Published:Updated:

இவர்களுக்குச் செய்வது என் கடமை சார்.. தள்ளுவண்டிக் கடைக்காரரின் மனிதாபிமானம்!

கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கும் பசிக்கிறது எனச் சொல்பவருக்கும் தான் விற்கும் கற்றாழை ஜூஸ் மற்றும் கம்மங் கூழை இலவசமாக வழங்கிவருகிறார் தள்ளுவண்டி கடை நடத்திவரும் மணிகண்டன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பெரம்பலூர் மாவட்டம்,மேலமாத்தூர் பகுதியைச் சேர்ந்த இவர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள பாலக்கரைப் பகுதியில் தள்ளுவண்டி கடையில் கற்றாழை மற்றும் கம்மங்கூழ் விற்பனை செய்து வருகிறார்.

காடுகளில் இயற்கையான முறையில் விளைந்த கற்றாழைகளைக் கொண்டுவந்து, வாடிக்கையாளர்களின் கண்ணெதிரே தோல் நீக்கி இவர் போட்டுதரும் கற்றாழை ஜூஸுக்கும், கை குத்தல் முறையில் தயாரிக்கப்பட்ட கம்மங் கூழுக்கும் ஏக வரவேற்பு.

அறிவிப்பு
அறிவிப்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக தனது கங்கா கற்றாழை ஜூஸ் கடையைத் திறக்கமுடியாத மணிகண்டன், ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு வழக்கம்போல கடை திறந்துள்ளார்.

கடை திறந்த முதல்நாளே, கொரோனா ஊரடங்கு முடியும்வரை மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், காவலர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பணமில்லாமல் பசியோடு இருப்பவர்களுக்குக் கற்றாழை ஜூஸ் மற்றும் கம்மங்கூழ் இலவசமாக வழங்கப்படுமெனத் தனது கடையின் முன்பக்கம் மணிகண்டன் அறிவிப்பு வைத்ததுடன், தனது தள்ளுவண்டிக்கடை மூலம், தினமும் சுமார் 50 போலீஸார் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பசியோடு வரும் வழிப்போக்கர்களுக்குப் பசியாற்றி வருகிறார்.

அவரிடம் பேசினோம், ``குடும்ப வறுமையின் காரணமாக பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்கல. அவ்வப்போது கிடைக்கும் வேலைகளைச் செய்து வந்தேன். அந்தப் பணம், குடும்பச் செலவுக்கே போதவில்லை. இதில், மூன்று பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். இப்படியே போனால், என்னைப் போல் பிள்ளைகளும் படிக்க முடியாமல் போகுமோ என நினைத்து, சுய தொழில் தொடங்கிட முடிவெடுத்தோம்.

அப்போது, எனது மனைவி அமுதா ஜூஸ் கடை வைக்கலாம் எனக் கூறினார். இறுதியில், எனது தாத்தா சீனிவாசன் சித்த வைத்தியராக இருந்தார். அவர் எனது சிறுவயதில் அடிக்கடி மூலிகைகள் குறித்து கூறுவார். அதனால், வழக்கமான ஜூஸ் கடையைவிட மருத்துவக் குணமுள்ள கற்றாழை ஜூஸ் கடை போடுவோம். அது பலருக்கும் பலனாக இருக்கும் என முடிவெடுத்தோம். கடந்த மூன்று வருடங்களாகக் கடை நடத்தி வருகிறேன். தினமும் காலை 4.30 மணிக்கு எழுந்து 22 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பெரம்பலூர் சென்று, காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணிவரை வியாபாரம் செய்வேன். வேலை முடிந்ததும் அங்கிருந்தபடியே காடுகளுக்குச் சென்று கற்றாழை வெட்டி எடுத்துவருவேன்.

கற்றாழை ஜூஸ் மணிகண்டன்
கற்றாழை ஜூஸ் மணிகண்டன்

பொதுவாக, எல்லாச் செடிகளையும் பூச்சிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் தாக்கும். ஆனால் கற்றாழையை எவ்வித விஷ ஜந்துக்களும் சீண்டாது. அந்த அளவு மருத்துவக் குணமுடையது கற்றாழை. அதுமட்டுமல்லாமல், சாலையோரங்களில் இருக்கும் சின்னச் சின்ன கற்றாழையில் ஜூஸ் போட்டால், அதை அருந்துபவர்கள், நடந்து செல்லும்போது வியர்வையில் நாற்றம் அடிக்கும்.

அதனால், நான் அடர்ந்த காடுகளில் ஆட்கள் பார்வையில் படாத அளவிற்கு வளர்ந்து நிற்கும் கற்றாழைகளையே தேடி அலைந்து, கண்டுபிடித்துப் பயன்படுத்துகிறேன். ஆரம்பத்தில் கற்றாழை இருக்கும் இடங்கள் தெரியாததால் மிகவும் சிரமப்பட்டேன். இப்போது, பெரம்பலூர் – அரியலூர் மாவட்டங்களில் எங்கெல்லாம் என்ன மூலிகைகள் இருக்கும் என அத்துபடி.

தூய்மைப் பணியாளர் மற்றும் பசியோடு இருப்பவர்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும், பணம் வாங்கமாட்டேன். தினமும் 50 பேர் சாப்பிடுவாங்க. என்னாள முடிந்ததைச் செய்கிறேன். இவர்களுக்குச் செய்வது என் கடமைதான சார் - மணிகண்டன்.

நன்கு வளர்ந்த கற்றாழையில் துளியும் கசப்பு இருக்காது. பனை நொங்கு போல ருசியாக இருக்கும். தினமும் காடுகளில் இருந்து நானே தேடிக் கொண்டுவரும் கற்றாழைகளை வாடிக்கையாளர்களின் கண்முன்னே பிரித்து ஜூஸ் போட்டுக் குடிப்பதால் மக்களுக்கு நம்பிக்கை. எனது மனைவியின் கைப் பக்குவத்தில் பாரம்பர்யமான கை குத்தல் முறையில் கம்பு உடைத்து உமி நீக்கித் தயாரிக்கப்பட்ட கம்மங் கூழை, பசுந் தயிரில் கரைத்துக் கொடுக்கிறேன். பாரம்பர்ய முறையில் கம்மங்கூழ் சமைப்பதால் அது தனி மணமாக இருக்கும். அதனால், கடைக்கு வாடிக்கையாளர்கள் அதிகம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தினமும் பெட்ரோல் செலவு, சாப்பாடு ஆள் கூலி எல்லாம் போக நல்லா வியாபாரம். ஆனால் 2500 கிடைக்கும். கொரோனா வந்ததால், நிலைமை கொஞ்சம் மோசம்தான். அவ்வப்போது எனது மகன்களும் கடைக்கு வந்து உதவி செய்வதால் கொஞ்சம் சிரமம் இல்லாமல் இருக்கிறது.

ஆனாலும், இவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றப் போராடிவரும், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உணவுக்கு வழியில்லாத ஏழைகளுக்கு என்னால் ஆன உதவி செய்யணும்னு யோசித்து வந்தேன். இதுகுறித்து எனது மனைவி மற்றும் மகன்களிடம் எனது முடிவைக் கூறினேன். சந்தோஷமாகச் சம்மதித்தார்கள்.

 மணிகண்டன்
மணிகண்டன்

தொடர்ந்து, கடைக்கு வரும் தூய்மைப் பணியாளர்கள் போலீஸார், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு என்னிடம் இருக்கும் கற்றாழை ஜூஸ் மற்றும் கம்மங் கூழை இலவசமாக வழங்கி வருகிறேன். சிலர் வற்புறுத்திப் பணம் கொடுப்பார்கள்.

`சாப்பாட்டுக்கே வழியில்லை; ஊருக்கு அனுப்புங்க!' -திருச்சியில் தொடரும் வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்

ஆனால், தூய்மைப் பணியாளர் மற்றும் பசியோடு இருப்பவர்கள் எவ்வளவு வற்புத்தினாலும், பணம் வாங்கமாட்டேன். தினமும் ஒரு 50 பேர் சாப்பிடுவாங்க. என்னாள முடிந்ததைச் செய்கிறேன். இவர்களுக்குச் செய்வது என் கடமைதான சார்” என்றபடி கற்றாழை விற்கத் தொடங்குகிறார் மணிகண்டன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு