Published:Updated:

"கார்ல தூக்கிட்டுப் போய் அவங்கத் தெருவுல வச்சு என்னை அடிச்சாங்க!"- கலங்கும் திருநங்கை உதயா

திருநங்கை உதயா

'அவங்க அடிக்கிறதை பார்த்துட்டு அவங்க பொண்ணு வந்து அவங்க பாவம் அடிக்காதீங்கன்னு சொல்லுச்சு. மூணு மணி வரைக்கும் அடிச்சிட்டு அப்புறமா போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு வந்து விட்டாங்க!'

"கார்ல தூக்கிட்டுப் போய் அவங்கத் தெருவுல வச்சு என்னை அடிச்சாங்க!"- கலங்கும் திருநங்கை உதயா

'அவங்க அடிக்கிறதை பார்த்துட்டு அவங்க பொண்ணு வந்து அவங்க பாவம் அடிக்காதீங்கன்னு சொல்லுச்சு. மூணு மணி வரைக்கும் அடிச்சிட்டு அப்புறமா போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு வந்து விட்டாங்க!'

Published:Updated:
திருநங்கை உதயா

கடந்த 15.04.2022 தேசிய திருநர் தினம். ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி திருநர் தினத்தை கொண்டாடுகிறோம். சரி, அதனால் என்ன பயன் என நேரடியாக கேட்கத் தோன்றுகிறது. திருநெல்வேலி மாவட்டம் பணகுடி சாத்தான்குளத்தில் கரையடி காலனியில் வசிக்கும் திருநங்கை உதயாவிற்கு மிகப்பெரிய அநீதி நடைபெற்றிருக்கிறது. அவருக்கு ஆதரவாக எந்தக் குரலும் ஒலிக்கப்படவில்லை என்பது எவ்வளவு வருத்தமான செய்தி. 'காதல்' அனைவருக்கும் பொதுவானது தானே? தன் பெண் வேறு ஜாதியைச் சேர்ந்த பையனை திருமணம் செய்து கொள்ளவே இன்னமும் சம்மதம் தெரிவிக்காத பிற்போக்கு மனநிலை கொண்டவர்கள் எப்படி ஒரு திருநங்கையின் காதலைப் புரிந்து கொள்வார்கள்? யார் இந்த உதயா? அவருக்கு நடந்த அந்த கொடூர சம்பவம் குறித்துப் பேசினார்.

திருநங்கை உதயா
திருநங்கை உதயா

எங்க வீட்ல எனக்கு வச்ச பேரு இளவரசன். எங்க வீட்ல என்னையும் சேர்த்து மூணு பசங்க. சின்ன வயசிலேயே பெண் மாதிரி இருக்கத்தான் எனக்குப் பிடிச்சிருந்தது. 9-வது வரைக்கும் படிச்சேன். அதுக்குப் பிறகு திருநங்கையாக மாறிட்டேன். ஆரம்பத்தில் எங்க வீட்ல ஏத்துக்கல. பிறகு, ஆம்பள டிரஸ் போட்டுட்டு வீட்ல இருன்னு எங்க அம்மா சொல்லுச்சு. அதுக்காக நானும் என் ஆசையை அடக்கிக்கிட்டு ஆம்பள டிரஸ் போட்டுட்டு வீட்ல இருப்பேன். வெளியில என் திருநங்கை சமூகத்தோட இருக்கும்போது எனக்கு பிடிச்ச மாதிரி புடவை கட்டிப்பேன். என் பெயரையும் 'உதயா'ன்னு மாத்திக்கிட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரெஜினான்னு ஒரு திருநங்கை எனக்கு டான்ஸ் ஆட சொல்லிக் கொடுத்தாங்க. அவங்க மூலமாகத்தான் கலைகள்மீது ஆர்வம் அதிகமாச்சு. வீட்ல ஆரம்பத்துல ஆட்டத்துக்கு போகக் கூடாதுன்னாங்க.. பிறகு, எனக்கு ஆட்டம் பிடிச்சிருக்குன்னும், பணம் கொடுக்கிறேன்னதும் சரின்னு சொன்னாங்க. அப்பப்ப ஆட்டத்துக்குப் போக ஆரம்பிச்சேன். ஆப்ரேஷனும் பண்ணிக்கிட்டேன்.

திருநங்கை உதயா
திருநங்கை உதயா

செளபர்ணிகா என்கிற திருநங்கை என்னை பொண்ணா தத்தெடுத்துக்கிட்டாங்க. எங்க உடம்புல ஹார்மோன் மாற்றம் ஆன பிறகு எங்களை அறியாமலேயே எங்களுடைய மனம் ஆண்களை விரும்ப ஆரம்பிச்சிடும். மனசளவுல பொண்ணுங்கிறதனால ஒரு ஆண்மீது எங்களுக்கு காதல் வர்றது இயல்பான ஒன்று தானேங்க? என் திருநங்கை நண்பர்களோட நான் யார்கிட்டேயும் அதிகம் பேச மாட்டேன். ஒருமுறை கூடங்குளம் போயிருந்தோம். அப்படி போகும்போது தான் பாலா ஆனந்த் எனக்கு அறிமுகமானான். அவன் காலேஜ் படிச்சிட்டு இருந்தான். நட்பா பேச ஆரம்பிச்சு என்னை காதலிக்கிறதா சொன்னான். 

அப்பவும் அவன்கிட்ட நமக்கு இதெல்லாம் செட் ஆகாதுன்னு சொன்னேன். சாதியின் அடிப்படையிலும் நம்ம ரெண்டு பேருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.. இதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு அவனை சந்திக்காம இருந்தேன். பழவூரில் என் அம்மா செளபர்ணிகாவுக்கு உடம்பு சரியில்லைன்னு அவங்க வீட்டுக்கு வந்திருந்தேன். பிறகு, குமாரபுரத்துக்கு கலெக்‌ஷன் கேட்க கிளம்பினோம். அங்கே மறுபடி அவனை சந்திச்சேன். அங்கே மறுபடியும் என்னை சந்திச்சவன், "என் அம்மாவும் சரி, என் அப்பாவும் சரி என் மேல அன்பாகவே இருக்க மாட்டேன்றாங்க.. நீ மட்டும் தான் என் மேல உண்மையா அன்பு காட்டுற, என் கூட நீ இருக்கணும்னு ஆசைப்படுறேன்னு" சொன்னான். நானும் சம்மதிச்சேன். ரெண்டு பேரும் காதலிக்க ஆரம்பிச்சதும் நாங்க எடுத்துகிட்ட புகைப்படங்களை அவங்க அம்மா, அப்பாவுக்கு அனுப்பினான்.

திருநங்கை உதயா
திருநங்கை உதயா

அவனோட அம்மா எனக்கு போன் பண்ணி, `நீ தான்மா என் மருமக, அவசரப்பட்டு எதுவும் பண்ணிட வேண்டாம். ரெண்டு பேரும் கொஞ்சம் பொறுமையா இருங்கன்னு சொன்னாங்க.' என்கிட்ட நல்லா பேசி எங்க வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட பேசுறேன்னு சொல்லி வீட்டு முகவரி எல்லாம் வாங்கி வச்சிட்டாங்க. போன மாசம் 24-ம் தேதி நைட் 12 மணிக்கு எங்க வீட்டுக்கு பத்து, பதினைந்து பேர் சுமோவில் வந்திருந்திருக்காங்க. கிராமம் என்பதால் எங்க வீட்ல பாத்ரூம் வசதி கிடையாது. நானும், என் பாப்பாவும் வெளியில பாத்ரூம் போயிட்டு வந்துட்டு இருந்தோம். இவங்க வீட்ல என்னை தேடிட்டு வந்திருக்காங்க போல.. அது எனக்கு தெரியாது. நேரா எங்க பக்கத்துல காரை நிறுத்தி இதுல யாரு உதயான்னு கேட்டாங்க. நான் தான்னு சொல்லவும் அடிச்சு இழுத்து கார்ல தூக்கிப் போட்டுட்டாங்க.

அந்தக் காரில் கத்தி, அரிவாள் எல்லாம் இருந்துச்சு. நேரா கூடங்களம் ஶ்ரீரங்க நாராயணபுரத்தில் இருக்கிற பாலாவுடைய வீட்டுத் தெருவில் போட்டு அடி, அடின்னு அடிச்சாங்க. அவனுடைய அம்மா என் முகத்துல சிறுநீரைப் பிடிச்சிட்டு வந்து ஊத்தினாங்க. அவங்க அடிக்கிறதை பார்த்துட்டு அவங்க பொண்ணு வந்து அவங்க பாவம் அடிக்காதீங்கன்னு சொல்லுச்சு. மூணு மணி வரைக்கும் அடிச்சிட்டு அப்புறமா போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு வந்து விட்டாங்க.

போலீஸ்காரர் ஒருத்தர் 50 ரூபாய் கையில் கொடுத்து ஒரு லாரியில் ஏற்றிவிட்டு அனுப்பி வச்சார். பழவூர்ல இறங்கி எங்க வீட்டு வாசலில் உட்கார்ந்து அழுதுட்டு இருந்தேன். என்னை பார்த்துட்டு என் அம்மா அழுது உடனே கூடங்குளம் ஆஸ்பத்திரியில் என்னை சேர்த்துட்டு போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கப் போனாங்க. நான் அவன் கூட பழகினது தப்புன்னா எவ்வளவோ வேண்டாம், வேண்டாம்னு சொல்லியும் அவனா வந்துதான் என்கிட்ட பழகுனான். அவங்க பையனை என்ன செய்யப் போறாங்க? அவனை விட்டு ஒதுங்கிடணும்னா ஒன்னு என்கிட்ட நேரடியா பேசியிருக்கலாம். இல்லைன்னா என்கிட்ட சொல்லியிருந்திருக்கலாம். அப்படி ரோட்டுல போட்டு என்னை அடிக்க யாருக்கா அவங்களுக்கு அதிகாரம் கொடுத்தது? என்றவர் அடுத்து பேச முடியாமல் தேம்பி அழத் தொடங்கினார்.. அவருடைய வளர்ப்பு தாய் செளபர்ணிகா பேசினார்.

திருநங்கை உதயா
திருநங்கை உதயா

50ரூபாய் கொடுத்து லாரியில் அனுப்பி வைக்க அவங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு? எல்லாத்தையும் நானும், என் சமூகத்தை சேர்ந்தவங்களும் போலீஸ் ஸ்டேஷனில் கேட்டோம். 'transact' சட்டத்தில் சக்திவேல், மணிகண்டன்னு ரெண்டு பேரைக் கைது பண்ணினாங்க. மற்றவங்களை இன்னமும் தேடிட்டு இருக்காங்க.. எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை முழுவதுமா போயிடுச்சு! என்றவரின் குரலில் உள்ள வலியையும், சோர்வையும் உணர முடிந்தது.

உதயாவிற்கு ஆதரவாக பலர் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். நிச்சயம் அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது தான் பலரது கோரிக்கையாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism