`அமெரிக்காவில் தவிக்கும் இரண்டு மகன்கள்' -சென்னையில் காத்திருக்கும் தாயின் சடலம் #MyVikatan

``எங்களுடைய இந்த இக்கட்டான நிலை அறிந்து அமைச்சர் ஜெயக்குமாரே என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு எனக்கு ஆறுதல் கூறினார்..''
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
கொரோனாவின் பாதிப்பால் பல்வேறு துயரங்களை உலக மக்கள் சந்தித்து வருகின்றனர். இதில் அமெரிக்காவில் உள்ள எனது குடும்ப நண்பரின் துயரம் கொடுமையானது. சென்னையில் இறந்துபோன அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளமுடியாமல் தவியாய்த் தவித்து வருவதை போனில் அவர் கண்ணீருடன் தெரிவித்த சோகச் சூழலை இங்கே பதிவு செய்கிறேன்.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் நடன சுந்தரி. வயது 73. இவர் முதுமை மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பினால் கடந்த மார்ச் 30-ம் தேதி அன்று மருத்துவமனையில் இறந்துவிட்டார். இறந்துபோன நடன சுந்தரிக்கு மூன்று மகன்கள். சுரேஷ், ரமேஷ், சதீஷ். இவர்களில் இரண்டாவது மகன் ரமேஷ் மட்டுமே தாய் தந்தையருடன் சென்னையில் வசித்து வருகிறார். மற்ற இரு மகன்களும் அமெரிக்காவில் உள்ளனர். மூத்த மகன் சுரேஷ் நியூஜெர்ஸியிலும், மூன்றாவது மகன் சதீஷ் கலிபோர்னியாவிலும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடன சுந்தரி மார்ச் 30-ம் தேதி அன்று சர்க்கரை நோயினால் இறந்துபோனார். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக வெளிநாட்டு விமானங்கள் இந்தியாவில் இறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் அமெரிக்காவில் உள்ள சுரேஷ் மற்றும் சதீஷ் ஆகியோர் தனது தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளமுடியாமல் அமெரிக்காவில் தவித்து வருகின்றனர். எப்படியும் தனது அம்மாவின் முகத்தைக் கடைசியில் பார்த்துவிட வேண்டும் என அவர்கள் இருவரும் தவிக்கின்றனர். இதற்காகப் பல்வேறு முயற்சிகளிலும் அவர்கள் இறங்கி உள்ளனர்.
இறந்துபோன நடன சுந்தரியின் உடல் பிணவறையில் பதப்படுத்தி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இவர்களைப்போல் நிறைய பேர் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்ப முடியாமல் இக்கட்டான சூழலில் தவித்து வருகின்றனர். இந்தியா வந்து சேர மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.
என்னை போனில் தொடர்புகொண்ட நண்பர் சுரேஷ், “ வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் தங்கள் தாயகம் திரும்புவதற்காக இந்திய அரசு சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. இதனால் இந்தியாவிற்கு வந்தவர்கள், அவரவர் நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களையும் நமது தாயகம் வரவைக்க நமது மத்திய அரசு உதவி செய்ய வேண்டும்.

அமெரிக்காவிலிருந்து சரக்கு விமான சேவைகள் நிறுத்தப்படவில்லை. அவை தொடர்ந்து இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த சரக்கு விமானத்தில் அனுமதித்தால்கூட நாங்கள் வந்துவிடுவோம். எங்களைப்போல் இக்கட்டான நிலையில் தவிப்பவர்களை மட்டுமாவது இந்தியாவிற்கு வரவைப்பதற்கான ஏற்பாட்டினை நமது அரசு செய்ய வேண்டும். இறந்துபோன எங்கள் தாயாரின் முகத்தை கடைசியாய்ப் பார்ப்பதற்கு நம் தாயகத்தை ஆளும் மோடி அரசுதான் உதவி செய்ய வேண்டும்.
நமது தமிழக அமைச்சர் ஜெயக்குமாரின் உதவியால்தான் எங்கள் தாயாரின் உடல் பதப்படுத்தப்பட்டு தற்போது பிணவறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எங்களுடைய இந்த இக்கட்டான நிலை அறிந்து அமைச்சர் ஜெயக்குமாரே என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு எனக்கு ஆறுதல் கூறினார். அவருடைய உதவியை எந்நாளும் நாங்கள் மறக்கமாட்டோம்.

இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் இப்படி தவிப்பது எனத் தெரியவில்லை. எனவே நம்முடைய அரசுதான் கருணை காட்ட வேண்டும். அதாவது இதுபோன்ற இக்கட்டான நிலையில் தவிப்பவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து சிறப்பு விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்தால் உதவியாக இருக்கும். இதற்கு ஏதாவது உதவி செய்யுங்கள் நண்பரே….” என்று போனில் கண்ணீர் வடித்தார் சுரேஷ்.
இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் வெளிநாடுகளில் தவிப்பவர்களுக்கு மட்டுமாவது சிறப்பு விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்தால் பெரும் உதவியாக இருக்கும்.
-பழ.அசோக்குமார்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.