Election bannerElection banner
Published:Updated:

`மேப்...மேப்..!' - திரில்லர் சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( Credis : Pixabay )

வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ள இடம் குறித்த தகவலை அவனிடமிருந்து பெறுவதில் காவல்துறைக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அதிகாலையிலேயே கமிஷனர் அலுவலகம் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது. நகரின் மூன்று இடங்களில் இன்று இரவு தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த உள்ளதாக வந்த தகவல்தான் இந்தப் பரபரப்புக்குக் காரணம்.

இத்தகவலை உளவுத்துறையும் உறுதி செய்திருந்தது. உளவுத்துறை மிகத் துரிதமாக செயல்பட்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்த உள்ள தீவிரவாதக் குழுவின் தலைவனைக் கைது செய்திருந்தது!

ஆனால், வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ள இடம் குறித்த தகவலை அவனிடமிருந்து பெறுவதில் காவல்துறைக்குப் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.

Representational Image
Representational Image

ஏனெனில் அவன் தொடர்ச்சியாக போதை மருந்து உட்கொள்பவனாக இருந்ததால், காவல்துறையின் தேர்ட் டிகிரி டிரீட்மென்ட்கள் பெரிதாக பலனளிக்கவில்லை. எத்தனை அடித்தாலும் அவன் அலட்டிக்கொள்ளாமல் சன்னமாக சிரித்துக்கொண்டேதான் இருந்தான். இன்று இரவு நகரின் மூன்று இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்பதை மட்டும் தெளிவாகக் கூறினான்.

மிகக் கடுமையான தேர்ட் டிகிரி போலீஸ் அடிகளுக்குப் பின், ஸ்லீப்பர் செல்கள்தான் குண்டுவெடிப்பை நிகழ்த்தப் போகின்றனர் என்ற உண்மையைக் கூறினான். ஆனால், அந்த ஸ்லீப்பர் செல்கள் யார் என்பது அவனுக்கும் தெரியாது.

இன்று மாலைக்குள் குண்டு வெடிக்கும் இடங்கள் குறித்த தகவலை காவல்துறை கண்டறிய வேண்டும். அப்போதுதான் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்ய முடியும். குண்டுகள் வைக்கப்பட்டுள்ள இடங்களை மதியமாகியும் கண்டறிய முடியாதது மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்தது.

பிடிபட்ட தீவிரவாதியிடம் பலகட்ட விசாரணைகள் செய்தும் எந்தப் பலனும் இல்லை. இதுகுறித்த உயரதிகாரிகளின் இன் கேமரா ஆலோசனைக்குப் பிறகு அவனுக்கு ட்ரூத் சிரம் (Truth serum) அளிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. காவல்துறையின் உண்மைக் கண்டறியும் மருத்துவ நிபுணர் அவனுக்கு ட்ரூத் சிரத்தை ஊசி மூலம் செலுத்தினார்.

Representational Image
Representational Image

சிறிது நேரம் சென்றது. பதற்றத்துடன் அனைவரும் காத்திருந்தனர். முரட்டு உருவம் கொண்ட காவலர்கள் வெளியேற்றப்பட்டு, சற்று மென்மையான இயல்பு கொண்ட இருவர் அவனிடம் விசாரிக்க ஆரம்பித்தனர்.

கணினிகள் மூலம் அவனுடைய உடலியக்க செயல்பாடுகள் முழுக்க கண்காணிக்கப்பட்டன. அவன் உண்மை கூறுகிறானா? அல்லது பொய் கூறுகிறானா? என்பது கணினிகளின் கிராப்களில் வருமாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

விசாரணை ஆரம்பித்தது. அந்தத் தீவிரவாதிகளின் தலைவன் பார்ப்பதற்கு ஒரு கல்லூரி மாணவன் போல் தோற்றமளித்தான். அவனிடம் ஒரு பர்ஸ் மற்றும் ஆண்ட்ராய்டு போன் மட்டுமே இருந்தன. பர்ஸில் கொஞ்சம் பணத்தைத் தவிர எதுவுமில்லை. அந்த போனை ஆராய்ந்ததில் அதில் பெரிதாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

அது ஒரு புதிய போன். அதில் இதுவரை அவன் யாருக்கும் Call செய்யவோ அல்லது Message அனுப்பவோ இல்லை என்பது காவல்துறையின் சைபர் கிரைம் அமைப்பால் உறுதி செய்யப்பட்டது. மேலும், அவனது வசிப்பிடம் குறித்த எந்தத் தகவலும் உளவுத்துறைக்குக் கிடைக்கவில்லை.

ஆனால், குண்டுகள் வெடிக்குமிடத்தை இவன்தான் தீர்மானித்திருக்கிறான் என உளவுத்துறைக்கு நம்பகமான தகவல் கிடைத்திருந்தது. எங்கெங்கு குண்டுகள் வைக்க வேண்டும் என்பதை இவன்தான் ஸ்லீப்பர் செல்களுக்கு கூறியிருக்கிறான்.

ஆனால் எப்படி என்பதுதான் தெரியவில்லை. அவர்கள் யார் என்பதோ, அவர்களின் செல்போன் எண்களோ இவனுக்குத் தெரியாது.

ஒருவேளை இவன் போலீஸிடம் மாட்டிக்கொண்டால் இவனிடமிருந்து எந்தத் தகவலும் கசிந்து விடக் கூடாது என்பதற்காக தீவிரவாதிகள் மிகச் சாமர்த்தியமாக ஏதோ ஒரு ஏற்பாட்டை செய்திருந்தனர். அது என்ன என்பதும், இவன் ஸ்லீப்பர் செல்களை எப்படி தொடர்புகொண்டான் என்பதும் போலீஸுக்குப் புரியாத புதிராகவே இருந்தன.

Representational Image
Representational Image

நம்பிக்கையுடன் விசாரணை தொடங்கியது. அவனுடைய பெயர், வயது, பிறந்த இடம், பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் விசாரணையில் அவன் சற்று உளறலுடன் கூறிக் கொண்டே வந்தான். அனைத்தும் உண்மை! உண்மை! என்றது கணினி.

வெடிகுண்டுகள் எங்கு வைக்கப்பட்டுள்ளன என்ற மிக முக்கியமான கேள்விக்கு ``மேப்... மேப்" என்று உளறலாக பதிலளித்தவன், திடீரென மயக்கம் அடைந்தான். அவனுடைய மயக்கத்தை தெளிவிக்க மருத்துவர்கள் பெரும் முயற்சி செய்தனர். இன்னும் இரண்டு நிமிடங்கள் அவன் மயக்கம் அடையாமல் இருந்திருந்தால், எங்கெங்கு குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்ற தகவல் அவர்களுக்குக் கிடைத்திருக்கும்.

அவனுடைய மயக்கத்தை தெளிவிக்க முடியாமல் மருத்துவர்கள் கைகளைப் பிசைந்து கொண்டு நின்றனர். அவன் எடுத்துக்கொண்ட போதை மருந்துகளும், ட்ரூத் சிரத்தில் இருந்த மருந்துகளும் வினைபுரிந்து அவனை ஆழ்ந்த மயக்கத்தில் ஆழ்த்தி இருந்தன. அவன் தற்போதைக்கு கண் விழிக்க மாட்டான் என மருத்துவர்கள் உதட்டைப் பிதுக்கினர்.

Representational Image
Representational Image

இன்று இரவு குண்டு வெடிக்கும் என்ற சூழ்நிலையில் நேரம் கடந்து கொண்டே இருந்தது. அவர்களுக்குக் கிடைத்த ஒரே குறிப்பு `மேப்' என்பது மட்டுமே. அவனுடைய பாக்கெட்டுகளில் முழுக்க சோதனை செய்தாகிவிட்டது. எந்த ஒரு மேப்பும் அதில் இல்லை. அது போலவே அவனுடைய போனின் அனைத்துப் பகுதிகளையும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்துப் பார்த்துவிட்டனர். எந்த ஒரு மேப்பும் இருப்பதற்கான அடையாளமே இல்லை. ஆனால், அவன் 'மேப்.. மேப்' என்று உளறி இருக்கிறான். அது உண்மை என கணினி சான்று அளித்துள்ளது. அப்படியானால் அந்த மேப் எங்கே? அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை!

அவனுடைய செல்போனின் பேட்டரி `லோ' எனக் காண்பித்தது. கமிஷனர் அவருடைய டிரைவரிடம் அதைக் கொடுத்து சார்ஜ் போடும்படி கூறினார்.

கமிஷனரின் டிரைவர் தொழில்நுட்பத்தில் அதிபுத்திசாலி. அவருக்கு மேப் என்பது மொபைல் போனில் இருக்கும் கூகுள் மேப் ஆக இருக்கலாமோ என்ற ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அதை கமிஷனரிடம் கூற, அவனுடைய கூகுள் மேப்பை ஆராய்ந்து பார்த்தனர். அதில் எந்தவித குறிப்பும் இல்லை.

கோட் வேர்டுகளை டிகோடு செய்பவர்களுடனும், புரொபஷனல் ஹேக்கர்ஸ்களுடனும் உயர் காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து விவாதித்தனர்.

Representational Image
Representational Image

அவர்களும் அவனுடைய செல்போனை ஆய்வு செய்தனர். கூகுள் மேப்பில் அவன் எந்த ஓர் இடத்தையும் தேடவே இல்லை. அவனது Home குறித்த தகவலும் கூகுள் மேப்பில் இல்லை. அப்படியானால் `மேப்' என்பது வேறு ஏதாவது குறிப்பாகத்தான் இருக்க வேண்டும் என முடிவு செய்தனர்!

ஆனால். டிரைவருக்கு இதில் உடன்பாடில்லை. அவன் `மேப்' எனக் கூறும்போது அங்கிருந்த செல்போனை சுட்டிக்காட்டியே கூறினான்" என்பதை அவர் கமிஷனரிடம் தெரிவித்தார்.

அதைக் கேட்ட கமிஷனர் டிரைவரிடம் எறிந்து விழுந்தார். ``அதான் போனில் எல்லாமே பார்த்துட்டோமே. எதுவும் கண்டுபிடிக்க முடியலை. கூகுள் மேப்பில் இன்னும் என்ன இருக்கப்போவுது? நீ போய் உன் வேலையைப் பாரு"என்றார்.

சோர்ந்த முகத்துடன் அந்த அறையைவிட்டு டிரைவர் வெளியே வந்தார். `அவனிடம் இருந்தது ஒரு செல்போன் மட்டும்தான் அதில் மேப் என்பது கூகுள் மேப் ஆகத்தான் இருக்க வேண்டும்' என அவர் உறுதியாக நம்பினார்.

வெடிகுண்டு பிரச்னை குறித்து அறிந்த அமைச்சர்கள் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள ஆணையிட்டனர். தொடர்ந்து கமிஷனர் அலுவலக தொலைபேசி அடித்துக்கொண்டே இருந்தது. முதன்மைச் செயலர்கள் பலரும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

Representational Image
Representational Image

ஆனால், அவையெல்லாம் தற்போதைய சூழ்நிலைக்குப் பலனளிக்கக்கூடிய யோசனைகளாய் இல்லை. தீவிரவாத தலைவனின் மயக்கம் இன்னும் தெளியவில்லை. உயர் காவல்துறை அதிகாரிகள் மீண்டும் கூடிப் பேசினர். என்ன செய்வதென்று தெரியவில்லை. இனி என்ன செய்வது என தெரியாமல் அதிகாரிகளும் காவலர்களும் ஆங்காங்கே சோகம் கலந்த முகத்துடன் நின்றுகொண்டிருந்தனர்.

ஆனால், கமிஷனரின் டிரைவர் அவனுடைய போனின் கூகுள் மேப்பில் தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு அனைத்துமே விளங்க ஆரம்பித்தன!

ஒரு காகிதத்தை எடுத்து எங்கெங்கு குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்பதைக் கடகடவென எழுத ஆரம்பித்தார். அந்தக் காகிதத்தை கமிஷனரிடம் ஓடிச்சென்று கொடுத்தார். பரபரப்புடன் ``சார்... இங்கெல்லாம்தான் குண்டு வெச்சிருக்காங்க" என்றார். ``இங்கெல்லாம்தான் குண்டு வெச்சிருக்காங்கனு நீ எப்படி கண்டுபிடிச்ச?" என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் கமிஷனர்!

Representational Image
Representational Image

``ஐயோ, சார் அதுக்கெல்லாம் இப்ப நேரமில்லை. நாம போய் முதல்ல வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் வேலையைப் பார்க்கலாம். இதைக் கண்டுபிடிச்சதைப் பத்தி அப்புறமா நான் விளக்கமா சொல்றேன்" என்று டிரைவர் கூற, கமிஷனரின் ஆணைப்படி டிரைவர் கூறிய மூன்று இடங்களுக்கும் காவல்துறை பறந்தது.

டிரைவர் கன்ட்ரோல் ரூமில் அமர்ந்துகொண்டு ஒவ்வோர் இடத்திலும் எந்தக் குறிப்பிட்ட பகுதியில் வெடிகுண்டு உள்ளது என்பதையும் தெளிவாகக் கூறினார்.

அவர் கூறிய மூன்று இடங்களிலும், அதில் குறிப்பிட்ட பகுதிகளிலும் வெடிகுண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்களால் செயலிழப்பு செய்யப்பட்டன!

கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு டிரைவர் வெடிகுண்டு இருக்குமிடங்களையும், அவை வைக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட பகுதிகளையும் எவ்வாறு கண்டுபிடித்தார் எனப் புரியவில்லை. டிரைவர் சரியான இடத்தைக் கண்டுபிடித்துக் கூறியது அவர்களுக்குப் பெரும் வியப்பாக இருந்தது.

கமிஷனர் அலுவலகத்தின் இன் கேமரா அறையில் மீண்டும் அனைவரும் மகிழ்வுடன் கூடினர்.

அந்த அறைக்குள் நுழைந்த டிரைவர் அட்டென்சனில் நின்றபடி பதிலளிக்க ஆரம்பித்தார். `இது ஒரு சுலபமான தொழில்நுட்பம்தான் சார். இவன் போலி முகவரி மூலமா புதுசா ஒரு செல்போன் வாங்கி இருக்கிறான். அதில் பேசவோ, மெசேஜ் செய்யவோ இல்லை. வேறு எந்த APP ஐயும் உபயோகப்படுத்தவில்லை."

```ஆனா இவங்க பிளான்படி ஸ்லீப்பர் செல்ஸ் எல்லாத்துக்குமே இந்த போனில் Login செய்யப்படவுள்ள கூகுள் அக்கவுன்ட் மெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்டு முதலிலேயே கொடுத்துட்டாங்க."

Representational Image
Representational Image

``இவன் அதே விவரங்கள் மூலமா Google account login செய்து, குறிப்பிட்ட ஒரு நாளில் -அதாவது நேற்று -மூன்று இடங்களுக்கு மட்டுமே அந்த போனை எடுத்துட்டு போயிருக்கான்."

``அந்த இடங்கள் கூகுள் மேப்ஸ் டைம்லைனில் பதிவாகிவிட்டன. இவன் ஒரு குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று வந்ததும், அந்த இடத்தில் எந்தப் பகுதியில் வெடிகுண்டு வைக்க வேண்டும் என்பதை, இடத்தைப் பற்றி Review கொடுப்பதுபோல குறிப்புகளாக கொடுத்து விடுவான்."

``உதாரணமாக நாம் முதலில் வெடிகுண்டை செயலிழக்கச் செய்த ஹோட்டலில் `கிச்சன் அருமையாக உள்ளது' என்ற Review மூலம் கிச்சனில் வெடிகுண்டு வைக்க வேண்டும் என்பதை அவன் தெரிவித்துள்ளான்."

``இவ்வாறு ஓர் இடத்துக்குச் சென்று வந்ததுமே அவன் தன்னுடைய கூகுள் அக்கவுன்டை லாக் அவுட் செய்து விடுகிறான். குறிப்பிட்ட நேரத்தில் அந்த ஸ்லீப்பர் செல்லின் முதல் நபர் அதே கணக்கை லாகின் செய்யும்போது கூகுள் மேப்ஸ் டைம்லைனில் எந்த இடத்தில் குண்டு வைக்க வேண்டும் என்பது அவன் சென்ற இடமாகவும், எந்தப் பகுதி என்பது Review ஆகவும் தெரிகிறது. அதைப் பார்த்துவிட்டு முதல் ஸ்லீப்பர் செல் நபர் கூகுள் அக்கவுன்ட் லாக் அவுட் செய்து விடுகிறான். பிறகு குறிப்பிட்ட நேரத்தில் இவன் இரண்டாவது இடத்துக்கு இவ்வாறு செல்கிறான்."

Representational Image
Representational Image

``இவ்வாறு மூன்று இடங்களையும், அந்த இடத்தின் குறிப்பிட்ட பகுதியையும் யாருக்கும் சந்தேகம் வராத குறிப்புகளாக ஸ்லீப்பர் செல்களுக்கு வழங்கியுள்ளனர்."

``அதனால்தான் Truth serum மூலமான உண்மை கண்டறியும் விசாரணையில் அவன் `மேப்' என்று கூறியிருக்கிறான்!"

``நான் அவனது மேப் பகுதியை ஆராய்ந்தபோது நேற்றைய நாளின் டைம்லைனில், மக்கள் பெருமளவு கூடக்கூடிய மூன்று இடங்கள் மட்டுமே இருந்தன. அவற்றின் Review-க்களும் இருந்தன."

``மூன்று இடங்கள் மற்றும் போனில் எதையுமே உபயோகப்படுத்தாமல் Reviews ஐ மட்டுமே உபயோகப்படுத்தியது ஆகியவற்றை வைத்துத்தான், நான் அவை குண்டு வைக்கப்பட்ட இடங்களாக இருக்கலாம் என்பதைக் கெஸ் செய்தேன். தற்போது எனது கெஸ் உண்மையாகி விட்டது"

``நாம் இப்போது வெற்றிகரமாக வெடிகுண்டுகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்துவிட்டோம்" என்று நிறுத்தி தண்ணீர் குடிக்க ஆரம்பித்தார் டிரைவர். உடனே சன்னமாக எழுந்த கைதட்டல் தொடர்ந்து பலத்த கைதட்டலாக மாறியது.

``ஸ்லீப்பர் செல் ஆட்களைக் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், எப்படியோ குண்டுவெடிப்பு நடக்காம தடுத்திட்டோம். நீ செஞ்சது அற்புதமான வேலை, ஸ்மார்ட் கெஸ்" என்றபடி கமிஷனர் டிரைவரை கட்டியணைத்துக் கொண்டார்.

`` இல்லை சார்.இப்போது அந்த ஸ்லீப்பர் செல் ஆட்களையும் நாம் மிகச்சுலபமாக கைது செய்துவிடலாம்" என்றபடி டிரைவர் மீண்டும் மூன்று முகவரிகளை அளித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

Representational Image
Representational Image

முகவரிகளைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் ``ஸ்லீப்பர் செல் ஆட்களின் முகவரியை எப்படி கண்டுபிடிச்ச?" என வியப்புடன் வினவினர்.

``ஒவ்வொருத்தனும் இந்த கூகுள் அக்கவுன்ட்டை லாக் இன் செய்தபோது அவர்களின் டிவைசின் IMEI நம்பர் பதிவாகியுள்ளது. அதை நம்முடைய சைபர் க்ரைம் மூலமாக எடுத்துவிட்டோம்.

மேலும் வெடிகுண்டு வைக்கப்பட்ட பையைக் கொண்டுவந்த குறிப்பிட்ட நபரின் புகைப்படத்தையும் மூன்று இடங்களிலும் இருந்த சிசிடிவி கேமராக்கள் மூலமாக கண்டறிந்துவிட்டோம்"

``சாதாரண குடிமக்கள் போலவே அவர்கள் வாழ்வதால், அவர்கள் மூவரின் போன்களும் தற்போதுவரை ஸ்விட்ச் ஆஃப் செய்யப்படவில்லை. அவர்கள் தற்போது முகவரி மாறியிருந்தாலும், அந்த போன்கள் இருக்குமிடத்தை டிரேஸ் செய்வதன் மூலம் அந்த ஸ்லீப்பர் செல்கள் இப்போது எங்கு உள்ளனர் என்பதை நாம் சுலபமாகக் கண்டறிந்து அவர்களை கைது செய்துவிட முடியும் சார்" என்றபடி சுளீரென்று சல்யூட் அடித்தார் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான கமிஷனரின் டிரைவர்!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு