Published:Updated:

தற்கொலையில் தமிழ்நாடு இரண்டாம் இடம் ~ எப்படி மீளப்போகிறோம்?

தற்கொலை

தனிமை, இயலாமை, நம்பிக்கையின்மை ஆகிய மூன்றும்தான் தற்கொலைக்கு அடிப்படை என்பதால், சக மனிதர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது அவசியம். இது போன்ற புரிதலின் வழியேதான் நாம் தற்கொலைகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.

தற்கொலையில் தமிழ்நாடு இரண்டாம் இடம் ~ எப்படி மீளப்போகிறோம்?

தனிமை, இயலாமை, நம்பிக்கையின்மை ஆகிய மூன்றும்தான் தற்கொலைக்கு அடிப்படை என்பதால், சக மனிதர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது அவசியம். இது போன்ற புரிதலின் வழியேதான் நாம் தற்கொலைகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.

Published:Updated:
தற்கொலை

கடந்த ஆண்டு, நாடு முழுவதும் நடைபெற்ற கொலைக் குற்றங்கள், தற்கொலைகள், விபத்துகள் உள்ளிட்டவை தொடா்பான விவரங்களை, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு நாடு முழுவதும் 1,64,033 தற்கொலை சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. இந்தியாவிலேயே அதிகமாக தற்கொலைகள் நடைபெற்ற மாநிலங்களின் பட்டியலில், தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

முதலிடம் பிடித்திருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் 22,207 பேரும், இரண்டாவது இடமான தமிழ்நாட்டில் 18,925 பேரும், மூன்றாவது இடத்தில் உள்ள மத்திய பிரதேசத்தில் 14,965 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா மாநிலங்கள் அடுத்த இரண்டு இடங்களில் இருக்கின்றன. தனிமை, நிதி பிரச்னை, குடும்ப பிரச்னைகள், உளவியல் பிரச்னைகள், மதுப்பழக்கத்துக்கு அடிமையாகுதல், நாள்பட்ட வலி போன்றவை இத்தற்கொலைகளின் காரணிகளென அந்த ஆய்வில் கூறப்பட்டிருக்கிறது. எந்தப் பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல என்று என்னதான் நாம் சொன்னாலும் சூழல், எண்ணவோட்டம் மற்றும் புற காரணிகள்தான் தற்கொலையைத் தூண்டுகின்றன.

தற்கொலை எண்ணம் ஏன் ஏற்படுகிறது? அப்படி ஏற்பட்டால் அதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்? தற்கொலைகளைத் தடுப்பதற்காக செயல்படும் சென்னையைச் சேர்ந்த சிநேகா அமைப்பின் நிறுவனரும், உளவியல் மருத்துவருமான லட்சுமி விஜயகுமாரிடம் பேசினோம்...  

சிநேகா தற்கொலை தடுப்பு மையத்தின் நிறுவனர் டாக்டர் லட்சுமி விஜயகுமார்
சிநேகா தற்கொலை தடுப்பு மையத்தின் நிறுவனர் டாக்டர் லட்சுமி விஜயகுமார்

"தற்கொலைக்கு பல்வேறு விதமான காரணங்கள் இருக்கின்றன என்பதால் அவற்றை ஒரு சில காரணங்களுக்குள் சுருக்கிவிட முடியாது. உடலியல் ரீதியாக மூளையில் செரட்டோனின் என்கிற ஹார்மோன் அளவு குறையும்போது தற்கொலை எண்ணம் ஏற்படலாம். மரபு ரீதியாகவும் தற்கொலை எண்ணம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

மன அழுத்தம், மனச்சோர்வு, மனச்சிதைவு நோய் உள்ளிட்ட பல்வேறு உளவியல் பிரச்னைகளும் தற்கொலைக்குக் காரணமாக இருக்கின்றன. மதுப்பழக்கமும் முக்கிய அங்கம் வகிக்கிறது. 35 சதவிகித தற்கொலைகள் குடிபோதையில் நிகழ்கின்றன. பொருளாதாரம் சார்ந்த பிரச்னைகள், உறவுச்சிக்கல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் அழுத்தப்படும்போது  உடனே தற்கொலை செய்து கொள்வது என்கிற முடிவை எடுத்து விடுகின்றனர்.  

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சின்னச் சின்ன காரணங்களுக்காகவெல்லாம் தற்கொலை செய்து கொள்கிறார்களே என்று நினைப்போம். அது அப்படியல்ல. பல்வேறு விதமான அழுத்தங்களுக்கு ஆட்பட்டிருக்கும் சூழலில் ஒரு சிறிய காரணம் கூட தற்கொலைக்குத் தூண்டும் விதமாக அமைந்து விடுவதன் விளைவுதான் அது. தற்கொலைகளை ஒரு காரணியோடு மட்டும் தொடர்புபடுத்தக்கூடாது. தற்கொலை செய்து கொள்கிறவர்கள் சாகும் முடிவோடே இருப்பதில்லை. அந்த உணர்வு தூண்டப்பட்டதும், உடனடியாக அம்முடிவை நோக்கி நகர்ந்து விடுகிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்ளலாமா, வேண்டாமா என்கிற தத்தளிப்புடனேயே இருப்பார்கள். சாக வேண்டும் என்றில்லை, ஆனால் இப்படியே வாழ முடியாது என்பதுதான் அவர்களது மனநிலை. தற்கொலை என்பது தற்காலிகமான பிரச்னைக்காக எடுக்கப்படும் நிரந்தர முடிவு" என்றவர், தற்கொலைகளின் எண்ணிக்கையைக் குறைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பேசினார்...

"சொல்கிறவர்கள் செய்ய மாட்டார்கள் என்று நம்மிடையே நிலவுகிற கருத்து தவறானது. தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்துகிறவரின் உணர்ச்சிகளை யாரும் புரிந்து கொள்வதில்லை. "இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை... எல்லாம் சரியாப் போயிடும்" என்பது போன்று ஆற்றுப்படுத்தும் விதமாகப் பேசுவது அவர்களை அத்துயரிலிருந்து மீட்காது. அவர்களுடன் உரையாடி அவர்கள் பிரச்னை என்னவென்பதை முழுமையாக உள்வாங்கி அதற்கேற்றாற்போல பேச வேண்டும்.

தற்கொலை
தற்கொலை

பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட தற்கொலைக்காக பயன்படுத்தும் பொருள்களைத் தடைசெய்வது ஓரளவு பயனளிக்கும். காட்டுமன்னார்கோயிலில், சிநேகா அமைப்பின் மூலமாக ஒரு லாக்கர் வைத்து, விவசாயிகள் தங்களது பூச்சிக்கொல்லி மருந்துகளை இங்கே வைத்துக் கொண்டு தேவையான போது மட்டும் எடுத்துக் கொள்ளும்படி செய்தோம். விவசாயத் தற்கொலைகள் இதன் மூலம் குறைந்தன. ஏனென்றால் தற்கொலை என்பது தெளிவாகத் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுவதல்ல. அந்த நேரத்தில் உடனடியாக எடுக்கிற முடிவு. எனவே தற்கொலை செய்து கொள்வதற்கான பொருள்களிலிருந்து விலகியிருப்பது முக்கியம்.

ஆல்கஹால் நுகர்வு மிக முக்கியப் பிரச்னை என்பதை அரசும், குடிக்கிறவர்களும் உணர வேண்டும். ஊடகங்கள் தற்கொலை தொடர்பான செய்திகளை எவ்வாறு அணுகுகின்றன என்பதும் முக்கியம். அதனை பரபரப்பான செய்தியாக அணுகினால் தற்கொலைகள் மேலும் அதிகரிக்கத்தான் செய்யும். பொறுப்புணர்வுடன் அணுகும்போதுதான் அவற்றுக்கான தீர்வை நோக்கிச் செல்ல முடியும்" என்றவர் ஒன்றைத் தொடர்ந்து ஒன்றென நிகழும் தற்கொலைகள் பற்றி பேசினார்.

"விவசாயிகள் தற்கொலை, மாணவர் தற்கொலைகளைப் பொறுத்தவரை ஒரு தற்கொலை நடந்தால் தொடர்ந்து அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவத்தைப் பார்க்க்கிறோம். இதனை copy cat suicide என்று சொல்வோம். சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தைத் தொடர்ந்து நடந்த தற்கொலைகள் அத்தகையவைதான். தற்கொலைச் சம்பவத்தைக் கூட முன் மாதிரியாக எடுத்துக் கொள்ளும் அவலமும் இருக்கிறது. தற்கொலைக்கெதிரான விழிப்புணர்வு வழியேதான் இதனைக் குறைக்க முடியும். மனநலம் குன்றியவர்கள், கடன் சுமைக்கு ஆளாகியிருப்பவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும். தற்கொலை முயற்சி செய்து காப்பாற்றப்பட்டவர்கள் திரும்பவும் அதைச் செய்வார்கள். எனவே அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

தற்கொலை
தற்கொலை

பள்ளிகளில் மன நலம் சார்ந்தும், பிரச்னைகளை மேலாண்மை செய்யும் திறனை வளர்க்கும் விதமாகவும் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். நம்மைப் புரிந்து கொள்ள யாரும் இல்லை என்கிறவர்கள்தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தனிமை, இயலாமை, நம்பிக்கையின்மை ஆகிய மூன்றும்தான் தற்கொலைக்கு அடிப்படை என்பதால் சக மனிதர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது அவசியம். இது போன்ற புரிந்துணர்வின் வழியேதான் நாம் தற்கொலைகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்" என்கிறார் லட்சுமி விஜயகுமார்.