Published:Updated:

`குழந்தைகளின் பசிக்கு என்ன தீர்வு சொல்லப்போகுது அரசாங்கம்?' -மனதைப் பதறச் செய்யும் புகைப்படம்!

வெளி மாநில பணியாளர்கள்
வெளி மாநில பணியாளர்கள் ( twitter/ @Anurag Dwary )

``நாங்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டில் முடங்கியிருக்க வேண்டும் என்று சொல்லும் அரசு, எங்களின் பசியைத் தீர்க்க என்ன வழி செய்தார்கள்...''

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா நோய் ஒரு புறம், அது சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு ஒரு புறம் என அரசும், மக்களும் செய்வதறியாது நிற்கும் சூழல் உருவாகியுள்ளது.

கொரோனா ஏற்படுத்திய பாதிப்புக்கு அதிகளவில் உள்ளானவர்கள் வெளிமாநிலங்களில் வேலை செய்யும் பணியாளர்களே. வேலை செய்யும் ஊர்களில் உணவு உட்பட எந்த அடிப்படை வசதியும் கிடைக்காமல், மனைவி, குழந்தைகளுடன் நடந்தே தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லத் தயாராகினர். ஆனால், பசியால் உயிரிழப்பு, விபத்துகளால் உயிரிழப்பு என அதிலும் மரணங்களை அவர்களால் தடுக்க முடியவில்லை. இது சார்ந்த புகைப்படங்களும் வீடியோக்களும் தினமும் சமூகவலைதளங்களில் தொடர்ந்து வெளியாகி மனதைக் கணக்கச் செய்கின்றன. அவற்றில் ஒன்றாக இன்று, சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்படும் படம் பார்க்கும்போதே மனதை நிலைகுலையச் செய்கிறது.

வெளி மாநில பணியாளர்கள்
வெளி மாநில பணியாளர்கள்

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் நிற்கிறது சரக்குகள் ஏற்றிச் செல்லும் அந்த லாரி. எந்தச் சமூக இடைவெளியும் இல்லாமல் மனிதர்கள் கும்பலாய் அமர்ந்திருக்கிறார்கள். இதற்கு மேல் அங்கு மூச்சுக்காற்று பரவக்கூட இடம் இல்லாத அளவு கூட்டம். இன்னும் சிலர் லாரியில் ஏறத் தயாராக கீழே நின்று கொண்டிருக்கிறார்கள். லாரியில் பின்புறக் கதவுகள் மூடப்பட்டதால், லாரியின் சக்கரங்களில் கால் ஊன்றி ஒரு பெண், லாரியில் ஏற முயற்சி செய்கிறார். இன்னொரு நபர் லாரியின் சக்கரம் வழியாக லாரியில் ஏறி, ஒரு கையால் லாரியில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றைப் பிடித்தும், மற்றொரு கையால் கீழிருக்கும் தன் மனைவியிடம் இருந்து குழந்தையை வாங்கி லாரியில் இருப்பவர்களிடம் கொடுப்பது போன்றும் இருக்கும் அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போதே மனது பதறுகிறது.

இதுகுறித்து லாரியில் இருக்கும் முதியவர் ஒருவர் பேசுகையில், ``எங்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை. நாங்கள் அனைவரும் ஜார்க்கண்ட் செல்ல வேண்டும். ரயில் போக்குவரத்து செய்து தருவதாகச் சொன்னார்கள். ஆனால், இப்போது வரை எங்களுக்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. பிழைப்புத் தேடித்தான் வெளியூர்களுக்கு வந்தோம். வேலை இல்லை என்பதற்காகப் பசியுடன் வாழமுடியுமா... ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்துக்கு ரயில் சேவை செய்து கொடுத்திருக்கிறார்கள். ஆனால், மக்கள் எல்லோரும் நகரத்திலா வாழ்கிறார்கள். எப்படியும் சொந்த கிராமங்களுக்குச் செல்ல 100 கிலோ மீட்டருக்கு மேல் நடந்துதானே போக வேண்டியிருக்கிறது.

`மே 7 வரை ஊரடங்கு; தளர்வு இல்லை; வெளிமாநிலத்தவர் நுழையத் தடை!’ -தெலங்கானா முதல்வர் அதிரடி நடவடிக்கை

நாங்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டில் முடங்கியிருக்க வேண்டும் என்று சொல்லும் அரசு, எங்களின் பசியைத் தீர்க்க என்ன வழி செய்தார்கள்... வேலையில்லாமல் எத்தனை நாள் வாழமுடியும்... சாப்பிடாமல் எத்தனை நாள் இருக்க முடியும்... சட்டம் பேசுபவர்கள் எங்கள் குழந்தைகளின் கண்ணீரைப் பாருங்கள், அவர்கள் அழக்கூடத் திறன் இல்லாமல் இருக்கிறார்கள். இப்போது எங்களுக்குக் கொரோனா பற்றியெல்லாம் பயம் இல்லை. மூன்று நேர சாப்பாடு வேண்டும். நாங்கள் வந்துவிடுவோம் என்று எங்கள் குடும்பம், சொந்த ஊரில் காத்துக்கிடக்கிறார்கள். நாங்கள் அவர்களைப் பார்க்க வேண்டும்" என்று கண்ணீருடன் சொல்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு