Published:Updated:

”மக்கள் இந்தக் கலையை நேசிக்கணும்!” - பத்மஸ்ரீ விருதுபெரும் தவிலிசை கலைஞர் ’கொங்கம்பட்டு’ முருகையன்

பத்மஸ்ரீ ’கொங்கம்பட்டு’ முருகையன்

“40 கிலோ தவிலை தூக்கி தோளில் மாட்டிட்டோம்னா மணிக்கணக்கா வாசிச்சிக்கிட்டே இருக்கணும். தொடர்ச்சியா 7 மணி நேரத்தைத் தாண்டியும். கச்சேரி நடக்கும். மூனு மணி நேரம், நாலு மணி நேரம்னு தனியாவர்த்தனம் வாசிப்போம்” – ’கொங்கம்பட்டு’ முருகையன்

”மக்கள் இந்தக் கலையை நேசிக்கணும்!” - பத்மஸ்ரீ விருதுபெரும் தவிலிசை கலைஞர் ’கொங்கம்பட்டு’ முருகையன்

“40 கிலோ தவிலை தூக்கி தோளில் மாட்டிட்டோம்னா மணிக்கணக்கா வாசிச்சிக்கிட்டே இருக்கணும். தொடர்ச்சியா 7 மணி நேரத்தைத் தாண்டியும். கச்சேரி நடக்கும். மூனு மணி நேரம், நாலு மணி நேரம்னு தனியாவர்த்தனம் வாசிப்போம்” – ’கொங்கம்பட்டு’ முருகையன்

Published:Updated:
பத்மஸ்ரீ ’கொங்கம்பட்டு’ முருகையன்

மத்திய அரசு வெளியிட்ட 2022-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதாளர்களின் பட்டியலில் கலைப் பிரிவில் இடம்பிடித்திருக்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர் ஏ.வி.முருகையன். விழுப்புரம் மாவட்ட இசைக் கல்லூரியில் கடந்த 23 ஆண்டுகளாக போராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அகில இந்திய வானொலி நிலையத்தில் முதல் வரிசை கலைஞராகவும், புதுச்சேரி மற்றும் டெல்லி வானொலி நிலையங்களின் இசை தேர்வுக் குழுவின் நடுவராகவும் பதவி வகித்து வருகிறார். பாரம்பர்ய இசைக் குடும்பத்தில் பிறந்தவரான இவர், தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கிறார்.

சின்ன கோட்டக்குப்பத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றபோது முகம் நிறைந்த புன்னகையுடன் வரவேற்று நம்மிடம் பேசத் தொடங்கினார். “பாண்டிச்சேரிக்கும் விழுப்புரம் மாவட்டத்துக்கும் நடுவில் இருக்கற கொங்கம்பட்டு கிராமம்தான் எனக்கு பூர்வீகம். அப்பா விவேகானந்தன் பெரிய தவில் வித்வான். ஆனால் இந்த தொழில் மேல எனக்கு ஈடுபாடு வந்ததுக்கு காரணம் தாத்தா கேசவன்தான். சுத்துப்பட்டுல பெரிய நாதஸ்வர வித்வான். நான் தவில் கத்துக்கணும்னு ஆசைப்பட்டாரு. ஆனால் அப்பாவுக்கும், ஆயாவுக்கும் அதுல கொஞ்சம்கூட விருப்பமே இல்ல.

தவில் இசை
தவில் இசை

என்னோட ரெண்டு அண்ணனுங்க மாதிரி நானும் டிகிரி படிச்சே ஆகணும்னு எதிர்ப்பு தெரிவிச்சாங்க. ஆனால் எங்க தாத்தா உறுதியா இருந்ததால 8 வயசுலயே தவில் என்னை அரவணைச்சிக்கிச்சி. தாத்தா போற எல்லா கச்சேரிகளுக்கும் என்னையும் கூட்டிக்கிட்டு போய் தவில் வாசிக்கறதுக்கு கத்துக் கொடுத்தாரு. அப்போவே அப்பாகிட்ட தவில் கத்துக்க 60 மாணவர்களும், தாத்தாகிட்ட நாதஸ்வரம் கத்துக்க 50 மாணவர்களும் இருப்பாங்க. இது எங்களுக்கு பரம்பரை பரம்பரையா வரும் தொழில் அப்படிங்கறதால அரங்கேற்றமெல்லாம் கச்சேரிகளில் யதேச்சையாக நடந்துடும்.

அப்போ எனக்கு 11 வயசு இருக்கும் பாண்டிச்சேரி தட்சிணாமூர்த்தி நகர்ல ஒரு ஐயர் வீட்டு கல்யாணத்துக்கு அப்பா, தாத்தா கூட போயிருந்தேன். கல்யாணம்லாம் முடிஞ்சி சாயங்காலம் நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நடக்கும்போது வாசிக்கனும். அந்த நேரத்துல அப்பாவும் வாத்தியக்காரங்களும் டீ கடைக்கு போயிருந்தாங்கனு நினைக்கறேன். உடனே தாத்தா என்னை உட்கார்ந்து தவில் வாசிக்க சொன்னாரு. உடனே நான் வாசிக்க ஆரம்பிச்சேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போ அந்த கல்யாணத்துக்கு வந்தவங்களாம் என்னை பாராட்டி ரெண்டு ரூபாய், மூனு ரூபாய்னு கொடுத்து ஆசீர்வாதம் பண்ணிட்டு போனாங்க. அன்னைக்கு தேதிக்கு ஒரு கச்சேரிக்குப் போனா அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் அதிகபட்சமா கூலியா 35 ரூபாய் பங்கு கிடைக்கும். அது அப்போ 3,500 ரூபாய்க்கு சமம். ஆனால் அன்னைக்கு நான் வாசிச்சதுக்கு 100 ரூபாய் சன்மானமா கிடைச்சது. கொஞ்ச நாளிலேயே தாத்தாவோட நாதஸ்வரத்துக்கு நான் தவில் வாசிக்கற அளவுக்கு தயாராயிட்டேன். கச்சேரிக்கு அடிக்கற பத்திரிகைகளில் ’தவில் வித்வான் 11 வயசு கொங்கம்பட்டு முருகன்’னு பேர் போடற அளவுக்கு வாசிக்க ஆரம்பிச்சிட்டேன். அதுக்கப்புறம் திருவையாறு அரசர் இசைக்கல்லூரியில் மூனு வருஷம் படிப்பு முடிச்சி தவில் நாதமணி பட்டம் வாங்கினேன். திருவிடை மருதூர் ரங்கசாமிப் பிள்ளைதான் அங்கு எனக்கு வாத்தியார்.

மத்திய அரசு
மத்திய அரசு

என்னை ஒரு மாணவனா பார்க்காம பிள்ளையா நினைச்சி தவில் வாசிப்பு குறித்த எல்லா நுணுக்கத்தையும் சொல்லிக் கொடுத்தாரு. அங்க முடிச்சதுக்கப்புறம் எல்லா மாநிலங்களுக்கும் போய் வாசிக்க ஆரம்பிச்சேன். அப்படியே கொஞ்ச நாள் ஓடுச்சி. அதுக்கப்புறம் சென்ட்ரல் ஸ்காலர்ஷிப் மூலமா குருநாதர் இசை சக்கரவர்த்தி பத்மஸ்ரீ வளையப்பட்டி ஏ.ஆர்.சுப்பிரமணியன் ஐயாகிட்ட சிஷ்யனா சேர்ந்தேன். ரெண்டு வருஷம் சிஷ்யனா இருந்து கத்துக்கிட்டு, அதுக்கப்புறம் எட்டு வருஷம் ஐயா கூடவே கச்சேரிகள்ல வாசிச்சது எனக்கு கிடைச்ச பெரிய பாக்கியம்னுதான் சொல்லணும்.

அப்புறம் விழுப்புரம் மாவட்ட இசைக்கல்லூரியில தவில் ஆசிரியரா வேலை கிடைச்சது. அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்கிட்டு பாண்டிச்சேரி வந்துட்டேன். 35 வருஷமா பாண்டிச்சேரிலதான் இருக்கேன். பாண்டிச்சேரி, தமிழகத்தின் ஆண்ட, ஆளும் அரசுகள் எடுத்த முயற்சியால் எல்லோரும் மதிக்கும் உயரிய விருதான மத்திய அரசாங்கத்தோட பத்மஸ்ரீ விருது கிடைச்சிருக்கறது ரொம்ப சந்தோஷமாக தருணம். இந்த விருதை என்னுடைய குருநாதர்கள், மாணவர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் பண்றேன்” என்று கூறும் இவர், இந்திய கலைகளை உலகறியச் செய்யும் விதமாக பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்டவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து பேசிய அவர், “அதேசமயம் சங்கீத கலைஞர்கள் இப்படியான இடத்திற்கு வருவது சாதாரண விஷயம் கிடையாது. அதில் பலகட்டத் தேர்வுகள் இருக்குது. முன்பெல்லாம் வார் தவிலோட எடை 30 கிலோ வரை இருக்கும். இப்போ தவிலை அட்ஜஸ்ட் பண்ண நட்டு, போல்டெல்லாம் இருக்கறதால 40 கிலோ வரைக்கும் எடை இருக்கும். அதை தூக்கி தோளில் மாட்டிட்டோம்னா மணிக்கணக்கா வாசிச்சிக்கிட்டே இருக்கணும். தொடர்ச்சியா 7 மணி நேரத்தை தாண்டியும், கச்சேரி நடக்கும். மூனு மணி நேரம், நாலு மணி நேரம்னு தனியாவர்த்தனம் வாசிப்போம். அப்போது நான் பட்ட கஷ்டங்கள்தான் இப்போ என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கு. சங்கீதக் கலைகளை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்.

23 வருஷ ஆசிரியர் அனுபவத்துல 350-க்கு மேற்பட்ட மாணவர்களை உருவாக்கியிருக்கேன். கல்லூரிக்கு வெளியிலேயும் நூற்றுக்கணக்கானவர்களை தயார்படுத்தியிருக்கிறேன். அத்தனையும் திறமையானவர்கள். ஆனால் அதனால் என்ன பிரயோஜனம் ? மக்கள் இந்த கலையை ரசித்தால்தான் அவர்களால் தொழில் செய்ய முடியும். கணவன் மனைவியைத்தான் குடும்பம்னு சொல்வாங்க. அதேபோல நாதஸ்வரம் தவில் இணைந்த இசையை மங்கள இசைன்னு சொல்றோம். இதை எப்போ யார் கண்டுபிடிச்சாங்கனு யாராலையும் சொல்ல முடியாது.

ஆனால் ஆலயங்கள் தோன்றியது முதல் மங்கள இசை இருக்குது. தவில் காளியோட வடிவம். நந்தியோட வாத்தியம். முன்பெல்லாம் சுப நிகழ்ச்சிகள் அப்படின்னா நல்ல நாதஸ்வரம் வேணும், நல்ல தவில் வேணும்னு தேடி தேடி புக் பண்ணுவாங்க. ஆனால் இப்போ நாகரிகம் அப்படிங்கற பேர்ல புதுசு புதுசா இன்ஸ்ட்ருமென்ட்டை வச்சிக்கிட்டு, சாங்கியத்துக்காக மட்டும் வாத்தியத்தை தேடறாங்க. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் ஒரேயொரு பெட்ஷீட்தான் அவர்களுக்கான இடமா மாறிடுச்சி. கலைஞர்களுக்கு அதில் உடன்பாடு இருக்காதுதான் என்றாலும், வாழ்வாதாரத்துக்காகவும், கலையை கடவுளா ஏத்துக்கிட்டு கம்பீரமா வாசிக்கறாங்க.

மக்களும் அரசாங்கமும் இந்த கலையை ஊக்குவிக்கணும், நேசிக்கணும். தவில், நாதஸ்வரம், கிராமிய கலை வாத்தியங்கள்தான் பாண்டிச்சேரிக்கும், தமிழ்நாட்டுக்கும் சொந்தமான வாத்தியங்கள். இந்தியாவில்தான் இந்தத் தொழிலுக்கு உரிய மரியாதையைக் கொடுக்க மாட்றாங்க. அதை செய்யும் எங்களையும் மதிக்க மாட்றாங்க. ஆனால் வெளி நாடுகளில் என்னைப் போன்ற கலைஞர்களை அதிசய பிறவியா பாக்கறாங்க, மதிக்கறாங்க. அதேநிலை நம்ம நாட்டிலும் வரணும் அப்படிங்கறதுதான் என்னோட ஆசை” என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism