முன்பெல்லாம் தகப்பனார் அல்லது சொத்துக்கு உரியவர் இறந்த பின்னர், அந்த சொத்து குடும்ப வாரிசுகளுக்கு சென்றடையும். தற்பொழுதோ காலம் வெகுவாக மாறிவிட்டது. பெரியவர் எப்பொழுது இறப்பார் தான் சொத்தை எப்பொழுது அனுபவிப்பது என்று சில வாரிசுகள் ஏங்கிக்கிடக்கின்றன. பெரியவருக்கு சிகிச்சை அல்லது மற்ற ஏதாவது காரியங்களுக்காக செலவு செய்வது வீண், அவசியம் இல்லாதது என்று சிலர் நினைக்கிறார்கள். இப்படி பெரியவருக்கு எல்லாம் செலவு செய்து விட்டால், தான் அனுபவிப்பதற்கு போதுமான சொத்து இருக்காது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
இதைத் தவிர சொத்து பங்கீட்டில் வேறு பிரச்னை வருகிறது. தந்தைக்குப் பின், மகனுக்குத்தான் சொத்தில் உரிமை என்ற காலம் போய்விட்டது. மகன் மற்றும் மகள்களுக்கும் சரிசமமாக சொத்தில் உரிமை உண்டு என்ற சட்டம் வந்துவிட்டது. பாசமலர் படத்தில் வருவது போல் இருந்த அண்ணன் தங்கை உறவு சொத்துக்காக சுக்குநூறாக உடைந்து போய்விட்டது. அது எப்படி?

திருவள்ளுரில் உள்ள ஒரு விவசாயக் குடும்பம். பெரியவர்க்கு சுமார் 70 வயது இருக்கும். அவர் மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோய்களுக்காக என்னிடம் சிகிச்சை பெற்று வந்தார். மனைவிக்கு நல்ல ஆரோக்கியமான உடல்நிலை. ஓரே மகன் மற்றும் ஓரே மகள். மகன் அப்பாவுக்கு துணையாக விவசாயம் பார்த்து வந்தான். தங்கையின் திருமணத்தை தடபுடலாக நடத்தி தன் கடமையை நிறைவேற்றினான். திருமணம் நடந்து பல ஆண்டுகள் ஆகியும் அவளுக்கு குழந்தை பேறும் இல்லை, தங்கையின் கணவருக்கு தொழிலில் பெருத்த நஷ்டம். அதை ஈடுகட்ட ஒரு சில விவசாய நிலங்களை விற்க வேண்டியதாயிற்று. தந்தையும், மகனும் சிறப்பாக தங்களது கடமையை நிறைவேற்றினார்கள். ஆனால் தான் எதிர்பார்த்த அளவுக்கு தன் மகள் வாழ்க்கை அமையாததால், மனச்சோர்வுற்று ஒரு நாள் மாரடைப்பால் தந்தை மரணம் அடைந்துவிட்டார். அவர் மனைவியின் உடலும் தளர்ந்து விட்டது. தகப்பனாருக்கு செய்ய வேண்டிய ஈமக்காரியங்களை மகனும் மகளும் நன்றாகவே நடத்தி முடித்தார்கள். அதற்கு பிறகு அவரவர், குடும்பம் என்று தங்கள் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇப்பொழுதுதான் தங்கையின் வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது. ஒரு சில உறவினர்கள் தங்கையை நெருங்கி இப்பொழுது சட்டப்படி சொத்தில் பாதி பங்கு உனக்கு வருமே அதை ஏன் உன் அண்ணனிடம் கேட்டு வாங்கக் கூடாது என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். தன் அண்ணனிடம் எப்படி கேட்பது என்று முதலில் யோசித்தாள். தான் தவறு ஒன்றும் செய்யவில்லையே, தனக்கு வரவேண்டிய பங்கைத் தானே கேட்கிறேன் என்று அண்ணனிடம் நேரடியாகவே இந்த விஷயத்தை போட்டு உடைத்து விட்டாள். இதை சற்றும் எதிர்பாராத அண்ணன் நிலைதடுமாறி போனான். "உனக்கு செய்ய வேண்டியது எல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பு உங்களுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட பொழுதே செய்தாகிவிட்டது. இனிமேல் செய்வதற்கு ஒன்றுமில்லை’ என்று அவளை சண்டை போட்டு அனுப்பிவிட்டான். இதை நேரிடையாக பார்த்த அவனது அம்மாவிற்கு சாப்பாடு, உறக்கம் இல்லாமல் உடல் மெலிந்து நடை தளர்ந்து விட்டது. சொத்துக்காக பெத்த பிள்ளைகள் சண்டை போட்டுக் கொள்கிறார்களே என்ற மிகவும் மனம் நொந்து போனாள். இந்நிலையில் அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்து தக்க சிகிச்சையளிக்கப்பட்டு, ஓரளவுக்கு உடல் தேறி வீட்டுக்கு அழைத்து வந்தான். ஆனால், ஒரு வாரத்திலேயே அம்மா இறந்து விட்டாள். இது பிள்ளைகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மகள் வெறும் ஒப்புக்காக கடைசி காரியங்களுக்கு வந்து போனாள்.
சொத்துக்காக தாயின் உயிரும், தங்கையின் பாசமும் இங்கு அடகு வைக்கப்பட்டது. பணத்திற்கு முன்னால் பாசம் எம்மாத்திரம்!

அம்மா இறந்த ஒரு வாரத்திற்குள்ளே நீதிமன்றத்தில் இரண்டு காரணங்களை வைத்து அண்ணன் மேல் வழக்கு தொடுத்தாள். ஒன்று அப்பாவின் சொத்தில் தனக்குரிய பங்கை எழுதி தர வேண்டும். இரண்டாவது அம்மா மயங்கிய நிலையில் இருக்கும் பொழுது, அம்மாவிற்குத் தெரியாமல் அவன் பெயருக்கு எல்லா சொத்தை எழுதிக் வாங்கிக்கொண்டான். அண்ணன் "அப்படியில்லை தன் அம்மா உடல்தேறி மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்த பிறகு நல்ல மனநிலையில் தான் தன் பெயருக்கு எழுதி தந்ததாக கூறி’ நீதிமன்றத்தில் எதிர் மனு தாக்கல் செய்தான். அண்ணன் தங்கையிடையே பேச்சு வார்த்தை இல்லை. சொத்துக்காக தாயின் உயிரும், தங்கையின் பாசமும் இங்கு அடகு வைக்கப்பட்டது. பணத்திற்கு முன்னால் பாசம் எம்மாத்திரம்!