Published:Updated:

முள்ளிவாய்க்கால் - பத்தாண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கிறது ஈழம்?

முள்ளிவாய்க்கால் - பத்தாண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கிறது ஈழம்?
பிரீமியம் ஸ்டோரி
முள்ளிவாய்க்கால் - பத்தாண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கிறது ஈழம்?

நிலாந்தன்

முள்ளிவாய்க்கால் - பத்தாண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கிறது ஈழம்?

நிலாந்தன்

Published:Updated:
முள்ளிவாய்க்கால் - பத்தாண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கிறது ஈழம்?
பிரீமியம் ஸ்டோரி
முள்ளிவாய்க்கால் - பத்தாண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கிறது ஈழம்?

மீனைப் பிடிப்பதற்காகக் கடலைப் பிழிந்து வடித்த இடம்தான் முள்ளிவாய்க்கால். ஓர் ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதற்காக இனப்படுகொலை செய்யப்பட்ட இடமது. நவீனத் தமிழில் தோன்றிய ஒரு வீரயுகத்தின் கடைசி நாள்தான் மே 18.

தமிழ் மக்களின் வரலாற்றில் அதற்கு முன்னெப்பொழுதும் அவ்வளவு தொகை மக்கள் அவ்வளவு குறுகிய காலப்பகுதியில் கொல்லப்பட்டதில்லை, காணாமலாக்கப்பட்டதுமில்லை. இந்த நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை அது. ஓர் ஆயுதப்போராட்டத்தை ஓர் இனப்படுகொலை மூலம் நசுக்கலாம் என்பதற்கு இந்த நூற்றாண்டின் முதலாவது கெட்ட உதாரணம் அது.

பெருந்தமிழ்ப் பரப்பில் அவ்வாயுதப் போராட்டம் தொடர்பில் வேறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் மிகப்பெரிய தமிழ் இனப்படுகொலை என்ற காரணத்தால் முழுத்தமிழ்ப் பரப்பையும் ஒன்றிணைக்கும் ஒரே உணர்ச்சிகரமான விடயம் அது. பெருந்தமிழ்ப் பரப்பிலுள்ள ஆகப்பெரிய சட்டமன்றமாகிய தமிழக சட்ட சபையும், அதற்கடுத்தபடியாக முக்கியத்துவமிக்க இலங்கைத்தீவின் வட மாகாண சபையும் இரண்டு இனப்படுகொலைத் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றன. எனவே பெருந்தமிழ்ப்பரப்பில் முழுத்தமிழ் மக்களையும் ஆகக்கூடியபட்சம் ஒன்றிணைக்கும் நாளாக மே 18 காணப்படுகின்றது. அது ஒரு யுகமுடிவின் நாள்.

முள்ளிவாய்க்கால் - பத்தாண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கிறது ஈழம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஈழத் தமிழர்களின் நவீன வரலாற்றில் தோன்றிய ஒரு கருநிலை அரசு. ஒரு பெருங் கடலுக்கும் சிறு கடலுக்கும் இடையே ஒடுங்கிய ஒரு நிலத்துண்டில் 3 குக்கிராமங்களாகச் சுருக்கப்பட்டது. ஆயுதம் ஏந்தியிராத சாதாரண தமிழ் மக்கள் போர் புரிந்த இரண்டு தரப்புகளுக்குமிடையே சான்ட்விச் ஆக்கப்பட்டார்கள். ஆசியாவின் மிகப்பெரிய மரணச் சேரியாக அது மாறியது. குறிப்பாக மே மாதம் அது ஆசியாவின் மிகப்பெரிய இறைச்சிக் கடையாகவும் மிகப்பெரிய பிரேத அறையாகவும் மாறியது. அந்நாள்களில் அப்பகுதிக்கு விஜயம் செய்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் தென்னாசியப் பொறுப்பதிகாரி தனது சேவைக் காலத்தில் தான் கண்ட மிக மோசமான நரகம் அதுவென்று சித்திரித்தார்.
அந்த நரகத்தில் உண்பதற்கு அரிசியும், பருப்பும், மாவும், உப்பும்தான் இருந்தன. மிளகாய், வெங்காயம், தேங்காய், புளி போன்றன கிடைக்கவில்லை. ஒரு பால்மாப்பெட்டி ஆறாயிரம் ரூபாய். ஒரு தேங்காய் 3000 ரூபாய், ஒரு பச்சை மிளகாய் 100 ரூபாய், ஒரு கிலோ சிறுமீன் 2000 ரூபாய். ஆனால், ஒரு கணினி 1000 ரூபாய். ஒரு பவுன் தங்கம் 1000 ரூபாய். இவையெல்லாவற்றையும்விட மிக மலிவாயிருந்தது மனித உயிர்.

 உலக உணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட நிவாரணப் பொதியிலும், இந்திய அரசாங்கம் வழங்கிய நிவாரணப் பொதியிலு மிருந்த பொருள்களை வைத்துச் சமைத்த உணவுகளையே பெரும்பாலான அகதிகள் உண்டனர்.

அகதிகளுக்கு உணவு வழங்குவதற்காக கஞ்சிக்கொட்டில்கள் உருவாக்கப் பட்டன. இக்கஞ்சியில் தேங்காய்ப்பால் சேக்கப்படவில்லை. அரிசியை நீரில் அவித்து அதில் 2 பால்மா பக்கெற்றுக்களைப் போட்டு, கஞ்சி தயாரிக்கப்பட்டது. அது முள்ளிவாய்க்கால் கஞ்சி என்று அழைக்கப்பட்டது. கஞ்சிக் கொட்டில்களின் முன் அதிகாலையிலிருந்து சனங்கள் வரிசையாக நிற்பார்கள். அங்கேயும் எறிகணைகள் விழும். குருதி தெறித்துக் கஞ்சிக்குள் கலக்கும். ஆனால் எறிகணையின் புகை அடங்கியதும் பிணங்களையும், காயப்பட்டவர்களையும் விலத்திக்கொண்டு வரிசை மறுபடியும் நகரும்.

கஞ்சியைத்தவிர வெறும் கோதுமை மாவையும், சீனியையும் சேர்த்துச் செய்யப்பட்ட வாய்ப்பன்கள், இந்திய நிவாரணத்தில் கிடைத்த பருப்பை அரைத்துச் சுட்ட, வெங்காயம், காரம் இல்லாத வடைகள் போன்றன உணவாகின. நிவாரணப்பருப்பைப் பொரித்து சாப்பிட்டது முண்டு. அவித்துக் குடித்ததுமுண்டு. தேங்காய்ப் பாலுக்கு பதிலாக சோறு வடித்த கஞ்சியைக் கறிக்குள் விட்டதுண்டு. பழப்புளிக்குப் பதிலாக புளியமிலையை அவித்து அரைத்து கறிக்குள் சேர்த்ததுமுண்டு.

அந்த நரகத்தில் கழிப்பறைகள் இருக்கவில்லை. மலம் கழிக்க இடமில்லாததால் பெண்கள் சாப்பிடுவதைக் குறைத்துக்கொண்டார்கள். அல்லது இரவில் கடற்கரைக்குப் போனார்கள்.சிலர் மலத்தை பொலித்தீன் பைகளில் கழித்து அப்பையை ஆண்களிடம் கொடுத்து கடலில் வீசுவார்கள். புத்திசாலிகளான சிலர் வேட்டியின் இரு கரைகளையும் மடித்துத் தைத்து அதற்குள் தடிகளை விட்டு அதை ஒரு பதாகை போலாக்கி அதைக் கடல் மண்ணில் புதைத்து ஒரு மறைப்பை உருவாக்கி அந்த மறைவில் மலம் கழித்தார்கள். ஒரு யுகமுடிவில் வங்கக்கடல் ஒரு மலக்கடலாக மாறியது. வன்னியில் வேலை செய்த ஓர் உள்ளுர் ஐ.நா.அதிகாரி அதை உலகின் மிக நீண்ட கழிப்பறை என்று வர்ணித்தார். கடலில் கழிக்கப்பட்ட மலம் அதில் கரைந்து கடற்கரை நீட்டுக்கும் மஞ்சள் நிறத்தில் சரிகை வேலைப்பாடு போல படை படையாகப் படிந்து கிடக்கும். அதில் மொய்த்த இலையான்கள் (ஈக்கள்) கரையில் விற்கப்படும் மீன்களிலும் மொய்க்கும். எனினும் அந்த மீனின் விலை ஒரு கிலோ 2000 அல்லது 3000 ரூபாய்.

மரணமும் பயமும் தோல்வியும் காயங்களும், இலையான்களும் பெருகிய காலம் அது. அந்நரகநாள்கள் மே18-ல் முடிவுக்கு வந்தன. ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டம் ஒரு இனப்படுகொலையின் மூலம் நசுக்கப்பட்டது. ஓர் ஆயுதப்போராட்டம் இனப்படுகொலை மூலம் நசுக்கப்பட்டபோது உலகின் பெரும் பாலான நாடுகள் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தன.

அவ்வாயுதப் போராட்டம் ஒரு விளைவுதான்; காரணமல்ல. இன ஒடுக்கு முறையே அதற்குக் காரணம். ஒடுக்கும் முறையானது சக்திமிக்க நாடுகளின் ஆசீர்வாதத்தோடு ஒரு விளைவைத் தோற்கடித்த இடம்தான் முள்ளிவாய்க்கால். அதாவது காரணம் அப்படியே இருக்கிறது. விளைவுதான் அரங்கிலிருந்து அகற்றப்பட்டது என்பதனால் 2009திற்குப் பின்னிருந்து காரணமானது, அதாவது ஒடுக்குமுறையானது எதிர்ப்பேதுமின்றி முன்னேறி வருகிறது. அதுதான் கட்டமைப்புசார் இனப்படுகொலை. அரசின் கட்டமைக்கப்பட்ட உபகரணங்களான அமைச்சுகளும், திணைக்களங்களும் இன அழிப்பைச் செய்கின்றன. குறிப்பாக மத்திய அரசாங்கத்தின் கீழ் வரும் வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கடற்றொழில் திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம், உல்லாசப்பயணத்துறைத் திணைக் களம், தொல்லியற் திணைக்களம் போன்ற எல்லாத் திணைக்களங்களும் யுத்தத்தை வேறு வழிகளில் தொடர்கின்றன. நில அபகரிப்பு, வன அபகரிப்பு, கடல்படு திரவியங்கள் அபகரிப்பு, மகாவலி எல் வலயத்திட்டம் போன்ற பல வடிவங்களில் யுத்தம் தொடர்கின்றது.

ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை பயங்கரவாதம் என்றுகூறி ஓர் இனப்படுகொலை மூலம் தோற்கடிப்பதற்கு உதவிய நாடுகள் யாவும் அப்போராட்டத்திற்கு மூலகாரணமான இனஒடுக்குமுறையைத் தடுக்கத் தவறிவிட்டன. பதிலாக அந்த ஒடுக்குமுறையைத் தொடரும் அரசுக்கட்டமைப்பைப் பலப்படுத்திப் பாதுகாத்து வருகின்றன. ஓர் இனப்படுகொலையின் மூலம் நசுக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் உலக சமூகத்திடம் கேட்டது அவ்வினப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியே. ஆனால் உலகசமூகம் ஐ.நா-வில் வைத்து வழங்கியது நிலைமாறுகால நீதியை. நிலைமாறுகால நீதியானது தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் ஆகிய மூன்று தரப்பையும் ஒரே பெட்டிக்குள் வைத்துப் பார்க்கிறது. 2015 செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐ.நா  தீர்மானத்தில் இலங்கை அரசாங்கம் நிலைமாறுகால நீதியை ஸ்தாபிப்பதற்குரிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டது. ஆனால் அதற்குத் தேவையான கட்டமைப்புசார் மாற்றங்களைச் செய்யத்தவறி விட்டது என்பதனை பேராசிரியர் ஜெயதேவ உயாங்கொட கூறுகின்றார்.

அவ்வாறு கட்டமைப்புசார் மாற்றங்களைச் செய்யத் தேவையான அரசியல் திடசித்தம் ரணிலிடமும் இல்லை மைத்திரியிடமும் இல்லை. இவ்வாறு கட்டமைப்புசார் மாற்றங்கள் செய்யப் படாத ஒரு பின்னணிக்குள் யுத்தவெற்றி வாதமானது தாமரைமொட்டுச் சின்னத்தின்கீழ் தேர்தலில் வெற்றிபெற்றது. இனவாதத்தின் 2009திற்குப் பிந்திய வடிவமே யுத்தவெற்றிவாதம். அதன் விளைவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட ஆட்சிக்குழப்பம். அவ்வாட்சிக் குழப்பத்தோடு இலங்கைத்தீவின் அரசாங்கம் இரண்டு தலைவர்களுக்கிடையே பிளவுண்டு விட்டது. அதோடு அடிப்படை மாற்றங்களைச் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் இருக்கவேண்டிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை இழக்கப்பட்டு விட்டது. அவ்வாறு அரசாங்கம் இரண்டாகியதன் விளைவாக நிலைமாறுகாலநீதி அநாதையாகி விட்டது. அதுமட்டுமல்ல, கடந்த உயிர்த்த ஞாயிற்றுத் தினத்தில் நடந்த படுகொலைகளுக்கும் இரண்டாகப் பிளவுண்டிருக்கும் அரசாங்கமே காரணம்.
நிலைமாறுகாலநீதி எனப்படுவது சாராம்சத்தில் பொறுப்புக்கூறல்தான். பழைய யுத்தத்திற்குப் பொறுப்புக்கூறத் தயாரற்ற ஓர் அரசாங்கம் ஈஸ்டர் குண்டுவெடிப்புகளோடு ஒரு புதிய யுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கடந்த பத்தாண்டுகளாகத் திரைமறைவில் நின்ற படைத்தரப்பு இப்பொழுது தெருவிற்கு வந்துவிட்டது. ஓர் அரையுத்தச்சூழல் நாட்டில் ஏற்பட்டிருக்கிறது.

நிலைமாறுகால நீதியின்கீழ் அரசாங்கம் ஒப்புக்கொண்ட அடிப்படையான பொறுப்புகளைக்கூட அது நிறைவேற்றவில்லை. இனப்பிரச்னைக்குத் தீர்வையும் உள்ளடக்கிய ஒரு புதிய யாப்பை (அரசியல்சாசனம்) உருவாக்க வில்லை. அதை உருவாக்கத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் இப்பொழுது இல்லை. தமிழ் மக்களின் பிரதிநிதி களாவுள்ள கூட்டமைப்பு நிலைமாறுகால நீதியை ஏற்றுக்கொள்கிறது. அது இனப்பிரச்னைக்கான தீர்வை யாப்புத் திருத்தமாகச் சுருக்கிப் பார்க்கிறது. ஆனால், புதிய யாப்பு, கூட்டமைப்பு கண்ட கனவாகிவிட்டது.

பாதுகாப்புக்கொள்கை மாறவில்லை. எல்லா அமைச்சுகளைவிடவும் பாதுகாப்பு அமைச்சுக்கே அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. ஐ.நா கேட்டது போல ராணுவமய நீக்கம் நிகழவில்லை. அதனால்தான் ஜிகாத்திற்கு எதிராக உடனடியாக ஒரு யுத்தச் சூழலை உருவாக்க முடிந்தது. ஒரு முழுநிறைவான சிவில் சமூகத்தை இவ்வளவு விரைவாக  யுத்தமயப்படுத்த முடியுமா? பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவில்லை. அது நீக்கப்படாதவரை அரசியல் கைதிகளுக்கு விடுதலையில்லை.

உயர்பாதுகாப்பு வலயங்கள் குறைக்கப் படவில்லை. அவை குறைக்கப்படாதவரை படைத்தரப்பு காணிகளை விடுவிக்காது. எனவே காணிக்காகப் போராடும் மக்களுக்கும் தீர்வில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியுமில்லை, நிவாரணமுமில்லை. அவர்களுக்கு நீதி வழங்குவதென்றால் காணாமலாக்கியவர்களை விசாரித்துத் தண்டிக்க வேண்டும். ஆனால் காணாமலாக்கியவர்கள் என்று குற்றஞ்சாட்டப்படுவோர் நாட்டின் பாதுகாப்புக் கட்டமைப்பில் மிக உயர் பதவிகளை வகிக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் - பத்தாண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கிறது ஈழம்?

தமிழ் மக்கள் கேட்டது பன்னாட்டு விசாரணையை. ஐ.நா பரிந்துரைத்தது கலப்பு விசாரணைப் பொறிமுறையை. ஆனால் அரசாங்கம் ஐ.நா-வில் ஒப்புக் கொண்டதை பின்னர் மறுதலித்து விட்டது. அது உள்நாட்டு நீதிப் பொறிமுறையே போதும் என்று கூறுகின்றது. குற்றஞ்சாட்டப்படும் தரப்பே எப்படி நீதிபதியாக இருக்கலாமென்று தமிழ்மக்கள் கேட்கிறார்கள். இதற்கு ஆகப்பிந்திய உதாரணம் வவுணதீவுச் சம்பவம். கிழக்கில் ஒதுக்குப்புறமாகவுள்ள வவுணதீவு சோதனைச் சாவடியில் இரண்டு பொலிசார் கொல்லப் பட்டார்கள். இதில் சந்தேகத்தின் பேரில் முன்னாள் புலிகள் இயக்கத்தவர்கள் கைதுசெய்யப் பட்டார்கள். அவர்களில் ஒருவர் ஐந்து மாதங்களாகச் சிறையிலிருக்கிறார். ஆனால் அத்தாக்குதலைச் செய்தது ஜிகாத் அமைப்பேயென்று இப்பொழுது தெரியவந்திருக்கிறது. யாரோ கொலையைச் செய்ய, முன்னாள் இயக்கத்தவர்கள் பிடிக்கப் படுகிறார்கள்.

புனர்வாழ்வு ஒரு தண்டனையல்ல வென்று நீதிமன்றம் கூறுகின்றது. இலங்கைத்தீவில் அதிகம் சந்தேகிக்கப்படும் ஆட்களாகவும் எளிதில் ஆபத்துக்குள்ளாகக்கூடிய ஆட்களாகவும் முன்னாள் இயக்கத் தவர்கள் காணப்படுகிறார்கள். அவர்களுக்கு சொந்த சமூகதிற்குள்ளும் அரவணைப்பில்லை. சாதாரண சனங்கள் ஒன்றில் அவர்களை நெருங்க பயப்படுகிறார்கள். அல்லது அவர்களை அரச புலனாய்வுத் துறையின் ஆட்கள் என்று சந்தேகிக்கிறார்கள். இதுதான் நிலைமாறுகால நீதியின் ஆகப்பிந்திய நிலை.

பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் ஏறக்குறைய 85,000 உண்டு. இவற்றிற்கு உதவுவதற்கு உரிய பொறிமுறை எதுவும் இல்லை. அவர்களுக்கு உதவி செய்வது போல வரும்  நுண்கடன் நிதி நிறுவனங்கள் குடும்பத் தலைவிகளைக் கடனாளிகளாக்கி, தற்கொலை செய்யத் தூண்டு கின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதற்கு உரிய பொறிமுறை  எதுவும் இல்லை. அரசாங்கம் அவர்களுக்குக் கொடுப்பது மூவாயிரம் ரூபாய்க்கும் குறைவே. அது ஒரு பிச்சைக் காசு. ஆனால், புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் உதவுகின்றன.

கடந்த நான்காண்டுகளாகத் தமிழ் மக்களுக்கு ஒப்பீட்டளவில் அதிகரித்த ஜனநாயகவெளி ஒன்று கிடைத்தது. நிச்சயமற்ற இவ்வெளிக்குள் அதிகதொகை அரசியற் செயற்பாட்டாளர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் மேலெழுந்தார்கள். ஆனால் ஈஸ்டர் தாக்குதல்களோடு நாடு அரை யுத்தச் சூழலுக்குள் வந்துவிட்டது. சோதனைச் சாவடிகளும், வீதித்தடைகளும் தோன்றிவிட்டன. கிராமங்கள்  சுற்றி வளைக்கப்படுகின்றன. இது ஜிகாத்திற்கு எதிரானது என்று கூறப்பட்டாலும் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் களையும் ஒடுக்க இது பயன்படுத்தப்படலாம். குறிப்பாக பத்தாவது மே பதினெட்டைத் தடுக்க இது உதவும். இவ்வாறாக, கடந்த பத்தாண்டுகளில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்று கேட்டால், ஓர் ஆகப்பிந்திய மாற்றத்தை இங்கு குறிப்பிடலாம். அது எந்த ஒரு மாற்றமும் நடக்கவில்லை யென்பதனைக் குறியீடாக உணர்த்துகிறது.

அது என்னவெனில், படைத்தரப்பின் யுத்தவெற்றிகளின் காட்சி அறையாகக் காணப்படும் ஆனையிறவில் மறுபடியும் முளைத்திருக்கும் சோதனைச் சாவடியில் கட்டப்பட்டிருக்கும் ஒரு பதாகைதான்!

அப்பதாகையில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது. “பாதுகாப்புக் காரணங்களுக்காக சோதனை செய்வதையிட்டு மன்னிப்புக் கோருகிறோம்.”

- ஓவியம்: ஹாசிப்கான்