Published:Updated:

நவம்பர் 12 - பொது சேவை ஒலிபரப்பு தினம்; இதன் முக்கியத்துவம் என்ன?

1947-ம் ஆண்டின் தீபாவளி நாளான நவம்பர் 12 அன்று காந்தி ஆற்றிய உரைதான் முதலும் கடைசியுமாக, அவர் அகில இந்திய வானொலியில் ஆற்றிய நேரடி உரை.

தன் சொற்களால் இந்திய மக்களை ஒருங்கிணைத்து சுதந்திரப் போராட்டம் நடத்திய மகாத்மா - அகில இந்திய வானொலியில் மகாத்மா காந்தி ஒரே ஒருமுறை தான் உரையாற்றியிருக்கிறார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
மகாத்மா காந்தி உரை
மகாத்மா காந்தி உரை

காந்தியின் உரைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்டிருக்கின்றன. ஆனால், 1947-ம் ஆண்டின் தீபாவளி நாளான நவம்பர் 12 அன்று காந்தி ஆற்றிய உரைதான் முதலும் கடைசியுமாக, அவர் அகில இந்திய வானொலியில் ஆற்றிய நேரடி உரை.

இந்திய-பாகிஸ்தான் பிரிவினையால், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்திருந்த அகதிகளில் சுமார் 2 லட்சம் பேர், ஹரியானாவின் குருக்‌ஷேத்ரத்தில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். காந்தி அந்த மக்களைச் சந்தித்து உரையாட திட்டமிட்டிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் அத்திட்டம் தடைபட்டது.

காந்தி அகில இந்திய வானொலிக்கு வருகை
காந்தி அகில இந்திய வானொலிக்கு வருகை

இந்தப் பின்னணியில்தான், அகில இந்திய வானொலியின் மூலம் காந்தி அந்த மக்களிடம் உரையாற்றுவது என்று முடிவானது. அதன்படி, நவம்பர் 12 பிற்பகல் 3.30 மணியளவில் காந்தி தன்னுடைய செயலாளர் ராஜ்குமாரி அம்ரித் கவுர் உள்ளிட்ட குழுவினருடன் அகில இந்திய வானொலிக்கு வருகைதந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“இது அதிசயிக்கத்தக்க ஒன்று. நான் இதன் சக்தியைக் காண்கிறேன்; அதிசயிக்கத்தக்க கடவுளின் சக்தி,” என்று வானொலியைப் பற்றி காந்தி கூறினார். காந்தி உரையாற்றுவதற்காக, வானொலி நிலைய அரங்கம், பிர்லா இல்லத்தில் காந்தியின் பிரார்த்தனைக் கூடத்தைப் போல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காந்தி
காந்தி

காந்தியின் வருகை குறித்து குருக்‌ஷேத்ர முகாமில் முந்தைய நாள் அறிவிக்கப்பட்டிருந்தது. மிகப் பெரிய எண்ணிக்கையில் இருந்த அந்த மக்கள், காந்தியின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தனர். ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் காந்தியின் வருகை தடைப்பட்டதை அறிந்து அவர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

ஆனால், காந்தி அகில இந்திய வானொலியில் உரையாற்றுகிறார் என்பதை அறிந்து அவர்கள் ஆறுதலடைந்தனர். முகாமின் மையத்தில், ஒலிபெருக்கி பொறுத்தப்பட்ட மிகப் பெரிய மர்ஃபி ரேடியோ ஒன்று நிறுவப்பட்டது. முகாமில் காந்தியின் இருப்பை உணர்த்தும் வகையில், நாற்காலி ஒன்றில் காந்தியின் படம் வைக்கப்பட்டிருந்தது.

காந்தி
காந்தி
“அதிகபட்ச தைரியம் மற்றும் பொறுமையுடன் இந்தத் துயரை எதிர்கொள்ள வேண்டும்” என்று அந்த மக்களிடம் வேண்டிய காந்தியின் உரை சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது. இதுவே அகில இந்திய வானொலியின் முதலும் கடைசியுமாக காந்தியின் நேரடி உரையாக வரலாற்றில் பதிவானது.

காந்தி ஒருமுறை மட்டுமே அகில இந்திய வானொலியில் நேரடியாக உரையாற்றியிருக்கிறார். ஆனால், பிர்லா வீட்டில் பிரார்த்தனைக்குப் பிறகான காந்தியின் உரைகள், அவர் படுகொலை செய்யப்படுவதற்கு முந்தைய தினம் வரை, வானொலி தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டு வந்தன. 147 உரைகள் அடங்கிய காந்தியின் உரைகள் என்ற தனிப் பிரிவாக, அகில இந்திய வானொலி ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அகில இந்திய வானொலி
அகில இந்திய வானொலி

“நாட்டின் தந்தை மகாத்மா காந்தி அகில இந்திய வானொலியில் உரையாற்றியதன் 50-ம் ஆண்டு, 12 நவம்பர் 1997-ல் கொண்டாடப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 12 நவம்பர் 2000-ல், இது பொது சேவை ஒலிபரப்பு தினமாகக் (‘ஜன் பிரசாரன் திவாஸ்’) கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது இருந்து காந்தியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையின் நினைவாகப் பொது சேவை ஒலிபரப்பு தினம் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது,” என்று பொது சேவை ஒலிபரப்பு தினத்தின் பின்னணி குறித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் மற்றும் இதழியல் துறை உதவிப் பேராசிரியர் தங்க ஜெய்சக்திவேல் கூறுகிறார்.

“பொது சேவை ஒலிபரப்பு தினம் போன்ற சிறப்பு நாட்களில் மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக வானொலி பயன்பாட்டினை அரசு ஊக்குவிக்க வேண்டும். மழை, வெள்ள பேரிடர் காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை சார்ந்த தொடர் அறிவிப்புக்களை அரசு வெளியிட்டு வருகிறது; ஆனால், இத்தகைய பேரிடர் காலங்களில் மக்களுக்குத் தகவல்களைக் கொண்டுசெல்வதில் முதன்மை ஊடகமாகச் செயல்படக் கூடிய வானொலியைப் பயன்படுத்துவது சார்ந்து எந்தவித முன்னெடுப்புகளையும் அரசு மேற்கொள்வதில்லை. ‘இந்தக் காலத்தில் யார் ரேடியோ கேட்கிறார்கள்’ என்ற மனோபாவமே நிலவுகிறது. இந்த நிலை மாற வேண்டும்,” என்று வானொலி பயன்பாட்டின் முக்கியத்துவத்தை ஜெய்சக்திவேல் வலியுறுத்துகிறார்.

தங்க ஜெய்சக்திவேல்
தங்க ஜெய்சக்திவேல்

பிரசார் பாரதி யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள காந்தியின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த உரையின் பகுதியை (இந்தியில்) கேட்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு