Published:Updated:

கொரோனாவை குணப்படுத்த மாத்திரை ரெடி! எப்போது இந்தியா வரும்?

கொரோனா
News
கொரோனா

ஒமைக்ரான் தொற்று காரணமாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்திருக்கும் நேரத்தில், அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறது இந்த மாத்திரை

கொரோனா சிகிச்சையில் 'கேம் சேஞ்சர்' என்கிறார்கள் அந்த மாத்திரையை! ஃபைஸர் மருந்து நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் பேக்ஸ்லோவிட் என்ற அந்த மாத்திரையை அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது அமெரிக்கா. ''அறிவியலின் வல்லமைக்கு இது உதாரணம்'' என்று பெருமிதமாகச் சொல்கிறார், அமெரிக்க அதிபர் ஜோ பைடன். 'இனி வீட்டில் இருந்தபடியே கொரோனா சிகிச்சையைப் பெற்று குணமடைய முடியும்' என்பதுதான் இந்த மாத்திரை சொல்லும் செய்தி. ஒமைக்ரான் தொற்று காரணமாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்திருக்கும் நேரத்தில், அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறது இந்த மாத்திரை. 12 வயதுக்கு மேற்பட்ட ஆபத்தான நோயாளிகளுக்கு இதைத் தரலாம் என்று பரிந்துரை செய்துள்ளது அமெரிக்கா.

ஒமைக்ரான் கொரோனா வைரஸ்
ஒமைக்ரான் கொரோனா வைரஸ்


நிர்மட்ரெல்விர், ரிடோனவிர் என்ற இரண்டு விதமான மாத்திரைகள் கொண்ட பேக் இது. கொரோனா வைரஸ் நம் உடலில் நுழைந்ததும் பெருகுவதற்கு ஒரு என்சைம் உதவுகிறது. அந்த என்சைமை நிர்மட்ரெல்விர் தடுத்து, வைரஸ் பெருகாமல் பார்த்துக்கொள்கிறது. இந்த மருந்தின் வீரியம் உடலில் நீண்ட நேரம் நீடித்து, வைரஸை ஒழிப்பதற்கு ரிடோனவிர் உதவுகிறது.
கொரோனா அறிகுறிகள் தெரிந்த ஐந்தாம் நாள் முதல் இந்த மாத்திரைகளைக் கொடுத்து பரிசோதனை செய்தார்கள். 'ஒரு கொரோனா நோயாளி மருத்துவமனைக்குப் போய் சிகிச்சை எடுக்க வேண்டிய அவசியத்தை 89 சதவிகிதம் இது குறைக்கிறது' என்பது உறுதியானது. இரண்டு குழுக்களாகக் கொரோனா நோயாளிகளைப் பிரித்து இந்த சோதனையைச் செய்தார்கள். இந்த மாத்திரையைச் சாப்பிடாத குழுவில் இருந்தவர்களில் 66 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களில் 12 பேர் இறந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மாத்திரையை சாப்பிட்ட குழுவில் வெறும் எட்டு பேருக்கு மட்டுமே மருத்துவமனையில் சேர வேண்டிய அளவுக்கு உடல்நிலை மோசமானது. அவர்களில் யாரும் சாகவில்லை.


ஒமைக்ரான் தொற்றைக்கூட எதிர்கொள்ளும் வல்லமை பெற்றதாக இந்த மாத்திரை கருதப்படுகிறது. அதனால் உலகின் கவனம் இதன்மீது திரும்பியிருக்கிறது. 'நோய் தீவிரம் அடையும் ஆபத்து இல்லாதவர்கள், ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில் உள்ளவர்கள் ஆகியோரைத் தவிர மற்றவர்களுக்கு இந்த மாத்திரைத் தரலாம்' என ஐரோப்பிய யூனியன் முதலில் அனுமதி தந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதைத் தொடர்ந்து இப்போது அமெரிக்காவும் அனுமதி தந்து, ஒரு கோடி மாத்திரைகளுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறது. ''கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசியே முதன்மை ஆயுதம். அதைத் தவிர்க்கக்கூடாது. ஆனால், தடுப்பூசியை மருத்துவமனைக்கு வந்துதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாத்திரையானது மருந்துக்கடைகளில் கிடைக்கும் என்பதால், எளிதாக மக்களைப் போய்ச் சேரும்'' என்கிறார், வெள்ளை மாளிகை கோவிட் ஒருங்கிணைப்பாளர் ஜெஃப் ஜியன்ட்ஸ். இதேபோல மெர்க் நிறுவனமும் ஒரு கொரோனா நிவாரணி மாத்திரையை அறிமுகம் செய்திருக்கிறது. `மோல்னுபிரவிர்' என்ற இது கேப்ஸ்யூல் வடிவில் கிடைக்கிறது.

அமெரிக்க வெள்ளைமாளிகை
அமெரிக்க வெள்ளைமாளிகை
Alex Brandon

கொரோனா வைரஸின் மரபணு இழையில் ஒரு பிழையை ஏற்படுத்தி, அது பல மடங்காகப் பெருகுவதை இது தடுக்கிறது. ஒரு நாளைக்கு எட்டு கேப்ஸ்யூல்கள் வீதம் ஐந்து நாட்களில் 40 கேப்ஸ்யூல்கள் சாப்பிட வேண்டும். இதற்கு பிரிட்டன், டென்மார்க் போன்ற நாடுகள் உடனடியாக அனுமதி தந்திருக்கின்றன. அமெரிக்காவும் இப்போது அவசர அனுமதி தந்து, சுமார் 31 லட்சம் கேப்ஸ்யூல்களுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறது.
லேசான தொற்றுடன் இருக்கும் கொரோனா நோயாளிகளின் வீட்டு சிகிச்சைக்கு இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என அமெரிக்கா அறிவித்திருக்கிறது. கொரோனா தீவிரமாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழலை இது 30 சதவிகிதம் தடுக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சரி, இந்த மாத்திரைகள் எப்போது இந்தியா வரும்?

கொரோனாவை விரைவில் குணப்படுத்தும் ஃபைஸர் நிறுவனத்தின் பேக்ஸ்லோவிட் மாத்திரையை இந்தியாவில் தயாரிக்க சன் ஃபார்மா, டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரி, ஆப்டிமஸ் ஃபார்மா ஆகிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. வெளிநாட்டுக் கண்டுபிடிப்பான ஒரு மருந்தை ஜெனரிக் முறையில் தரமான உருவாக்கி, குறைந்த விலையில் விற்பதை இந்திய நிறுவனங்கள் தொடர்ந்து செய்கின்றன.
கொரோனா சிகிச்சைக்கு உதவும் பேக்ஸ்லோவிட் மாத்திரை, எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என ஃபைஸர் நிறுவனம் நினைக்கிறது. எனவே, ஐ.நா சபையின் மருந்துக் காப்பீட்டு தொகுப்பு அமைப்புடன் அது ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி பேக்ஸ்லோவிட் மாத்திரை தயாரிக்கும் லைசென்ஸ் 95 நாடுகளின் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இதில் ஏழை நாடுகளில் தயாரிக்கப்படும் மாத்திரைகளுக்கு ஃபைஸர் நிறுவனம் காப்பீட்டுத் தொகை கேட்காது. மற்ற நாடுகள் சிறிய அளவில் தர வேண்டும். இந்தியாவும் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது. எனவே, இந்திய நிறுவனங்கள் சீக்கிரமே இதைத் தயாரிக்க முடியும்.

சன் பார்மா
சன் பார்மா

ஆனால், இந்தியாவில் பயன்படுத்தும் ஒரு மாத்திரையை, இந்தியாவில் தனியாகப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று விதி உள்ளது. இந்தியர்கள் மத்தியில் மூன்றாம் கட்டப் பரிசோதனையை மட்டும் நடத்தியபிறகு இதற்கு அனுமதி தரப்படலாம். ஏற்கெனவே மெர்க் நிறுவனத்தின் மோல்னுபிரவிர் கேப்ஸ்யூலைத் தயாரிப்பதற்கு சிப்லா, எம்க்யூர், சன் ஃபார்மா, டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரி, டோரன்ட் போன்ற நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த மருந்துக்கான மூன்றாம் கட்டப் பரிசோதனையும் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அதேபோல பேக்ஸ்லோவிட் மாத்திரைக்கான சோதனையும் வெற்றிகரமாக முடிந்தால், புத்தாண்டில் இந்தியர்களுக்கு இரண்டு கொரோனா சிகிச்சை மாத்திரைகள் கிடைத்துவிடும்.