் ரொம்ப ஒல்லியா இருப்பான். அவனால, அந்த பைக்கோட வெயிட்டை சமாளிச்சிருக்க முடியாது. தவிர, அப்பா தூங்கி எழுந்திருக்கிறதுக்குள்ள வீட்டுக்குப் போயிடணும்னு பதற்றமா வண்டி ஓட்டியிருப்பான். ஹெல்மெட்டும் போடலை. எல்லாம் சேர்ந்து அவனை எங்ககிட்ட இருந்து பறிச்சிடுச்சு. அன்னிக்கு மட்டும், அவன் கெஞ்சலை கண்டுக்காம பைக் சாவியைப் பிடுங்கியிருந்தா, ஹித்து இந்நேரம் உயிரோட இருந்திருப்பான். இப்போ அவனுக்கு 29 வயசாகியிருக்கும். அவனுக்கு கல்யாணம்கூட செஞ்சு வெச்சிருப்போம். அவன்கூட படிச்ச பிள்ளைங்க எல்லாம் அவங்களோட வெட்டிங் இன்விடேஷனை கொண்டு வந்து தர்றப்போ மனசுல ஒரு வலி வந்துபோகும்... பட், எல்லா வலியையும் மனசுக்குள்ள போட்டுப் புதைச்சிட்டு, அவங்களை ஆசீர்வாதம் பண்ணிட்டு வர்றப்போ மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்'' என்பவரின் கண்களில் கடலளவு கலக்கமும் கண்ணீரும் தேங்கி நிற்கின்றன.

Hithendran Salai
Hithendran Salai

ஹித்து அப்பா தொடர்ந்தார். ``ஹித்து வயசுல இருக்கிற சின்ன பிள்ளைங்க டூவீலர் ஓட்டறதைப் பார்க்கிறப்போ நடுக்கமா இருக்கு. பிள்ளையை விபத்துல பறிகொடுத்த பெத்தவங்களோட வலி எப்படிப்பட்டதுன்னு எங்களுக்குத்தானே தெரியும். பதினெட்டு வயசுக்குள்ள இருக்கிற பிள்ளைகளுக்கு பைக் கொடுக்காதீங்க. பதினெட்டு வயசுக்கு மேல இருக்கிற பிள்ளைங்க கொஞ்சம் நிதானமா வண்டி ஓட்டுங்க. ஹெல்மெட் போடுங்க'' என்று கண்கலங்க வேண்டுகோள் வைக்கிறார் ஹிதேந்திரனின் அப்பா டாக்டர் அசோகன்.