தமிழ்நாடு அறக்கட்டளை (அமெரிக்கா) சார்பில் 1.11 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளுக்கு சமீபத்தில் வழங்கப்பட்டன. இதுபற்றிய மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள, தமிழ்நாடு அறக்கட்டளை (அமெரிக்கா) தமிழக பிரிவு தலைவரான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி இராஜரெத்தினத்திடம் பேசினோம்.
''தமிழ்நாடு அறக்கட்டளை (அமெரிக்கா), இங்கிருந்து அமெரிக்கா சென்று அங்கே வசிக்கும் தமிழர்களால், தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் 1974-ல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தமிழக பிரிவு தலைவராக நானும், அறங்காவலர்களாக (நீதிபதிகள்) சமுக ஆர்வலர்கள் பலர் பொறுப்பு வகித்து வருகின்றனர். அமெரிக்க அறக்கட்டளையின் கீழ் கிட்டத்தட்ட 1,200 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த அறக்கட்டளையின் மூலம் கலாசாரம், சமூகம், கல்வி, மருத்துவம் என மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனர். குறிப்பாக தானே, கஜா புயல் உள்ளிட்ட பேரிடர்களின்போது வழக்கத்தைவிட அதிக பண உதவி செய்தனர். அந்த வகையில்தான் தற்போது கொரோனாவுக்கான மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கியிருக்கிறார்கள்.

தமிழகத்திலுள்ள 89 அரசு பள்ளிக் கூடங்களில் படிப்பில் பின்தங்கிய மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தனியாக ஆசிரியர்களை அமர்த்தி பயிற்சி அளித்து வருகிறோம். இதன் மூலம் வருடத்துக்கு 17,000 மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். அடுத்ததாக, மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டமும் இருக்கிறது'' என்றவர், மருத்துவ உபகரணங்கள் வழங்கியது தொடர்பாகப் பேச ஆரம்பித்தார்.
''அமெரிக்கா தமிழ் மருத்துவ சங்கம், வட அமெரிக்கா தமிழ்ச் சங்க கூட்டமைப்பு, அமெரிக்கா தொழில் முனைவோர் சங்கம், ஐ.ஐ.டி. மெட்ராஸ் முன்னாள் மாணவர் சங்கம், இந்தியா ஸ்போரா ஆகிய அமெரிக்க தமிழ் அமைப்புகள் தமிழ்நாடு அறக்கட்டளையுடன் இணைந்து, கொரோனா பாதிப்புக்கு பின்னான மருத்துவ சேவைக்காக, இசை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டினார்கள். இந்த அமைப்புகளில் இருக்கிற சில மருத்துவர்கள் தமிழ்நாட்டிலிருக்கிற மருத்துவக் கல்லூரிகளில் பயின்றவர்கள். இவர்கள், 2020-ல் 35 லட்ச ரூபாய் மதிப்பிலான ஆர்டிபிசிஆர் உபகரணத்தை ஸ்டான்லி மருத்துவமனைக்கு வழங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பல நிகழ்ச்சிகள் மூலம் 9 கோடியே 60 லட்சம் வசூலித்தவர்கள், அதில் 8.76 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை ஏற்கெனவே வழங்கிவிட்டார்கள். மீதமிருந்த 1.11 கோடி தொகையிலும் மருத்துவ உபகரணங்கள் வாங்கி மே 12-ம் தேதி வழங்கிவிட்டார்கள். தமிழக அரசு மருத்துவமனைகளில் எந்தெந்த மருத்துவமனைக்கு என்னென்ன உபகரணங்கள் தேவை என்பதை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் மற்றும் தமிழக அரசு மருத்துவமனைகளின் முதல்வர்களும்தான் தீர்மானித்தார்கள்'' என்ற இராஜரெத்தினம்,
''தமிழ்நாடு அறக்கட்டளை மூலம் அமெரிக்க வாழ் தமிழர்கள் அனுப்பிய தொகை சரியாகச் செலவழிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அதற்கென இந்திய அரசினுடைய சட்டமும் இருக்கிறது. அதனால், தமிழர்களுக்கு உதவுவதற்கு என அமெரிக்காவிலிருந்து தமிழர்கள் அனுப்புகிற தொகை, முழுக்க முழுக்க நேர்மையான வழியில் பயன்படுகிறது'' என்கிறார் உறுதியாக.