ஒருவரது பணித்திறன் என்பது, அவர் வேலைபார்க்கும் இடத்தின் சூழலைப் பொறுத்தே அமைகிறது. பணியிடச் சூழலானது உடல்நலம் மற்றும் உற்பத்தித்திறனில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. இந்நிலையில், பணியிடங்களில் உடலைவிட உளவியல் ரீதியான துன்புறுத்தல்கள் அதிகம் இருப்பதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
லாயிட்ஸ் பதிவு அறக்கட்டளையின் World Risk Poll-ன் ஒரு பகுதியாக, ILO-LRF-Gallup அமைப்பு, 121 நாடுகள் மற்றும் பிரதேசங்களில், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 75,000 பணியாளர்களிடம் 2021-ல் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வுக்கான நேர்காணலில், பணியாளர்கள் உடலைவிட உளவியல் ரீதியான வன்முறைகளையே அதிகம் சந்திப்பதாகத் தெரியவந்துள்ளது.

இது குறித்து, ஐ.நா சர்வதேச தொழிலாளர் அமைப்பு, லாயிட்ஸ் பதிவு அறக்கட்டளை மற்றும் கேலப் ஆகியன, சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை, 22%-க்கும் அதிகமானோர், குறைந்தது ஒருவகையான வன்முறை மற்றும் துன்புறுத்தலையும், மூன்றில் ஒரு பகுதியினர் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களில் துன்புறுத்தலையும் பணியிடத்தில் அனுபவிப்பதாகக் கூறுகிறது. உலகெங்கிலும், வேலையிடத்தில் நிலவும் வன்முறை மற்றும் துன்புறுத்தல் குறித்து ஆய்வு செய்வதற்கான முதல் முயற்சிதான் இந்த ஆய்வு.
பரபரப்பான வேலைச் சூழலில், வன்முறை மற்றும் துன்புறுத்தல் என்பது பரவலான ஒரு விஷயமாக உள்ளது. இதுபோன்ற வன்முறைகளும் துன்புறுத்தல்களும் கடுமையான உடல் மற்றும் மனநலப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என, மூன்று அமைப்புகளும் தெரிவித்துள்ளன. பெரும்பாலும் இதுபோன்ற பணியிட வன்முறைகளையும், துன்புறுத்தல்களையும் இளைஞர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் குறைந்த ஊதியம் பெறுபவர்கள், குறிப்பாக பெண்கள் அதிகம் அனுபவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உளவியல் ரீதியான வன்முறை மற்றும் துன்புறுத்தல் என்பது மிகவும் பொதுவானது என்று, வேலைபார்க்கும் ஆண், பெண் இருபாலினராலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவியல் வன்முறையை 17.9% தொழிலாளர்கள் தங்கள் வேலையின்போது அனுபவிக்கிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது. இந்தக் கணக்கெடுப்பில் மூன்றில் ஒரு பகுதியினர், அதாவது 6.3% பேர் உடல், உளவியல் மற்றும் பாலியல் வன்முறை மற்றும் துன்புறுத்தல் ஆகிய மூன்றையும் எதிர்கொண்டுள்ளனர்.
கணக்கெடுக்கப்பட்டவர்களில் 8.5% பேர் உடல்ரீதியான வன்முறை மற்றும் துன்புறுத்தலை அனுபவித்திருக்கின்றனர். இதில் பெண்களைவிட ஆண்கள் அதிகமான வன்முறையை சந்தித்திருக்கின்றனர். 6.3% பேர் பாலியல் வன்முறை மற்றும் துன்புறுத்தலை அனுபவித்துள்ளனர். வேலையில் வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களில் 60%-க்கும் அதிகமானோர், இது தங்களுக்கு பலமுறை நடந்துள்ளதாகத் தெரிவித்ததாக அறிக்கை கூறுகிறது.

உலக அளவில், பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேர் மட்டுமே தங்கள் அனுபவங்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும், அதிலும் அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வன்முறை மற்றும் துன்புறுத்தல்களை சந்தித்த பின்னரே அது குறித்துப் பேசியுள்ளனர் என்றும் அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஆண்களைவிட பெண்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தும் அவர்கள் வெளிப்படுத்துவது இல்லை என்றும் ILO-LRF-Gallup ஆய்வில் தெரியவந்துள்ளது.