Published:Updated:

90கே முபாரக்கின் காதல் அலப்பறைகள்! #MyVikatan

காதல்

கைப்பிள்ளை, நாய் சேகர், ஸ்டைல் பாண்டி, வண்டு முருகன் போன்ற வடிவேலு கதாபாத்திரங்களின் ஒட்டுமொத்த உருவம் முபாரக். நட்புக்காக எதுவும் செய்வான் என்பதில் தொடங்கி, குடித்துவிட்டு சலம்புவது, காதலில் உருகுவது என எல்லாவிதமான சேட்டைகளிலும் ’அவன் பாணியில்’ உச்சத்தைத் தொடக்கூடியவன்!

90கே முபாரக்கின் காதல் அலப்பறைகள்! #MyVikatan

கைப்பிள்ளை, நாய் சேகர், ஸ்டைல் பாண்டி, வண்டு முருகன் போன்ற வடிவேலு கதாபாத்திரங்களின் ஒட்டுமொத்த உருவம் முபாரக். நட்புக்காக எதுவும் செய்வான் என்பதில் தொடங்கி, குடித்துவிட்டு சலம்புவது, காதலில் உருகுவது என எல்லாவிதமான சேட்டைகளிலும் ’அவன் பாணியில்’ உச்சத்தைத் தொடக்கூடியவன்!

Published:Updated:
காதல்
’சூது கவ்வும்’ பட கிட் நாப் விதிகளை போல, ’ரிஸ்க் இல்லாமல் ரஸ்க்’ சாப்பிடும் வழிகளைக் கொண்டவை முபாரக்கின் ஒருதலை காதல் லூட்டிகள்.

முபாரக்கின் சாகசங்களைக் குறிப்பிடாமல் எங்களின் பால்ய நினைவுகள் எவையும் முழுமை பெறாது!

ஊரின் அனைத்து கேங்குகளுடனும் தொடர்பில் இருந்த முபாரக் எங்களைவிட வயதில் மூத்தவன். ’ரொம்பவும் பொல்லாத’ ராஜா ரெக்கார்டிங் சென்ட்டர் கேங்கின் பிரதான மற்றும் நிரந்தர உறுப்பினன்!

கைப்பிள்ளை, நாய் சேகர், ஸ்டைல் பாண்டி, வண்டு முருகன் போன்ற வடிவேலு கதாபாத்திரங்களின் ஒட்டுமொத்த உருவம் முபாரக். நட்புக்காக எதுவும் செய்வான் என்பதில் தொடங்கி, குடித்துவிட்டு சலம்புவது, காதலில் உருகுவது என எல்லாவிதமான சேட்டைகளிலும் ’அவன் பாணியில்’ உச்சத்தைத் தொடக்கூடியவன்!

அப்பாவின் அறிவுரைகளை மரியாதை நிமித்தமாகக்கூட நின்று கேட்காத முபாரக் மதிப்பது, ரசிப்பது எல்லாமே இளையராஜாவின் இசை ஒன்றைத்தான்! இளையராஜாவின் பாடல்களிலும், இளையராஜாவே பாடிய பாடல்களுக்கு அவன் ஆயுள்கால அடிமை! வெளிவராத படங்கள், வெளிவந்த படங்களில் இடம்பெறாத இளையராஜா பாடிய பாடல்கள் என அனைத்தும் அவனுக்கு அத்துப்படி!

முபாரக்கின் அன்றைய காதல் சாகசங்கள் இன்றும் பிஎச்டி ஆய்வுக்கு உரியவை! சைக்கிளை ஓட்டியபடி தலையில் ரோஜாப்பூவை செருகுவது, மனதுக்கு பிடித்தவளின் பார்வையை கவர வேகமாகக் கிளம்பும் பேருந்துக்கு முன்னால் சைக்கிளில் பாய்ந்து சடன் பிரேக் போடுவது என இன்றைய 20கே ஸ்மார்ட் போன் லவ் கிட்ஸுகளின் வயிற்றில் புளியைக் கரைக்க கூடியவை!

சைட் அடிக்கும் பையன் சைக்கிள் காரியரில் அமர்ந்திருக்க வேண்டும், முழுக்கை சட்டையை முக்கால் கை அளவுக்குத்தான் மடித்துவிட வேண்டும், மழுங்க ஷேவ் செய்து அழுந்த படிந்து தலை சீவுவதை விட நான்கு நாள் தாடியுடன் கலைந்த தலையுடன் இருப்பதே ஃபிகர்களுக்கு பிடிக்கும் என்பது போன்ற பல ஆலோசனைகளை அவ்வப்போது கேட்காமலேயே வழங்குவான்!

டைலருக்கு டீ சிகரெட் வாங்கிக் கொடுத்து நள்ளிரவில் நச்சரித்து பிரத்யேகமாகத் தைத்து வாங்கிய ஏகப்பட்ட ப்ளீட்ஸ் வைத்த பேகி பேண்ட், லூஸ் ஷர்ட் சகிதம் அதிகாலையிலேயே அவன் அடிக்கும் லூட்டிகளினால் அதிரும் பெண்களில் யாராவது ஒருத்தி அவனை பார்ப்பது தெரிந்தாலே போதும். அது பய பார்வையா அல்லது கோப பார்வையா என்றெல்லாம் நாம் ஆராய்வதற்கு முன்னரே அவனுக்கு அவள் மீது லவ் வந்துவிடும்... அவளைக் கவர, அவனது இன்னபிற அலப்பறைகள் தொடரும்!

’சூது கவ்வும்’ பட கிட் நாப் விதிகளை போல, ’ரிஸ்க் இல்லாமல் ரஸ்க்’ சாப்பிடும் வழிகளைக் கொண்டவை முபாரக்கின் ஒருதலை காதல் லூட்டிகள். எல்லை மீறி தர்ம அடிகள் விழும் சூழல் ஏற்பட்டுவிட்டால் அவனது காதலுக்கு அவனே ’பிரேக் அப்’ அறிவித்துவிட்டு, முதலிலிருந்து தொடங்கி விடுவான்!

காதல்
காதல்
"அண்ணன் நல்லவரு... வல்லவரு அப்படின்னு நாலு வார்த்தை நச்சுன்னு சொல்லி அவகிட்ட கொடு! இதை படிச்சிட்டு ஓடுற ரிக்சாவிலிருந்து அவ இறங்கி வரணும்... இல்ல…இல்ல... அவ வருவா!"

ஒரு சில அப்பா, அண்ணன், சித்தாப்பாக்களின் சைக்கிள் அல்லது பைக்குகளைத் தவிர்த்து, அன்றைய பள்ளி மற்றும் கல்லூரி போக்குவரத்துக் குத்தகை முழுவதையும் சைக்கிள் ரிக்சாக்கள் ஆக்கிரமித்திருந்த காலம் அது. சின்ன கிளாஸ், பெரிய கிளாஸ் என ஒவ்வொரு ரிக்சாக்காரரும் இரண்டு ட்ரிப் அடிப்பார்கள்.

அப்படியான ஒரு பெரிய கிளாஸ் ரிக்சாவில் வரும் ஒரு பெண்பிள்ளை முபாரக்கின் ’உள்ளம் கவர்’ தெரு சாகசங்களை திரும்பிப் பார்த்ததுடன் மட்டுமல்லாமல், விளையாட்டாகச் சிரித்தும்விட, கற்பனை காதல் அம்பு 5G வேகத்தில் அவனது இதயத்தில் இறங்கிவிட்டது!

அந்த ரிக்சா ஓட்டுநரும் முபாரக்கை போலவே ’இளவயது குடிமகன்’ என்பதும் கூடுதல் அனுகூலமாகிவிட, ’குடி’ வாங்கிக் கொடுத்தும் சிகரெட்டை பகிர்ந்துகொண்டும் அந்த ரிக்சாக்கார இளைஞனை காதல் தூதனாக பதவி அமர்த்திக்கொண்டான்.

வார இறுதி ’பார் பார்ட்டி’களில் எங்கள் ஊரின் அந்தக் கால இளவட்டங்களின் சின்ன சின்ன ஆசைகளான ’சிங்கப்பூர் மார்ட்டின் சட்டை’, ’ரெயின்போ பெல்ட்’ போன்ற பொன் முடிப்புகளின் மூலம் ரிக்சாக்கார இளைஞனுக்கு மரியாதை செய்வான் முபாரக்...

அவற்றின் மேல் அவன் உருகி உருகி எழுதிய காதல் கடிதங்கள்!

"அண்ணன் நல்லவரு... வல்லவரு அப்படின்னு நாலு வார்த்தை நச்சுன்னு சொல்லி அவகிட்ட கொடு! இதை படிச்சிட்டு ஓடுற ரிக்சாவிலிருந்து அவ இறங்கி வரணும்... இல்ல…இல்ல... அவ வருவா!"

வாரங்கள் ஓடின. நாளுக்கு ஒரு பேண்ட் சட்டை என ரிக்சாக்கார இளைஞனின் வாழ்க்கை முறை மாறியதே தவிர, அந்தப்பெண் முபாரக்கை திரும்பிக்கூடப் பார்க்கவில்லை!

’ஒரு ஜீவன் அழைத்தது’ பாடலுக்கு கண்கள் மூடி உருகியபடி தம் இழுத்துக்கொண்டிருந்த முபாரக்கிடம் ரிக்சாக்கார இளைஞன் இழைத்த துரோகத்துக்கு பவுடர், லிப்ஸ்டிக் எல்லாம் பூசி நீட்டி முழங்கினோம்.

ஒரு நாள் மாலை எங்கள் தெருமுனை ஹனீஸ் டீ கடையில் குடியின் உச்சத்தில் சலம்பிக்கொண்டிருந்தான் அந்த ரிக்சாக்கார இளைஞன்...

"உனக்கு எத்தன தடவை ஓசி டீ கொடுக்கிறது படவா... காசை வை! டீ குடி!!"

தண்ணீரும் பால் பொடியும் கலந்த ’பசும்பாலை’ டிக்காஷனில் கலந்தபடி பேசும் ஹனீஸ் நானாவையும், சமோசா வடைக்காக வெட்டி அடுக்கப்பட்டிருந்த பழைய தினசரி செய்தித்தாள் துண்டுகளையும் சிறிது நேரம் முறைத்தவன், தன் ரிக்சாவுக்கு திரும்பி இருக்கையை மேலே தூக்கி பெட்டிக்குள் கை விட்டான்...

" தோ... ரெண்டு மூனு கிலோ தேறும்... இதை சமோசா மடிக்க வச்சிக்கிட்டு எனக்கு டீ கொடு!"

அவன் போட்டது அனைத்தும் முபாரக் எழுதிய காதல் கடிதங்கள்!

ஒரு மாபெரும் தெரு சண்டைக்கு கரு கிடைத்துவிட்ட மகிழ்ச்சியுடன் ராஜா ரெக்கார்டிங் சென்ட்டர் நோக்கி சைக்கிள்களை திருப்பினோம்!

’ஒரு ஜீவன் அழைத்தது’ பாடலுக்கு கண்கள் மூடி உருகியபடி தம் இழுத்துக்கொண்டிருந்த முபாரக்கிடம் ரிக்சாக்கார இளைஞன் இழைத்த துரோகத்துக்கு பவுடர், லிப்ஸ்டிக் எல்லாம் பூசி நீட்டி முழங்கினோம்.

ராகதேவனின் பாடல் முடியும்வரை முகத்தில் எந்த சலனத்தையும் காட்டாமல், கண்கள் மூடி நாங்கள் பேசியதை கேட்டுக்கொண்டிருந்தவன்,

"அட விடுங்கடா! நம்மால, இந்த முபாரக்கால அந்த பையன் சட்டை பேண்ட்டுன்னு வாழ்ந்தான்ல...."

’ஜஸ்ட் லைக் தட்’ - அந்த காதல் பக்கத்தையும் திருப்பியவன், சட்டையில் ஒட்டியிருந்த சிகரெட் சாம்பல் துணுக்குகளை உதறியபடி போயே போய்விட்டான்!

காதல்
காதல்
இந்தியா என்றாலே ஹிந்திதான் என இன்றைக்கும் நம்பிக்கொண்டிருக்கும் சில ஐரோப்பியர்களைப் போலவே, ஐரோப்பா என்றாலே இங்கிலீஷ் மட்டும்தான் என நம்பும் அறிவு ஜீவி கூட்டத்தைச் சேர்ந்தவன் முபாரக்.

மிக சின்ன வயதிலிருந்தே கண்ணில் கண்டது அனைத்தையும் படிக்கும் வழக்கம் கொண்டவன் நான். ஆங்கிலமும் விதிவிலக்கல்ல! ஆர்ச்சி காமிக்ஸ் தொடங்கி மார்க் ட்வைனின் டாம் சாயர் வரை எங்கள் ஊரின் பொதுநூலகத்தில் கிடைத்த ஆங்கிலப் புத்தகங்களும் அவ்வப்போது என் சைக்கிள் காரியரில் அமர்ந்திருக்கும். புரிகிறதோ இல்லையோ, படிப்பதில் மட்டுமே ஆர்வம் !

ஆங்கிலோ இந்தியர்களை போலவே, பிரெஞ்சு காலனியாதிக்க புதுவை மாநிலத்திலும் சில பிரெஞ்சு வம்சாவழியினர் சுதந்திரத்துக்கு பின்னரும் இங்கேயே தங்கி விட்டனர். இவர்கள் ’சொல்தாக்கள்’ என்ற பொதுப்பெயரில் அழைக்கப்பட்டனர்.

சொல்தா குடும்பத்துப் பெண் ஒருத்தி முபாரக்கின் காதல் பார்வையில் சிக்கியது மட்டுமல்லாமல் அவனுடன் சற்றே சகஜமாக பேசவும் செய்ய, அவனது ஸ்டீரியோ ரெக்கார்டரில் இளையராஜா, ’மாதுளம் கனியே... நல்ல மலர்வன குயிலே’ எனத் திரும்பத் திரும்ப பாடிக்கொண்டிருந்த காலகட்டம் அது…

நான் அவ்வப்போது கொண்டு வரும் ஆங்கில நூல்களையெல்லாம் கண்டு என் ஆங்கிலப் புலமையின்மீது மாபெரும் நம்பிக்கை வைத்துவிட்ட முபாரக், சொல்தா பெண்ணுக்கு கொடுப்பதற்காக ராஜா ரெக்கார்டிங் சென்ட்டரில் வைத்து என்னிடம் ’இங்கிலீஸ் கவிதை’ எழுதிக் கேட்டான்.

கவிதை எழுதும் அளவுக்கெல்லாம் என் ஆங்கிலப் புலமை பூர்த்தியாகவில்லை என்று சொல்ல தன்மானம் தடுத்ததால், அந்தப்பெண்ணின் பூர்வீகம் பிரெஞ்சு என்ற உண்மையை விளக்க முயன்றேன்...

முடியவில்லை... இந்தியா என்றாலே ஹிந்திதான் என இன்றைக்கும் நம்பிக்கொண்டிருக்கும் சில ஐரோப்பியர்களைப் போலவே, ஐரோப்பா என்றாலே இங்கிலீஷ் மட்டும்தான் என நம்பும் அறிவு ஜீவி கூட்டத்தைச் சேர்ந்தவன் முபாரக். மேலும், முபாரக் கேட்டு மறுத்துவிட்டால் அதன் பின்விளைவுகள் பெரிதாக இருக்கும். நடுத்தெருவில் நல்ல நல்ல வார்த்தைகளால் உரக்க திட்டிவிட்டு, "சாரிடா! மப்புல திட்டிட்டேன்" என எஸ்கேப்பாகி விடுவான்!

"தோ... தலைவர் பாட்டு இன்னா சூப்பரா இருக்கு... அது போல எழுதிக் கொடு!"

’நினைவெல்லாம் நித்யா’ படத்தின் ’பனிவிழும் மலர்வனம்... உன் பார்வை ஒரு வரம்...’ பாடல் ரெக்கார்ட் ஆகிக்கொண்டிருந்தது...

எனக்குள் சட்டென ஒரு அறிவுப்பொறி! அந்த பாடல் வரிகளை மனதில் இருத்திக்கொண்டேன்.

"The snow falling garden

with your presence becomes Aden"

என்பதாக அந்தப் பாடலை எனக்கு புரிந்த அளவுக்கு ஆங்கிலத்தில் எதுகை மோனையாக மொழிபெயர்த்து, அடுத்த நாளே முபாரக்கிடம் நீட்டினேன்.

"டேய்... சூப்பர்டா... நான் இந்த அளவுக்கு எதிர்பார்க்கல... எனக்கு முழுசா புரியல... ஆனா, அவளுக்கு புரியும் !"

சமோசா, டீ, கொத்து பரோட்டா என என்னை உபசரித்தது மட்டுமல்லாமல் அடுத்த சில நாட்களுக்கு என் ஆங்கிலப் புலமையை நண்பர்கள் அனைவரிடமும் சொல்லி சிலாகித்துக்கொண்டிருந்தான்.

"நீ சொன்னது சரிதான்டா... அவளுக்கு இங்கிலீஸ் தெரியாதாம்..."

நல்ல நாள், நேரமெல்லாம் பார்த்து கவிதையைக் கொடுத்து திரும்பியவன் சோகமாக கூறினான்.

சில மாதங்கள் ஒரு மாதிரியாக போய்க்கொண்டிருந்த அந்த நட்பும் அவள் மேல்படிப்புக்காக பிரான்ஸ் சென்றதும் நின்றுவிட்டது. ’ருசி கண்ட பூனை’ படத்தின் ’அன்பு முகம் தந்த சுகம்’ பாடலின் ’நானொரு பாதையில் நீயொரு பாதையில் நடந்துவிட்டோம் விதி வழியே...’ வரிகள் மீண்டும் மீண்டும் ரெக்கார்ட் செய்யப்பட்ட கேசட்டை மீண்டும் மீண்டும் ரீவைன்ட் செய்து சில நாட்கள் கேட்டுவிட்டு அந்த காதலையும் கடந்துவிட்டான் முபாரக்!

சில வருடங்களுக்கு முன்னர் முபாரக்கை சந்தித்தபோது கடந்த காலத்தின் காதல் பிரதாபங்களை கதைக்கும் சந்தர்ப்பம் வாய்க்க, நான் எழுதிய ’மொழிபெயர்ப்புக் கவிதை’யின் ஞாபகம் வந்தது!

ஸ்மார்ட் போன் செளகர்யத்தாலும் யூடியூப் புண்ணியத்தாலும் நினைவெல்லாம் நித்யா படத்தின் ’பனி விழும் மலர்வனம்’ பாடலை ஒலிக்கவிட்டேன்.

"முபாரக்... இந்த பாட்டு..."

"ஆமாடா...ராஜா ராஜாதான்!"

நான் நினைத்த கவிதையை பற்றி அவன் பேசவில்லை! அனுபவம் உணர்த்திய அத்தனை பக்குவங்களையும் மீறிக்கொண்டு என் தன்மானம் துருத்தி நின்றதால், அந்த பாடலை வைத்துத்தான் கவிதை எழுதினேன் என்பதை நானும் சொல்லவில்லை!

- காரை அக்பர்